Home One Line P2 வணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது

வணிகப் போர் : சாலை மேம்பாட்டுத் திட்டங்களில் சீன நிறுவனங்கள் பங்கேற்க முடியாது

523
0
SHARE
Ad

புதுடில்லி : சீன-இந்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து சீனாவுக்கு எதிரான வணிகப் போரை பல முனைகளிலும் தொடக்கியுள்ளது இந்தியா.

அடுத்த கட்ட நடவடிக்கையாக இந்தியாவில் மேற்கொள்ளப்படும் சாலை மேம்பாட்டுத் திட்டங்கள், நெடுஞ்சாலைகளுக்கான குத்தகைளில் இனிமேல் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ, பங்குதாரராகவோ பங்கேற்க முடியாது என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி (படம்) அறிவித்தார்.

அதே அடிப்படையில் சிறிய, நடுத்தர நிறுவனங்களில் முதலீடுகள் செய்யவும் சீன முதலீட்டாளர்களுக்கு இனிமேல் வாய்ப்பு வழங்கப்படமாட்டாது.

#TamilSchoolmychoice

தேசியப் பாதுகாப்பைக் காரணம் காட்டி ஏற்கனவே 59 சீன குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது.

இன்னும் கூடுதலான இந்திய நிறுவனங்கள் அரசாங்கக் குத்தகைகளில் பங்குபெற நிபந்தனைகள் தளர்த்தப்படும்.

நடப்பில் இருக்கும் குத்தகைகள், எதிர்காலத்தில் வழங்கப்படவிருக்கும் குத்தகைகளில் சீன நிறுவனங்களுக்கான தடை கடுமையாக கடைப்பிடிக்கப்படும்.

தற்போது வழங்கப்பட்டிருக்கும் குத்தகைகளில் சீன நிறுவனங்கள் வெற்றி பெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அந்தக் குத்தகைகள் இரத்து செய்யப்பட்டு மீண்டும் புதிய குத்தகைகளுக்கான விண்ணப்பங்கள் அறிவிக்கப்படும்.

இந்திய-சீன எல்லைப்புறப் பகுதியான லடாக்கில், இந்துஸ் நதிக்கரையோரத்தில் சுமார் 11 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் இராணுவ முகாமுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (ஜூன் 3) நரேந்திர மோடி திடீர் வருகை மேற்கொண்ட அதே தருணத்தில் நிதின் கட்காரியின் அறிவிப்பும் ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

தொழில்நுட்பம், ஆய்வு, ஆலோசனை சேவைகள் என அனைத்து துறைகளிலும் வெளிநாட்டு முதலீடுகள் வரவேற்கப்படுகின்றன. ஆனால் சீன நிறுவனங்களிடம் இருந்துதான் முதலீடுகளுக்குத் தடை விதிக்கப்படுகின்றன என்றும் நிதின் கட்காரி தெளிவுபடுத்தினார்.

இவையெல்லாம் இந்தியா எல்லாத் துறைகளிலும் தன்னிறைவு பெறுவதற்கான முயற்சிகள் என்றும் நிதின் கட்காரி விளக்கினார்.

சீனாவின் இறக்குமதிகள் இந்தியத் துறைமுகங்களில் தேங்கிக் கிடப்பதாக எழுந்திருக்கும் புகார்கள் குறித்தும் நிதின் கட்காரி விளக்கினார்.

வேண்டுமென்றே அந்தப் பொருட்கள் முடக்கப்படவில்லை. மாறாக, புதிய நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன என்ற நிதின் கட்காரி இரண்டு, மூன்று மாதங்களுக்கு முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டிருக்கும் தளவாடங்களை உடனடியாக துறைமுகங்களில் இருந்து சுமுகமாக வெளிக் கொண்டுவர தாம் சம்பந்தப்பட்ட இலாகாக்களுக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் கூறினார்.

கடந்த சில நாட்களாக நாட்களாக சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் இந்தியத் துறைமுகங்களில் தேங்கிக் கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேங்கிக் கிடக்கும் பொருட்களில் அமெரிக்க வணிக முத்திரை கொண்ட தயாரிப்புகளாக ஆப்பிள், சிஸ்கோ, டெல் போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் உற்பத்திப் பொருட்களும் அடக்கம். இதுதான் புதிய சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட பல அமெரிக்க நிறுவனங்கள் தயாரிப்பு செலவினங்களைக் குறைக்கும் வகையில் அவற்றை சீனாவில் தயாரிக்கின்றன. சீனாவில் இந்தப் பொருட்களுக்கு இருக்கும் சந்தைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அதே வேளையில் அண்டை நாடுகளுக்கும் இவை ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

சில நாடுகளுக்கு அமெரிக்காவிலிருந்து இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்வதை விட, சீனா போன்ற உற்பத்தி நாடுகளில் இருந்து ஏற்றுமதி செய்வது எளிதான செயலாகும். போக்குவரத்துச் செலவினங்களும் குறையும்.

மேற்குறிப்பிட்ட பொருட்கள் அமெரிக்கப் பொருட்கள் என்றாலும் சீனாவில் தயாரிக்கப்படுகின்றன. எனவே, இவற்றை சீனப் பொருட்களாக வகை செய்து இந்தியா கட்டுப்பாடுகள் விதிக்கத் தொடங்கியிருக்கின்றன.

இந்தக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தால் அமெரிக்கா தனது தயாரிப்பு மையமாக சீனாவைத் தவிர்க்கும் முடிவை எடுக்கக் கூடும்.

ஏற்கனவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனாவுக்கு எதிராக கடுமையான வணிகப் போரை நடத்தி வருகிறார்.

சீனாவுக்கு பல முனைகளிலும் நெருக்கடிகள்

இந்தியாவுடனான எல்லை மோதல்களைத் தொடர்ந்து சீனாவுக்கு இந்தியாவிடம் இருந்து அடுத்தடுத்து பல முனைகளிலும் நெருக்கடிகளும், கட்டுப்பாடுகளும் எழுந்துள்ளன.

இன்னொரு முனையிலும் சீனா கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகின்றது. ஹாங்காங் மீதான புதிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றி அமுலாக்கத் தொடங்கியிருக்கும் சீனாவுக்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் போன்ற வல்லரசுகள் பல்வேறு வணிகத் தடைகளை அமுலாக்கத் தொடங்கியிருக்கின்றன.