Home One Line P2 5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம்

5ஜி சிக்கலில் சீனாவின் வாவே நிறுவனம்

821
0
SHARE
Ad

பெய்ஜிங் – குறுகிய காலத்தில் கிடுகிடுவென வளர்ச்சி பெற்ற சீனா நிறுவனம் வாவே (Huawei). 5ஜி தொழில்நுட்பத்தைப் பல நாடுகளில் அறிமுகம் செய்ய ஒப்பந்தங்களில் ஈடுபட்டு வந்தது.

மலேசியா கூட, துன் மகாதீர் பிரதமராக இருந்த நேரத்தில் வாவே நிறுவனத்தை 5ஜி தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்யப் பயன்படுத்துவோம் என அறிவித்தார்.

அமெரிக்காவோ, 5ஜி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சீனா மற்ற நாடுகளின் மீது உளவு பார்க்கும் எனத் தொடர்ந்து எச்சரித்து வந்தது. சீனாவோ மறுத்தது.

#TamilSchoolmychoice

இப்போதோ நிலைமை முற்றிலும் மாறிவிட்டது.

சீனாவுடனான வணிகப் போரைத் தொடர்ந்து அமெரிக்கா பல்வேறு கட்டுப்பாடுகளை சீனாவுக்கு எதிராக விதிக்கத் தொடங்கியிருக்கிறது.

கூடவே சேர்ந்து கொண்டது, ஹாங்காங் விவகாரம்! இதனால் பிரிட்டனும் சீனாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்திருக்கிறது.

இந்த ஆண்டு இறுதிக்குள் பிரிட்டனில் 5ஜி தொழில்நுட்ப அமுலாக்கத்திலிருந்து வாவே நிறுவனம் கட்டம் கட்டமாக அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகளை பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜோன்சன் எடுத்து வருவதாகவும் பிரிட்டனின் ஊடகங்கள் தெரிவித்தன.

பிரிட்டனின் 5ஜி கட்டமைப்பை நிர்மாணிக்கும் பணிகளில் பங்கெடுக்க வாவே நிறுவனத்திற்கு பிரிட்டன் அனுமதி அளித்திருந்தது.

இந்தியாவும் சீனாவுடனான எல்லை மோதல்களைத் தொடர்ந்து வணிக எதிர்ப்புகளை இந்தியாவும் முடுக்கி விட்டிருக்கிறது. சீனாவின் குறுஞ்செயலிகளைத் தடை செய்திருக்கிறது.

சாலை மேம்பாட்டுக் குத்தகைகளில் பங்கேற்க சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என தரைப்போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்திருக்கிறார்.

இந்தியாவும் கடந்த ஆண்டில் 5 ஜி பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள வாவே நிறுவனத்திற்கு அனுமதி அளித்திருந்தது. தற்போது சீன-இந்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து அந்த அனுமதிகள் தொடரப்படுமா என்பது சந்தேகம்தான்.

இந்தியாவில் சீனப் பொருட்களைத் தடை செய்யவேண்டுமென பல வணிக அமைப்புகள் போராட்டத்தைக் தொடக்கியுள்ளன. இதன் எதிரொலியாக வாவே நிறுவனத்திற்கு இந்தியாவிலும் தடை விதிக்கப்படலாம்.

ஜப்பான், தைவான் ஆகிய நாடுகள் எப்போதுமே சீனாவிடம் பகைமை பாராட்டி வருபவை.

இந்தப் புதியத் திருப்பங்களால் 5ஜி தொழில்நுட்பத்தை சீனாவிடம் இருந்து பெற பல நாடுகள் தயங்குகின்றன. உளவு பார்க்கும் நாடு என்ற அமெரிக்காவின் தொடர் பிரச்சாரங்களால் பெரிய நிறுவனங்களும், பொதுமக்களும் கூட வாவே தொழில்நுட்பம் என்றால் மறுபரிசீலனை செய்யத் தொடங்கியிருக்கின்றனர்.

செக்கோஸ்லாவியா, போலந்து, எஸ்தோனியா போன்ற ஐரோப்பிய நாடுகள் நம்பிக்கைகுரிய நிறுவனங்களைத்தான் 5ஜி தொழில்நுட்பத்திற்குத் தேர்ந்தெடுப்போம் என அறிவித்திருக்கின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற பெரிய ஐரோப்பிய நாடுகள் வாவே நிறுவனத்தைத் தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.

அமெரிக்காவின் இறக்குமதிக் கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து வாவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. இதனால் தாங்கள் வாக்குறுதி அளித்தபடி 5ஜி தொழில்நுட்ப இலக்குகளை வாவே வழங்க முடியாத நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சீனாவின் ஷென்சென் நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் நிறுவனம் வாவே.

கடந்த ஆண்டே இந்த நிறுவனம் சீன அரசாங்கத்திற்காக உளவு பார்க்கிறது என்று குற்றம் சாட்டியது அமெரிக்கா. தொடர்ந்து அமெரிக்க நிறுவனங்கள் வாவே நிறுவனத்திற்கு தொழில்நுட்பங்களை விற்பனை செய்யக் கூடாது, அப்படிச் செய்வதென்றால் முன் அனுமதி பெற வேண்டும் என்ற கட்டுப்பாட்டைக் கொண்டு வந்தது.

கூகுள் போன்ற நிறுவனங்களின் குறுஞ்செயலிகளை வாவே கைப்பேசிகள் பயன்படுத்த இயலாத நிலைமை ஏற்பட்டது. இதனால், அதன் உலகளாவிய விற்பனையிலும் சரிவு ஏற்பட்டது.

நடப்பிலுள்ள சட்டங்கள் மாறாவிட்டால், அமெரிக்கா-சீனா இடையிலான பதட்டம் தணியாவிட்டால் 5ஜி தொழில்நுட்பம் தொடர்பான கருவிகளை தயாரித்துத் தருவதில் வாவே நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும்.