புது டில்லி: இந்தியாவில் ஐந்து மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் பிரச்சாரப் பணிகளில் மும்முரமாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மீது சிலர் தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். நேற்று அங்கு அவர் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, நான்கைந்து பேர் கொண்ட கும்பல் அவரை பிடித்து கீழே தள்ளியதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.
இது முழுக்க முழுக்க ஒரு சதிச் செயல் எனவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். மம்தா பானர்ஜிக்கு Z-plus பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்விவகாரம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.