கோலாலம்பூர்: அவசரநிலையை முடிவுக்குக் கொண்டுவர மாமன்னருக்கு சமர்ப்பிக்க மனு ஒன்று இன்று எதிர்க்கட்சி தலைவர்கள் மற்றும் ஆர்வலர்கள் குழுவால் தொடங்கப்பட்டுள்ளது.
பொது மக்கள் மனுவில் இயங்கலை வாயிலாக கையெழுத்திடலாம் என்றும், மனு நோன்பு பெருநாளுக்கு முன்பு மாமன்னரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஷா ஆலாம் நாடாளுமன்ற உறுப்பினரான காலிட் சமாட் தெரிவித்தார்.
“பிரதமர் கோரிய அவசரநிலை குறித்த ஆட்சேபனைகள் குறித்து மாமன்னருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம்,” என்று காலிட் கூறினார்.
இந்தக் குழுவில், பெஜுவாங், அமானா, வாரிசான், ஜசெக, பிகேஆர் மற்றும் மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (முடா) ஆகிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்களும் உள்ளனர்.
“இதுவரை, எந்த (அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்களும்) ஈடுபடவில்லை. அவர்கள் எங்களுடன் இணைய இருந்தால் நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்கள் நாட்டை நேசிக்கிறீர்கள், அவசரநிலை தேவையில்லை என்று நம்பினால், நாங்கள் உங்களை வரவேற்கிறோம்,” என்று அவர் கூறினார்.
இதுவரை, அவசரகால அதிகாரங்கள் முதன்மையாக தேர்தல்களைத் தடுக்கவும், நாடாளுமன்றத்தை இடைநிறுத்தவும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988- இல், 1,000 ரிங்கிட் அபராதம் 10,000 ரிங்கிட்டாக உயர்த்தவும் இது பயன்படுத்தப்பட்டது.
கொவிட் -19 மற்றும் அவசரநிலை தொடர்பான போலி செய்திகளைவெளியிடுபவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க சட்டம் இன்று நடைமுறைக்கு வருகிறது.
அவசரகால கட்டளை மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட எந்தவொரு புதிய சட்டமும் அல்லது சட்டத் திருத்தமும் எந்த நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது.