கோலாலம்பூர்: தேசிய முன்னணி கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் அரசாங்கத்திலிருந்து விலகுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் ஒரு கூட்டு முடிவாக இருக்க வேண்டும் என்று மசீச தலைவர் வீ கா சியோங் கூறினார்.
தாம் பதவி விலகத் தயாரா என்று கேட்டதற்கு, போக்குவரத்து அமைச்சரான வீ, “நாங்கள் எந்த முடிவை எடுத்தாலும் அது ஒரு கூட்டாக இருக்க வேண்டும்,” என்று மட்டுமே கூறினார்.
இதற்கிடையில், 15- வது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனியாக போட்டியிட வேண்டும் என்பது அம்னோவின் நிலைப்பாட்டோடு உடன்படலாமா என்பதை மஇகா அதன் அடிமட்ட மக்களுடன் விவாதிக்கும்.
மஇகா கட்சியின் துணைத் தலைவர் எம்.சரவணன் மத்திய செயலவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிப்பார் என்றார்.
“அது (அமைச்சரவையிலிருந்து வெளியேறுவது) அம்னோவின் நிலைப்பாடு. அடிமட்ட மக்கள் இந்த முடிவை ஏற்றுக்கொண்டால் நான் முதலில் மஇகா உடன் ஆலோசிக்க வேண்டும், ” என்று மனிதவள அமைச்சரான சரவணன் செய்தியாளர்களிடம் கூறினார்.