ஈப்போ: பெர்சாத்து கட்சியின் துணைத் தலைவர் அகமட் பைசால் அசுமுவை பேராக் மந்திரி பெசாராக ஆதரவளிக்க தவறியதை அடுத்து டிடி செரோங் சட்டமன்ற உறுப்பினர் ஹஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனைம் பெர்சாத்துவிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.
பேராக் பெர்சாத்து செயலாளர் சைனோல் பட்ஸி பஹாருடின் இதை உறுதிப்படுத்தினார்.
ஹஸ்னுல் கட்சி உறுப்பினர் நீக்கம் கடந்த ஆண்டு டிசம்பர் 20 முதல் நடைமுறைக்கு வந்தது.
கடந்த ஆண்டு டிசம்பர் 3-ஆம் தேதி பேராக் மாநில சட்டமன்றத்தில் மந்திரி பெசார் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தாக்கல் செய்யப்பட்டபோது ஹச்னுல் பைசாலை ஆதரிக்கவில்லை.
ஒரு புதிய கட்சியை அமைப்பது குறித்த வதந்திகளை மறுத்த ஹஸ்னுல், தனது அரசியல் எதிர்காலம் குறித்து எந்த முடிவுகளையும் எடுக்கவில்லை என்று வலியுறுத்தினார்.
“இருப்பினும், நான் இப்போது எந்த கட்சியிலும் சேர விரும்பவில்லை,” என்று அவர் மலேசியாகினியிடம் கூறினார்.
பிகேஆர் தலைவர்களை சந்திப்பதை ஹஸ்னுல் மறுக்கவில்லை, ஆனால் அது ஒரு சாதாரண சந்திப்பு என்று வலியுறுத்தினார்.
“இப்போதைக்கு, நான் எனது தொகுதியில் கவனம் செலுத்துவேன். நான் ஒரு புதிய கட்சியைத் தேடவில்லை. நடப்பு விவகாரங்கள் குறித்து மட்டுமே நாங்கள் விவாதித்தோம்,” என்று அவர் கூறினார்.
முன்னதாக, பேராக் பிகேஆர் தகவல் தொடர்புத் தலைவர் முகமட் அராபத் வாரிசாய் மகமட், வாக்காளர்களுக்கு துரோகம் இழைத்தவர்களை தனது கட்சி ஏற்காது என்று கூறினார்.