கோலாலம்பூர்: இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி பாடத்தில் அதிகமான ஆசிரியர்கள் இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் மொழித் துறையில் இளங்கலை கல்வி (ஐ.எஸ்.எம்.பி) உதவித்தொகை வழங்கப்படவில்லை என்று கல்வி அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.
ஐ.எஸ்.எம்.பி உதவித்தொகை இடைநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவைகளைத் திட்டமிடல் ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்று அது கூறியது.
“இந்த ஆண்டு, கல்வி அமைச்சு இடைநிலைப் பள்ளிகளின் தேவைகள் மற்றும் 2025-க்குள் நிரப்பப்பட வேண்டிய மொத்தம் 28 பாடங்களை கணித்துள்ளது.
“இடைநிலைப் பள்ளிகளில் தமிழ் மொழி பாடங்களில் ஆசிரியர்கள் அதிகமாக இருப்பதால் இந்த ஆண்டு தமிழ் மொழித் துறையில் ஐ.எஸ்.எம்.பி உதவித்தொகை வழங்கப்படவில்லை,” என்று அமைச்சகம் இன்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ஆங்கிலம், சீன, ஈபான், கடசான் மற்றும் டுசுன் உள்ளிட்ட 28 பாடங்களுக்கு ஐ.எஸ்.எம்.பி உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகையை மார்ச் 1 முதல் 2021 மார்ச் 31 வரை இயங்கலையில் விண்ணப்பிக்கலாம்.
இதைத் தொடர்ந்து, பலர் நேற்று தமிழ் மொழித் துறையில் உதவித்தொகைத் திட்டங்கள் இல்லாதது குறித்து கேள்வி எழுப்பினர். இது இந்த துறையில் இளங்கலை மாணவர்களை ஓரங்கட்டுவது போல் இருப்பதாகவும் கல்வி அமைச்சு விளக்கம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.