Home One Line P2 ஹாங்காங் : அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்தை இழந்தது

ஹாங்காங் : அமெரிக்காவின் சிறப்பு அந்தஸ்தை இழந்தது

939
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் வணிகப் பங்காளித்துவ நாடு என்ற முறையில் ஹாங்காங் இதுவரையில் அனுபவித்து வந்த சிறப்பு அந்தஸ்தை நேற்று செவ்வாய்க்கிழமையுடன் (ஜூலை 14) இழந்தது.

இதற்கான உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்தார். ஹாங்காங்கிற்கு எதிராக சீனா கையாண்டு வரும் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

சீனாவின் அரசாங்கம் நிறைவேற்றியிருக்கும் புதிய பாதுகாப்பு சட்டம் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என அமெரிக்க அரசாங்கத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

பொருளாதார ரீதியாக ஹாங்காங் பல ஆண்டுகளாக அனுபவித்து வந்த சலுகைகளை இதனால் இழந்துள்ளது. “எனவே, இனி சிறப்பு சலுகைகள் இல்லை. சிறப்பு பொருளாதார அனுகூலங்கள் இல்லை. நுணுக்கமான, சர்ச்சைக்குரிய தொழில்நுட்பங்கள் இனிமேல் ஏற்றுமதி இல்லை” எனவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

வங்கிகளுக்கும் எதிராகவும் நடவடிக்கை

அமெரிக்க நாடாளுமன்றம் ஹாங்காங்கிற்கு எதிர்ப்பான மற்றொரு சட்டத்தையும் அங்கீகரித்திருக்கிறது. அந்த சட்டத்தின் அமுலாக்கத்திற்கும் டிரம்ப் கையெழுத்திட்டார்.

புதிய ஹாங்காங் பாதுகாப்பு சட்டத்தை அமுல்படுத்தும் சீன அதிகாரிகளுடன் வணிகத் தொடர்பு கொண்டிருக்கும் வங்கிகளைத் தண்டிக்க இந்த சட்டம் வழி செய்கிறது.

ஹாங்காங்கில் அமைந்திருக்கும் அமெரிக்காவின் டிஸ்னிலேண்ட் உல்லாச மையம்

அனைத்துலக நிதிச் சந்தையாக இதுநாள் வரை திகழ்ந்து வந்தது ஹாங்காங். அதற்கு முக்கியக் காரணம், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் அந்தத் தீவுக்கு இதுநாள் வரை வழங்கி வந்த சிறப்பு சலுகைகள்தான்!

அமெரிக்காவின் முடிவினால் உடனடியாக ஹாங்காங் இழப்பை எதிர்நோக்க வாய்ப்பில்லை. அங்கு செயல்படும் மேற்கத்திய நிறுவனங்களும் உடனடியாக அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறும் முடிவை எடுக்காது.

என்றாலும், இதுநாள் வரை எந்த அம்சம் ஹாங்காங்கை அனைத்துலக நிறுவனங்களால் ஈர்க்கப்படும் பிரதேசமாக உருமாற்றியதோ அந்த கவர்ச்சிகரமான அம்சத்தை ஹாங்காங் இழந்து விடும்.

இந்தச் சலுகையின் மூலம் பல பொருளாதார, வணிக அனுகூலங்களை ஹாங்காங் கடந்த காலத்தில் பெற்று வந்துள்ளது.

எனினும் இனி கட்டம் கட்டமாக ஹாங்காங்கிலிருந்து பல பன்னாட்டு நிறுவனங்கள் இடம் மாறும்; வணிகத் தொடர்புகளை குறைத்துக் கொள்ளும்; நிதி நிறுவனங்களும் வேறுநாடுகளை நோக்கிச் செல்லும்; என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹாங்காங்கை அனைத்துலக நிதி நிறுவனங்கள் நாடிச் செல்வதற்கான வாய்ப்புகளும் குறைவு. அமெரிக்கா-சீனா வணிகப் போர், சீனாவின் புதிய பாதுகாப்புச் சட்டம் ஆகிய காரணங்களால் மெல்ல மெல்ல அனைத்துலக நிறுவனங்கள் ஹாங்காங்கில் இருந்து வெளியேறத் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

