கோலாலம்பூர் : ஒரு காலத்தில் ஆஸ்ட்ரோ – மேக்சிஸ் உள்ளிட்ட மிகப்பெரிய வணிகக் குழுமங்களின் தலைமைச் செயல்முறை அதிகாரியாக வலம் வந்தவர் அகஸ்டஸ் ரால்ப் மார்ஷல் (படம்). கோடீஸ்வரர் ஆனந்த கிருஷ்ணனின் நெருங்கிய வாணிப சகாவாகக் கருதப்பட்டவர்.
ஆனால், அண்மைய சில ஆண்டுகளாக ஆனந்த கிருஷ்ணனின் வணிக நிறுவனங்களில் இருந்து ஒதுங்கி இருந்தார் ரால்ப்.
தற்போது மீண்டும் ஒரு முக்கிய பதவியை அவர் அலங்கரிக்கப் போகிறார். நாட்டில் விரைவில் அமுல்படுத்தப்படவிருக்கும் 5-ஜி தொழில் நுட்பத்தைக் கண்காணிக்க தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்ட ஒரு சிறப்பு நிறுவனம் அமைக்கப்படவிருக்கிறது.
இந்த நிறுவனத்தின் தலைவராக நிதி அமைச்சர் தெங்கு சாப்ருல் தெங்கு அப்துல் அசிஸ் செயல்படுவார். இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகத்தான் , ரால்ப் மார்ஷல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசாங்கமே முழு உரிமை கொண்டிருக்கும் இந்த நிறுவனம் நாடு முழுவதிலும் 5-ஜி தொழில்நுட்பத்தை அமுலாக்குவதோடு அந்தத் திட்டத்தை உருவாக்கும், உரிமை கொண்டிருக்கும், நிர்வகிக்கும் அதிகாரத்தைக் கொண்டிருக்கும்.
அடுத்த 10 ஆண்டுகளில் இந்த நிறுவனம் 5-ஜி அமுலாக்கத்திற்காக 15 பில்லியன் ரிங்கிட் தொகையை முதலீடு செய்யும்.