டெக்ஸாஸ், ஏப்ரல் 18 – அமெரிக்காவில் உரம் தயாரிக்கும் தொழிற்சாலையில் இன்று பயங்கர வெடி சப்தத்துடன் பெரும் விபத்து ஏற்பட்டது. இது வெடி விபத்தா அல்லது பயங்கரவாத தாக்குதலாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.
இன்றைய சம்பவத்தில் 100 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இன்னும் பலர் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாகவும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் மத்திய டெக்ஸாஸ் வெஸ்ட் பகுதியில் உள்ள பெர்ட்டிலைசர்ஸ் என்ற தொழிற்கூடத்தில் அமெரிக்க நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த சம்பவம் நடந்துள்ளது.
திடீரென பலத்த சப்தத்துடன் வெடித்து தீப்பிழம்பு தொழிற்சாலை முழுவதும் பரவியுள்ளது. அங்கு வேதிப்பொருட்கள் அதிகம் இருந்ததால் வெடிக்கும் சப்தமும் அந்த
பகுதி மக்களை அச்சமடையச்செய்துள்ளது.
மேலும் அத்தொழிற்சாலைக்கு அருகில் இருந்த பள்ளிகள், நர்சிங்ஹோம் கட்டடங்களுக்கும் தீ பரவியுள்ளது. தீயை அணைக்கும் பணியில் ஹெலிகாப்டர்களும், தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி பாஸ்டன் நகரில் மாரத்தான் ஓட்டத்தில் பயங்கர குண்டு வெடித்தது. இந்நிலையில் இன்று நடந்துள்ள இந்த சம்பவம் அமெரிக்க மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.