கோலாலம்பூர்: தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைக்கு பெர்சே அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் முன்னாள் துணைத் தலைவர் வான் அகமட் வான் உமர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அசார் மற்றும் பிற தேர்தல் ஆணைய ஆணையர்கள் கடந்த காலத்தில் நம்பிக்கைக் கூட்டணிக்கு சார்பாக இருந்ததாகக் கூறி அவர்கள் பதவி விலக வேண்டும் என்று அவர் கூறினார்.
“பிரதமருடன் தேர்தல் ஆணையமும் பதவி விலக வேண்டும் என்ற அவரது (வான் அகமட்) முன்மொழிவு, தேர்தல் ஆணையத்தின் ஒருமைப்பாடு மீதான தாக்குதல் மட்டுமல்ல, மத்திய அரசியலமைப்பு மற்றும் நமது ஜனநாயகம் மீதான தாக்குதலும் கூட” என்று பெர்சே கூறியது.
தேர்தல் ஆணையத்தின் தலைவர் மற்றும் ஆணையர்களை மாமன்னர் அல்லது ஒரு தீர்ப்பாயத்தின் மூலம் மட்டுமே நீக்க முடியும் என்று அக்குழு கூறியது.
“அசார் மற்றும் பிற அரசு துறைத் தலைவர்களை பதவி விலகுமாறு வான் அகமட் அழைப்பு விடுப்பது நியாயமற்றது, அதேபோல் நம் தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் பதவி விலகும்படி அவர் கூறியுள்ளார். அவர்களின் பெயர்கள் அனைத்தையும் முன்மொழிந்த டாக்டர் மகாதீர் முகமட் பதவி விலகியதால் இவர்களும் விலக வேண்டும் என்று அவர் கூறுகிறார்” என்று அது குறிப்பிட்டுள்ளது.
முன்னதாக 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர், பெர்சே அப்போதைய தேர்தல் ஆணையத்தின் தலைவர் முகமட் ஹாஷிம் அப்துல்லா மற்றும் பிற ஆணையாளர்களை “பொது நம்பிக்கையை இழந்துவிட்டார்கள்” மற்றும் “தேர்தல் முறைகேடுகளுக்கு” உடந்தையாக இருந்தார்கள் என்ற அடிப்படையில் இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்தது.
அவர்களை அகற்ற ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் அப்போது சொன்னார்கள்.
ஹாஷிம் பதவி விலகிய பின்னர், மீதமுள்ள மற்ற தேசிய முன்னணி ஆணையர்கள் பதவி விலக வேண்டும் என்றும் பெர்சே கோரியது.