Home One Line P2 கராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்

கராத்தே : சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்ற இரட்டைத் தளிர்கள்

991
0
SHARE
Ad

காரைக்கால் : கல்வி, இலக்கியம், விவசாயம், மருத்துவ அறிவியல், வணிகம், விளையாட்டு, இயற்கை சாகசம், வானொலி, திரைத்துறை, என ஒவ்வொரு துறையிலும் உலகளவில் சாதனைகளைப் படைக்கும் சாதனையாளர்களைப் பட்டியலிடும் ஆவணம் கின்னஸ் சாதனையாளர்கள் புத்தகம்.

இதற்கு இணையான புகழைப் பெற்ற மற்றொரு ஆவணம் வொண்டர் சாதனையாளர்கள் புத்தகம்.

காரைக்காலிலுள்ள குட்ஷெப்பர்ட்  மேல்நிலைப் பள்ளியில் பயிலும் இரட்டையர்களான ஸ்ரீவிசாகன் மற்றும் ஸ்ரீஹரிணி இருவரும் வொண்டர் சாதனையாளர்கள் புத்தகத்தில் இடம்பெற்று கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். இவர்கள் இளம் வயதிலேயே கராத்தே தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட் எனப்படும் கறுப்புப் பட்டை தேர்ச்சி நிலையைப் பெற்றவர்கள் என்பது தான் இவர்கள் நிகழ்த்திய சாதனையாகும்.

புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண் பேடியுடன் …
#TamilSchoolmychoice

இந்த சாதனையை நிகழ்த்தியது குறித்து இரட்டையர்களில் ஒருவரான ஸ்ரீவிசாகன் பேசுகையில்,“நானும், என் தங்கை ஸ்ரீ ஹரிணியும் இரட்டையர்கள். மூன்று வயதிலிருந்தே தற்காப்பு கலையை ஆர்வமாக பயின்று வருகிறோம். கடின பயிற்சி மற்றும் விடாமுயற்சியினால் ஒன்பது வயதிலேயே கராத்தே கலையில் இரண்டு ‘பிளாக் பெல்ட்’ டை வென்ற இரட்டையர்கள் என்ற உலக சாதனையை படைத்திருக்கிறோம். பெற்றோரின் அரவணைப்பும், காரைக்காலில் உள்ள  இன்டர்நேஷனல் வி.ஆர்.எஸ் மார்ஷியல் ஆர்ட்ஸ் அகாடமி இயக்குனர்  மாஸ்டர் வி.ஆர்.எஸ்.குமாரின் பயிற்சியும் தற்காப்பு கலையில் சிறப்புமிக்கவர்களாக எங்களை மாற்றி இருக்கிறது” என்றார்.

அண்ணனைத் தொடர்ந்து தங்கை ஸ்ரீ ஹரிணி பேசுகையில்,“தற்காப்பு பயிற்சியும், தற்காப்பு போட்டிகளும் தான் எங்களை உற்சாகமாக இயங்கச் செய்கிறது. நினைவு தெரிந்த வயதில் இருந்தே தற்காப்பு கலை எங்களோடு வளர்ந்து வருகிறது. கராத்தே என்ற கலையுடன் நாங்கள் குங்பூ, சிலம்பம், குத்துச்சண்டை, சுருள் வாள், வாள் பயிற்சி, நுங்சாக்… என பல்வேறு தற்காப்பு பயிற்சிகளை பயின்றிருக்கிறோம்” என்றார்.

வீடு நிறைய பரிசு கோப்பைகளை நிரப்பி வைத்திருக்கும் இந்த சாதனை இரட்டையர்கள், தாங்கள் கற்ற தற்காப்பு கலையை பயிற்சி காணொளியாக்கி (வீடியோ)வாக்கி, ‘ www.karatetwins.com ’ என்ற யூடியூப் தளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள்.

இவர்களின் தளத்தைப் பார்வையிடுபவர்கள், இவர்களின் பயிற்சியை தங்களுடைய பிள்ளைகளுக்கு கற்பிப்பதுடன், இந்த தளத்திலுள்ள பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம், சில்லுக்கோடு, தட்டாமலை, பூப்பறிக்க வருகிறோம், பச்சை குதிரை, பம்பரம், கிட்டிப்புல்..போன்ற பல பாரம்பரிய விளையாட்டுகளின் வீடியோக்களையும் கண்டு ஆச்சரியப்படுகிறார்கள். இவர்களின் இந்த முயற்சிக்காக பாராட்டுகளும் சமூக ஊடகங்களில் குவிந்து வருகின்றன.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் குடும்பத்திலுள்ள அனைவரும் பார்வையிடும் தளமாக இந்த தளம் பிரபலமாகியிருக்கிறது.

இதனிடையே இந்த வொண்டர் சாதனையாளர் புத்தகத்தில் பிரபல பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம் உள்ளிட்ட ஏராளமான இந்திய சாதனையாளர்களும் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.