“புதிய சட்டங்களில் நான் கையெழுத்திட்டேன். ஹாங்காங் மக்கள் மீதான அடக்குமுறை நடவடிக்கைகளுக்காக சீனா பொறுப்பேற்க வேண்டும். இனி சீனா போன்றே ஹாங்காங்கும் அமெரிக்காவால் கையாளப்படும்” என டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.

சீனாவுடனான வணிக ஒப்பந்தங்களும் அமெரிக்காவுக்குத் தேவையில்லை என்றும் டிரம்ப் தெரிவித்தார்.

ஏற்கனவே, கொவிட்-19 பாதிப்புகளால் இருநாடுகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல், வணிகப் போர், தென் சீனக் கடல் பகுதியில் சீனாவின் இராணுவ ஆக்கிரமிப்பு அதிகரிப்பு, உய்கூர் முஸ்லீம்களுக்கு காட்டப்படும் பாரபட்சம் ஆகிய அம்சங்களோடு தற்போது ஹாங்காங் பிரச்சனையும் சேர்ந்து கொண்டு அந்நாடுகளுக்கிடையிலான மோதல்களை உச்சகட்டத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

அமெரிக்காவுக்கும் பாதிப்பு

ஹாங்காங்கிற்கான சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வதால் அமெரிக்காவுக்கும் சில பாதிப்புகள் ஏற்படக்கூடும்.

கடந்த ஆண்டில் அமெரிக்கப் பொருட்களின் ஏற்றுமதியால் ஹாங்காங்குடனான வணிகத்தில் 26.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உபரியாக அமெரிக்காவுக்கு சாதகமாக அமைந்தது.

அமெரிக்காவின் வழக்கறிஞர்கள், கணக்காய்வாளர்கள், ஆலோசனை நிறுவனங்களும் பெருமளவில் ஹாங்காங்கில் கிளைபரப்பி இயங்குகின்றன. இத்தகைய சுமார் 1300 அமெரிக்க அலுவலகங்கள் ஹாங்காங்கில் அமைந்திருக்கின்றன.

2018 கணக்கெடுப்பின்படி 85 ஆயிரம் அமெரிக்கர்கள் ஹாங்காங்கில் வசித்தனர். 1,300க்கும் மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்கள் அங்கு இயங்குகின்றன.

அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்கள் அனைத்தும் ஹாங்காங்கிலும் ஒரு கிளையைக் கொண்டு இயங்குகின்றன.

அமெரிக்க ஏற்றுமதிகளினால் 31.1 பில்லியன் டாலர் வணிக உபரியை 2018-இல் அமெரிக்கா பெற்றது. அனைத்து உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது இதுவே அமெரிக்கா பெற்ற அதிகபட்ச ஏற்றுமதி வணிக உபரியாகும்.

இதனால், ஹாங்காங்கிற்கு சிறப்பு அந்தஸ்தை இரத்து செய்வதால் அமெரிக்காவுக்கும் சில பாதிப்புகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சீனா, 1897-ஆம் ஆண்டில் ஹாங்காங் தீவை பிரிட்டனுக்கு நூறு ஆண்டுகள் ஒப்பந்தத்தில் தாரைவார்த்துக் கொடுத்தது.

அந்த ஒப்பந்தத்தின்படி 1997-ஆம் ஆண்டில் சில நிபந்தனைகளோடு ஹாங்காங்கை சீனாவின் வசம் பிரிட்டன் திரும்பவும் ஒப்படைத்தது.

அடுத்த 50 ஆண்டுகளுக்கு (2047 வரை) ஹாங்காங் மக்கள் சுதந்திரமாக நடத்தப்படுவார்கள் என்ற உறுதிமொழியையும் சீனா அப்போது வழங்கியது.