Home One Line P1 மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் இணையம் வழி வேலை கண்காட்சி

மனிதவள அமைச்சு ஏற்பாட்டில் இணையம் வழி வேலை கண்காட்சி

415
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மனிதவள அமைச்சின் முயற்சியில் பிப்ரவரி 23 முதல் பிப்ரவரி 26 வரை இணையவழி வேலைவாய்ப்புக் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்றைய சூழலில் வேலையிழந்து, வேலை கிடைக்காமல் தவிக்கும் மக்களின் தேவை அறிந்து இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

“பிப்ரவரி 23 முதல் 26 வரை இணையத்தில் இந்த ‘கார்னிவல் பெஞ்சானா கெர்ஜாயா’ நடைபெறும். நாடுதழுவிய நிலையில், ஏறத்தாழ 70 பன்னாட்டு நிறுவனங்கள் பங்கு கொள்ளும் இதில் 10,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உள்ளன. அந்தந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள், தாங்கள் வசிக்கும் மாநிலத்தில் உள்ள வேலை வாய்ப்புகளைத் தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம்,” என்று அது வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

கட்டுமானம், கல்வி, சுகாதாரம், கலை, பொழுதுபோக்கு, தங்கும் வசதி மற்றும் உணவுச் சேவை, போக்குவரத்து, நிதி மற்றும் காப்பீடு என பல துறை சார்ந்த வேலைவாய்ப்புகள் இடம்பெற்றுள்ளதாக அது மேலும் குறிப்பிட்டுள்ளது.

“வேலை வாய்ப்பிற்கான திறந்த நேர்காணல்கள் பிப்ரவரி 24 தொடங்கி பிப்ரவரி 26 வரை, 3 நாட்களுக்குத் தொடரும். நேர்முகத் தேர்வுகள் அனைத்தும் இணையம் வழி நடைபெறும். இதில் பங்கு கொண்டு வேலை வாய்ப்பைப் பெறவிரும்பும் அனைவரும் முதலில் careerfair.perkeso.gov.my எனும் முகவரியில் பதிந்து கொள்ள வேண்டும். கேட்கப்படும் தகவல்களை முழுமையாக வழங்க வேண்டும்,” என்று அது அவ்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

மனிதவள அமைச்சின், பெர்கேசோ ‘MYFutureJobs’வழி 2021- ஆம் ஆண்டு, மொத்தம் 14 வேலை வாய்ப்பிற்கான கண்காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், நாடு முழுவதும் 660 திறந்த நேர்காணல் அமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது.

பிப்ரவரி 25, மதியம் 2.30 மணிக்கு இந்த இணையவழி கண்காட்சியின் திறப்பு விழாவை, மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் அதிகாரப்பூர்வமாக திறந்து வைப்பார்.

இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு MYFutureJobs அல்லது பெர்கேசோவின் அகப்பக்கம் அல்லது 0192958289 / 01160573076/ 0102626763/ 0182524082 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பெர்கேசோ அதிகாரிகளை அணுகலாம்.