Home One Line P2 வாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு பிரிட்டன் தடை

வாவே நிறுவனத்தின் 5 ஜி தொழில்நுட்பத்திற்கு பிரிட்டன் தடை

785
0
SHARE
Ad

இலண்டன் : சீனாவின் வாவே நிறுவனம் (Huawei) பிரிட்டனில் 5ஜி அலைக்கற்றை தொழில்நுட்பத்தில் பங்கெடுப்பதற்கு அந்நாடு நேற்று செவ்வாய்க்கிழமை  தடைவிதித்தது.

இந்த ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்குப் பின்னர் பிரிட்டனில் இயங்கும் நிறுவனங்கள் வாவே நிறுவனத்தின் தொழில்நுட்பத்தையோ, கருவிகளையோ தங்களின் 5ஜி அலைக்கற்றைப் பயன்பாட்டுக்காக பயன்படுத்த முடியாது என பிரதமர் போரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் முடிவெடுத்தது.

வாவே மீதான இந்தத் தடையைச் செயல்படுத்த பிரிட்டனின் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 2.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைச் செலவழிக்க வேண்டியிருக்கும்.

#TamilSchoolmychoice

இந்த முடிவினால் 5ஜி அலைக்கற்றைத் தொழில்நுட்பம் பிரிட்டனில் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வர மேலும் 2 முதல் 3 ஆண்டுகள் பிடிக்கும் எனக் கணிக்கப்படுகிறது.

தங்களின் தொழில்நுட்பத்திலும் கருவிகளிலும் வாவே உற்பத்திப் பொருட்களை ஏற்கனவே பொருத்தியிருப்பவர்கள் அவற்றை அகற்ற வேண்டும். அகற்றுவதற்கான கால அவகாசம் அந்நிறுவனங்களுக்கு 2027-ஆம் ஆண்டு வரை வழங்கப்பட்டிருக்கிறது.

சீனாவிற்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் பதிலடி நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை அமெரிக்காவின் வணிகப் பங்காளித்துவ நாடு என்ற முறையில் ஹாங்காங் இதுவரையில் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்யும் உத்தரவை அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார்.

ஹாங்காங்கிற்கு எதிராக சீனா கையாண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்றும் அமெரிக்கா அறிவித்தது.

கோபத்தில் சீன அரசாங்கம்

பிரிட்டனின் முடிவுக்கு சீன அரசாங்கம் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தது. பிரிட்டனுக்கான சீனாவின் தூதர் லியூ சியாவ்மிங் பிரிட்டனின் முடிவை “ஏமாற்றமளிக்கும் தவறான முடிவு இது” எனச் சாடினார்.

சீனாவை எதிரி நாட்டைப் போல் நடத்தினால் பிரிட்டனும் பதிலடிகளைச் சந்திக்க வேண்டியதிருக்கும் என சீனா எச்சரித்தது.

அமெரிக்காவும், பிரிட்டனும் மேற்கொண்டிருக்கும் இந்த முடிவைத் தொடர்ந்து மற்ற ஐரோப்பிய நாடுகளும் வாவே நிறுவனத்தைத் தடைசெய்யும் முடிவை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய காலத்தில் கிடுகிடுவென வளர்ச்சி பெற்ற சீனா நிறுவனம் வாவே (Huawei). 5ஜி தொழில்நுட்பத்தைப் பல நாடுகளில் அறிமுகம் செய்ய ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வந்தது.

மலேசியா கூட, துன் மகாதீர் பிரதமராக இருந்த நேரத்தில் வாவே நிறுவனத்தை 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யப் பயன்படுத்துவோம் என அறிவித்தார்.

அமெரிக்காவோ, 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா, மற்ற நாடுகளின் மீது உளவு பார்க்கிறது எனத் தொடர்ந்து எச்சரித்து வந்தது. சீனாவோ மறுத்தது.

சீனாவுடனான வணிகப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை சீனாவுக்கு எதிராக விதிக்கத் தொடங்கியிருக்கிறது. கொவிட்-19 விவகாரத்திலும் சீனா மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தது.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதுபோல் கூடவே சேர்ந்து கொண்டது, ஹாங்காங் விவகாரம்! இதனால் பிரிட்டனும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்ப அமுலாக்கத்திலிருந்து வாவே நிறுவனம் கட்டம் கட்டமாக அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எடுத்து வருவதாக சில நாட்களுக்கு முன்னர் பிரிட்டனின் ஊடகங்கள் தெரிவித்தன.

பிரிட்டனின் 5ஜி கட்டமைப்பை நிர்மாணிக்கும் பணிகளில் பங்கெடுக்க வாவே நிறுவனத்திற்கு பிரிட்டன் ஏற்கனவே அனுமதி அளித்திருந்தது.

நேற்று செவ்வாய்க்கிழமை வாவே நிறுவனத்தை 5ஜி அமுலாக்கத்தில் இருந்து தடை செய்வதற்கான உத்தரவை பிரிட்டனின் அமைச்சரவை அறிவித்தது.

இந்தியாவும் சீனாவுக்கு எதிராக நடவடிக்கை

இந்தியாவும் சீனாவுடனான எல்லை மோதல்களைத் தொடர்ந்து வணிக எதிர்ப்புகளை இந்தியாவும் முடுக்கி விட்டிருக்கிறது. சீனாவின் குறுஞ்செயலிகளைத் தடை செய்திருக்கிறது.

சாலை மேம்பாட்டுக் குத்தகைகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருக்கிறார்.

இந்தியாவும் கடந்த ஆண்டில் 5 ஜி பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள வாவே நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. தற்போது சீன-இந்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து அந்த அனுமதிகள் தொடரப்படுமா என்பதும் சந்தேகம்தான்.

இந்தப் புதியத் திருப்பங்களால் 5ஜி தொழில்நுட்பத்தை சீனாவிடம் இருந்து பெற பல நாடுகள் தயங்குகின்றன. உளவு பார்க்கும் நாடு என்ற அமெரிக்காவின் தொடர் பிரச்சாரங்களால் பெரிய நிறுவனங்களும், பொதுமக்களும் கூட வாவே தொழில்நுட்பம் என்றால் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

செக்கோஸ்லாவியா, போலந்து, எஸ்தோனியா போன்ற ஐரோப்பிய நாடுகள் நம்பிக்கைக்குரிய நிறுவனங்களைத்தான் 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தேர்ந்தெடுப்போம் என அறிவித்திருக்கின்றன. பிரான்ஸ், ஜெர்மனி, கனடா போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகள் வாவே நிறுவனத்தைத் தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.

சீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் வாவே.

கடந்த ஆண்டே இந்த நிறுவனம் சீன அரசாங்கத்திற்காக உளவு பார்க்கிறது என்று குற்றம் சாட்டியது அமெரிக்கா. தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் வாவே நிறுவனத்திற்கு தொழில்நுட்பங்களை விற்பனை செய்யக் கூடாது, அப்படிச் செய்வதென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது.

இதைத் தொடர்ந்து கூகுள் போன்ற நிறுவனங்களின் குறுஞ்செயலிகளை வாவே கைப்பேசிகள் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டது. இதனால், வாவே கைப்பேசிகளின் உலகளாவிய விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது.