Home One Line P1 டான்ஸ்ரீ சுப்ராவும் ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 2)

டான்ஸ்ரீ சுப்ராவும் ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 2)

1026
0
SHARE
Ad
டான்ஶ்ரீ சுப்ரா – ஆதி.குமணன்

(மக்கள் தலைவர் எனப் போற்றப்பட்டவர் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம். மறைந்த பிரபல பத்திரிகையாளர் ஆதி.குமணன் அவர்களோ மக்கள் பத்திரிகையாளர் என்றும் இளைய தமிழவேள் என்றும் இன்றும் மலேசிய இந்தியர்களாலும், சக ஊடகவியலாளர்களாலும் நினைவு கூரப்படுபவர். சுப்ரா, ஆதி.குமணன் இருவரும் இணைந்து கரங்கோர்த்து மலேசிய தமிழ் நாளிதழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதும், சுப்ராவின் அரசியல் வளர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் ஆதி.குமணன் தனது வலிமை மிக்க எழுத்துகளால் ஆதரவுக் கோட்டை கட்டியதும் மலேசிய இந்தியர் வரலாற்றின் சில முக்கியப் பக்கங்கள். வெவ்வேறு தளங்களில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய இவர்கள் இருவரும் எந்தப் புள்ளியில் இணைந்தனர்? எவ்வாறு நெருங்கிய நட்பு கொண்டனர்? அந்த சம்பவங்களில் சிலவற்றின் நேரடி அனுபவங்களை ஆதி.குமணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (28 மார்ச்) விவரிக்கிறார் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன். நேற்று இந்தக் கட்டுரையின் முதல் பகுதி இடம் பெற்றது. கட்டுரையின் இரண்டாவது பகுதி தொடர்கிறது)

அப்போது இரண்டே இரண்டு தமிழ் நாளிதழ்கள்தான். ஒன்று தமிழ் நேசன். இன்னொன்று தமிழ் மலர்.

தமிழ் மலர், பினாங்கு பிரமுகரும், பெரும் பணக்காரருமான என்டிஎஸ்.ஆறுமுகம் பிள்ளையின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்தது.

#TamilSchoolmychoice

அந்த காலகட்டத்தில் ஆறுமுகம் பிள்ளை செல்வாக்கு மிகுந்த சமூகத் தலைவராகவும் விளங்கினார். அவருடன் மோதி, அவரின் பத்திரிகை நிறுவனத்திலிருந்து வெளியேறும் ஊர் பேர் தெரியாத – 30 வயதுக்கும் கீழ்ப்பட்ட வயதைக் கொண்ட – ஓர் இளைஞர் அணியினருக்குப் பக்கபலமாக இருக்க வேண்டுமா? என சுப்ரா வானம்பாடியைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியைத் தவிர்த்திருக்கலாம்.

பத்திரிகை பலம் கொண்ட ஆறுமுகம் பிள்ளையுடன், இதனால் உரசல்கள் ஏற்படுமே, தமிழ் மலர் பத்திரிகை ஆதரவை இழக்க நேரிடுமே என்று கூட அரசியல் ரீதியாக சுப்ரா தயங்கி ஆதி.குமணன் விடுத்த அழைப்பை நிராகரித்திருக்கலாம். வானம்பாடியைத் தொடக்கி வைப்பதன் மூலம் ஆறுமுகம் பிள்ளையின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொள்ளும் அபாயமும் சுப்ராவுக்கு இருந்தது.

ஆனால், ஆர்வத்துடன் இளைஞர்கள் சிலர் ஒரு புதிய முயற்சியில் காலடி வைக்கிறார்கள் – அதுவும் தமிழ் வாரப் பத்திரிகை ஒன்றுக்கான தொடக்கம் – எனவே அவர்களுக்குத் துணை நிற்போம், வருவதைப் பின்னர் பார்த்துக் கொள்வோம் என சுப்ராவும் தயங்காமல் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வானம்பாடி பத்திரிகையைத் தொடக்கி வைத்தார்.

வானம்பாடியைத் தொடக்கி வைத்ததால் சுப்ராவுக்கும் ஆறுமுகம் பிள்ளைக்கும் இடையிலான நட்பிலும் எந்தவித விரிசலும் உரசலும் ஏற்படவில்லை. அவர்கள் இருவருக்கும் இடையில் நல்ல இணக்கமான சூழலே தொடர்ந்தது.

வானம்பாடியோடு வளர்ந்த குமணன்-சுப்ரா நட்பு

அப்போது இணையம் இல்லாத காலம். இரண்டு தமிழ் நாளிதழ்கள் மட்டுமே வெளிவந்தன. சில மாத இதழ்கள் வந்து கொண்டிருந்தன. அவையும் பெரும்பாலாக இந்தியன் மூவி நியூஸ் போன்ற சினிமா சார்பு இதழ்கள்.

டேப்லோய்ட் (Tabloid) என்ற வடிவில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமையே கடைகளுக்கு வந்து விடும் வானம்பாடி, பத்திரிகை உலகில் அப்போது பெரும் சாதனையைப் படைத்தது. ஒரு புரட்சியையே ஏற்படுத்தியது.

ஓரிரு ஆண்டுகளில் வாரம் ஒன்றுக்கு சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பிரதிகள் வரை விற்பனையாயின.

மலேசியத் தமிழ் எழுத்துலகத்தையும் புரட்டிப் போட்ட மாற்றத்தையும் வானம்பாடி நிகழ்த்தியது.

தமிழ் நாளிதழ்கள் ஞாயிறு பதிப்புகளில் பதிப்பித்த மரபுக் கவிதைகளை மட்டுமே படித்து வந்த தமிழர்கள் இப்போது வானம்பாடி வழி புதுக் கவிதை உலகத்தில் நுழைந்தனர். எண்ணற்ற புதுக் கவிதைக் கவிஞர்கள் உருவாகத் தொடங்கினர்.

எனது “இதுதான் முதல் ராத்திரி” என்ற சிறுகதை கூட வானம்பாடியில் அப்போது வெளிவந்திருக்கிறது.

வானம்பாடியின் இரண்டாவது பக்கத்தில் குமணன் எழுதும், சமூக அரசியல் கட்டுரைகள் “பார்வை” என்ற தலைப்பில் இடம் பெற்றன. சமூகம், அரசியல் குறித்த அந்தக் கட்டுரைகள் வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

சர்ச்சைக்குரிய அரசியல் செய்திகள், நம்ப முடியாத பரபரப்பு செய்திகள், அறிவியல் கட்டுரைகள், புதுக் கவிதைகள், சிறுகதைகள், இலக்கியப் படைப்புகள், சினிமா எனக் கலவையாக நாளிதழ்கள் தர முடியாததை வானம்பாடி கலவையாகத் தேர்ந்தெடுத்துத் தந்ததில் மக்களின் பேராதரவைப் பெற்றது. விற்பனையிலும் சாதனை புரிந்தது.

சுப்ரா வானம்பாடியைத் தொடக்கி வைத்ததைத் தொடர்ந்து அவருக்கும் குமணனுக்கும் இடையில் நல்லதொரு புரிந்துணர்வும், நட்பும் முகிழ்க்கத் தொடங்கியது.

அப்போது நான் மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில அலுவலகத்தில் நிர்வாகச் செயலாளராகவும் சுப்ராவுக்குத் தனிப்பட்ட செயலாளராகவும் பணி புரிந்து வந்தேன்.

அந்த காலகட்டத்தில், குறைந்த பட்சம் வாரம் ஒருமுறையாவது வானம்பாடி வேலைகளை முடித்து விட்டு, குறிப்பாக வியாழன் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சுடச் சுட அச்சடித்த வானம்பாடி பிரதியோடு இரவு நேரத்தில் குமணன் சுப்ரா வீட்டுக்கு வருவார். இருவரும் நீண்ட நேரம் இரவு முழுக்க, சில சமயங்களில் விடிய விடிய உரையாடுவார்கள்.

நானும் அங்கேயே உட்கார்ந்து அந்த உரையாடல்களை ஆர்வத்துடன் கேட்டுக் கொள்வேன். காரணம் அந்த உரையாடல்களில் பல தனிப்பட்ட, அரசியல் விவகாரங்களை சுப்ரா பகிர்ந்து கொள்வார்.

குமணனும், கல்வி, குடும்பம் என தனது இளமைப் பருவத்தில் நீண்ட காலம் தமிழ் நாட்டில் இருந்தவர் என்பதால் உள்நாட்டு சமூக, அரசியல் தகவல்களின் தொடர்புகள் அவருக்கு விட்டுப் போயிருந்தன. குறிப்பாக அவர் மலேசியாவுக்கு திரும்பியதற்கு முன்னால் நடந்த அரசியல் நிகழ்வுகளை, உதாரணமாக துன் சம்பந்தன் – மாணிக்கவாசகம் அரசியல் போராட்டங்களை, ஆர்வத்துடன் சுப்ராவிடம் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

குமணனுக்கு எழுத்துத் திறன் என்று வரும்போது அபாரமான இன்னொரு ஆற்றல் இருந்தது. சில சமயங்களில் ஏதாவது ஓர் அரசியல், அல்லது சமூக விவகாரம் பற்றி கட்டுரை எழுதப் போகிறார் என்றால் சுப்ராவிடம் அவை தொடர்பான விவரங்களை விளக்கமாகக் கேட்டுத் தெரிந்து கொள்வார்.

ஆனால், என்ன எழுதப் போகிறேன், எதற்காக எழுதப்போகிறேன், எந்த கோணத்தில் எழுதப்போகிறேன் என்று பகிரங்கமாகக் கூற மாட்டார். எல்லா விஷயங்களையும் உள்வாங்கிக் கொண்டு மறுநாள் அவர் எழுதி வெளியிடும் கட்டுரை, நாம் யாருமே எதிர்பார்க்காத புதிய அம்சங்களையும், வித்தியாசமான கோணங்களையும் கொண்டிருக்கும். தனக்கே உரிய பாணியில் அபாரமான எழுத்து நடை கொண்டு, புதியதொரு கோணத்தில் அந்தக் கட்டுரையைப் படைத்திருப்பார்.

இன்றுவரையும், அவருக்கு முன்னரும் மலேசியாவில் யாரிடமும் காணமுடியாத, ஓர் அபாரமான எழுத்து நடை அவருக்கு இயல்பாகவே அமைந்திருந்தது. அந்தத் திறனும், விஷயங்களை உள்வாங்கிக் கொண்டு எழுத்து வடிவில் அவற்றை உருமாற்றும் திறனும் இணைந்து பார்வை அங்கத்தில் பல கட்டுரைகள் வாசகர்களைக் கவரத் தொடங்கின.

மெல்ல, மெல்ல அந்த “பார்வை” கட்டுரைகளில் அடிக்கடி சுப்ராவுக்கு ஆதரவான அரசியல் பார்வைகளும் இடம் பெற்றன. சுப்ரா மீதான அரசியல் எதிர்ப்பு விவகாரங்கள் முன்வைக்கப்படும் போதெல்லாம், ஒரு தற்காப்புக் கேடயம் போன்று தனது எழுத்துத் திறனைப் பயன்படுத்தினார் குமணன்.

அதே சமயம் அந்தக் கட்டுரைகள் நியாயமாகவும் இருந்தன. நடுநிலையோடும் இருந்தன. சுப்ராவின் தரப்பு வாதத்தை எடுத்துக் கூறுவதாகவும் இருந்தன. எனவே, சுப்ராவுக்காக ஒரு பத்திரிகையாளர் வக்காலத்து வாங்குகிறார் என்பது போன்ற தோற்றம் வாசகர்களிடத்திலேயே எழவில்லை. சுப்ராவின் அரசியல் போராட்டத்திற்கான நியாயங்களை நடுநிலை பத்திரிகையாளர் ஒருவர் எழுதுகிறார் என்ற அடிப்படையில் அந்தக் கட்டுரைகள் பொதுமக்களிடம் வரவேற்பைப் பெற்றன.

எதை எழுதுவது என சுப்ரா கூறியதே இல்லை

இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிட வேண்டும்.

மணிக்கணக்காக தனியே அமர்ந்து பல விவகாரங்களைக் கலந்துரையாடும் நட்பும் நெருக்கமும் குமணனுக்கும் சுப்ராவுக்கும் இடையில் வளர்ந்து கொண்டு வந்தாலும், எனக்குத் தெரிந்து ஒருமுறை கூட “இப்படி எழுதுங்கள், இதனை எழுதுங்கள், இந்த விவகாரத்தில் எனக்காக தற்காத்து எழுதுங்கள்” என்றெல்லாம் சுப்ரா குமணனிடம் கூறியதே இல்லை.

அதே போன்று, என்ன எழுதப் போகிறேன், எதைப் பற்றி எழுதப் போகிறேன், எந்த கோணத்தில் எழுதப் போகிறேன் என்றெல்லாம் குமணனும் ஒரு முறை கூட சுப்ராவிடம் முன்கூட்டியே கூறியதில்லை. அனுமதியும் கேட்டதில்லை.

தனக்கு ஆதரவான பல கட்டுரைகளைக் கூட அச்சில் வெளிவந்தபிறகுதான் சுப்ராவே படித்துத் தெரிந்து கொள்வார்.

சுப்ரா-சாமிவேலு இடையிலான போராட்டத் தருணங்களில் குமணன் எழுதிய பல கட்டுரைகளை அச்சில் ஏறியபிறகுதான் சுப்ராவே படித்துத் தெரிந்து கொள்வார். இதனாலேயே அவருக்கு சில சங்கடங்களும் அரசியல் ரீதியாக நிகழ்ந்தன.

அது தெரிந்திருந்தாலும், குமணன் தனது எழுத்து சுதந்திரத்தையும், சுயமரியாதையையும் என்றைக்குமே விட்டுக் கொடுத்ததில்லை. எனினும் அவர்கள் இருவருக்குமான ஆழமான நட்பும், புரிந்துணர்வும் தொடர்ந்தது.

சாமிவேலு தமிழ் நேசனை வாங்கினார்

டான்ஸ்ரீ வெ.மாணிக்கவாசகம்

1979-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் மஇகா தேசியத் தலைவராக இருந்த டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் அகால மரணமடைந்தார். சாமிவேலு மஇகாவின் இடைக்காலத் தலைவரானார். அரசியல் காட்சிகளும் மாறத் தொடங்கின.

இந்த காலகட்டத்தில் திடீரென ஒருநாள் சாமிவேலு தமிழ் நேசன் பத்திரிக்கையை ஒட்டு மொத்தமாக வாங்கிவிட்டார் என்ற அறிவிப்பு வெளியானது.

அப்போது முதல் தமிழ் நேசன் முழுக்க முழுக்க மஇகா சார்பு நாளிதழாகவும், சாமிவேலுவின் ஆதரவுக் குரலாகவும் மாறத்தொடங்கியது.

சுப்ராவுக்கும், சாமிவேலுவுக்கும் இடையில் நாடு தழுவிய அளவில் அரசியல் போராட்டங்கள், கட்சி மோதல்கள் நிகழ்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது.

அதனால், சுப்ரா தரப்பு செய்திகள் தமிழ் நேசனில் புறக்கணிக்கப்பட்டன. ஏன் அறவே நிறுத்தப்பட்டன என்று கூடக் கூறலாம். சுப்ராவின் அதிகாரத்துவ பத்திரிகை செய்திகளை, அறிக்கைகளை மட்டும் தமிழ் நேசனுக்கு அனுப்புவோம். சில சமயங்களில் பிரசுரமாகும். சில சமயங்களில் அதுவும் கூட பிரசுரமாகாது.

எனவே, சுப்ரா, பத்மா தரப்பினர் தங்களின்  செய்திகளை வெளியிட தமிழ் மலரையே அதிகம் நாடத் தொடங்கினர்.

தமிழ் நேசன் சாமிவேலு தரப்பு என்றும், தமிழ் மலர், சுப்ரா-பத்மா தரப்பு என்றும் வெளிப்படையான பிரிவினை ஏற்பட்டு பத்திரிகைப் போராட்டமும் தொடங்கியது.

தமிழ் மலர் நாளிதல் சுப்ராவுக்கு ஆதரவான செய்திகள், கட்டுரைகள் இடம் பெற்றாலும், வானம்பாடி புதியதொரு ஆதரவுத் தளத்தை சுப்ராவுக்கு ஏற்படுத்தித் தந்தது. குமணனோடு சேர்ந்து வானம்பாடியில் பணிபுரிந்த பலரும் சுப்ராவின் ஆதரவாளர்களாவும் மாறத் தொடங்கினர்.

இப்படியாக சுப்ரா – குமணன் இடையிலான நட்பு தொடர்ந்து கொண்டிருந்தபோது, 1980-ஆம் ஆண்டுகளின் இறுதியில் தமிழ் மலர் பத்திரிகையை மூடுவதற்கு திடீரென ஒரு நாள் உள்துறை அமைச்சு தடைவிதித்து உத்தரவிட்டது.

தமிழ் மலரை மூடிய உள்துறை அமைச்சு

தமிழ் மலரில் இந்து சமயத்தைப்பற்றி எழுதப்பட்ட ஒரு கட்டுரையில் இஸ்லாம் மதத்தைப் பற்றியும் அவர்களின் தொழுகை குறித்தும் சில தவறான விஷயங்கள் இடம் பெற்றன. நேரடியாக இஸ்லாத்தைக் களங்கப்படுத்தும் விதத்தில் அந்தக் கட்டுரையின் சில பகுதிகள் இருந்தன. உள்துறை அமைச்சுக்குப் புகார் போக, உடனடியாகத் தமிழ் மலரை மூடும் உத்தரவு வெளியிடப்பட்டது.

அந்த சம்பவத்தைத் தொடர்ந்து அப்போது தமிழ் நேசன் மட்டுமே நாட்டின் ஒரே தமிழ் நாளிதழாக வெளிவரத் தொடங்கியது.

அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ் நேசனில் சுப்ராவுக்கு எதிரான பல அம்சங்கள், செய்திகள் எழுதப்பட்டன. சுப்ரா கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள், அவரின் பத்திரிகை அறிக்கைகள் தமிழ் நேசனில் புறக்கணிக்கப்பட்டன.

அவற்றுக்குப் பதிலளிக்க சுப்ராவுக்கு வேறு வாய்ப்பு இருக்கவில்லை. அப்போது இணைய ஊடகங்களின் வசதியும் இல்லை.

வானம்பாடியின் மூலமாகத்தான் ஒரு வாரம் காத்திருந்து சிலசமயங்களில் தமிழ் நேசனில் எழுதப்பட்டதை மறுத்து எழுத முடியும்.

தமிழ் மலர் மீண்டும் வெளிவர எப்போது அனுமதி கிடைக்கும் என்ற விவரங்களும் தெரியவில்லை.1980-ஆம் ஆண்டின் இறுதியில் தொடங்கிய இந்த விவகாரம் 1981-ஆம் ஆண்டு தொடக்கத்திலும் தொடர்ந்தது.

1981 மஇகாவுக்கு தேர்தல் ஆண்டு. அப்போது சுப்ரா தேசிய உதவித் தலைவராக இருந்தார். 1979-ஆம் ஆண்டு கட்சித் தேர்தல்களில் சுப்ரா முதலாவது தேசிய உதவித் தலைவராகவும், பத்மா இரண்டாவது உதவித் தலைவராகவும் (டான்ஸ்ரீ) ஜி.பாசமாணிக்கம் மூன்றாவது தேசிய உதவித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர்.

மாணிக்கா மறைவினால் சாமிவேலு இடைக்காலத் தேசியத் தலைவராகியிருந்தார். காலியான துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட சுப்ரா தயாராகிக் கொண்டிருந்தார்.

நாடு முழுமையிலும் அவரின் ஆதரவாளர்களும் மாநிலத் தலைமைகளுக்குப் போட்டியிடத் தயாராகிக் கொண்டிருந்தனர். அவர்களின் அரசியல் நடவடிக்கைகளுக்கும் அறிக்கைகள், செய்திகளுக்கும் ஒரு நாளிதழ் தளம் அவர்களுக்குத் தேவைப்பட்டது.

இதற்கிடையில் 1979 தொடக்கத்தில் சுப்ரா செனட்டராக நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது துணையமைச்சராக இருந்த பத்மாவும், செனட்டராக இருந்த சுப்ராவும் இணைந்து தமிழ் மலரை மீண்டும் கொண்டு வர தீவிர முயற்சிகள் மேற்கொண்டனர்.

ஆனால், தமிழ் மலர் என்ற பெயரில் மீண்டும் அனுமதி தர முடியாது, வேறு ஒரு பெயரில் புதிய பத்திரிகைக்கு அனுமதி தருகிறோம். அதை தமிழ் மலர் நிர்வாகம் நடத்திக் கொள்ளலாம் என உள்துறை அமைச்சு கோடி காட்டியது.

அதன்படி “தினமணி” என்ற புதிய பத்திரிகைக்கான அனுமதிக்கு தமிழ் மலர் நிர்வாகம் சார்பில் விண்ணப்பம் சமர்ப்பிக்கப்பட்டது.

ஆனால் புதிய அனுமதி எப்போது வழங்கப்படும் என்பது உறுதியாகக் கூறப்படவில்லை.

அப்போது இது குறித்த பல சந்திப்புகளை, தொலைபேசி உரையாடல்களை தினமும் சுப்ரா, சம்பந்தப்பட்ட அரசாங்க அதிகாரிகளோடு நடத்தினார். நான் செயலாளர் என்ற முறையில் மஇகா கூட்டரசுப் பிரதேச அலுவலகத்திலும் அவரது வீட்டிலும் எப்போதும் உடனிருந்ததால், என்ன நடக்கிறது என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. சுப்ரா அப்போது மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவராகவும் இருந்தார்.

தமிழ் மலரை மீண்டும் கொண்டு வர, துணையமைச்சராக இருந்த பத்மாவுடன் இணைந்து, கடும் முயற்சிகள் மேற்கொண்ட சுப்ரா, அது வெளிவருமான என தெரியாத சூழ்நிலையில், ஒரு பாதுகாப்புக்காக இனி ஒரு நாளிதழ் தன் அரசியல் போராட்டங்களுக்காகத் தேவை என்பதையும் உணர்ந்தார். ஒரு புதிய பத்திரிகைக்கு விண்ணப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

அப்போது சுப்ராவின் நெருங்கிய அரசியல் சகாவாக இருந்தவர் தொழிலதிபர் க.சிவலிங்கம். சிலாங்கூர் மஇகாவில் கிள்ளான் வட்டாரத்தில் கிளைத் தலைவராக இருந்தார். பிற்காலத்தில் சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினராகவும், ஆட்சிக் குழு உறுப்பினராகவும் இருந்தவர்.

சிவலிங்கத்தின் பெயரிலேயே புதிய பத்திரிக்கைக்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க முடிவு செய்யப்பட்டது.

பத்திரிகை விண்ணப்பத்திற்கான எல்லா ஆலோசனைகளையும் ஆதி.குமணனே வழங்கினார். புதிய பத்திரிகைக்கு “தமிழ் ஓசை” என்ற பெயரை அவரே தேர்ந்தெடுத்தார். புதிய நாளிதழ் தொடங்கினால் குமணன்தான் ஆசிரியர் என்றும் சுப்ரா முடிவு செய்தார். குமணனும் வானம்பாடியை நடத்திக் கொண்டே நாளிதழ் பணிகளைத் தொடர்கிறேன் என்று உறுதி கூறியிருந்தார்.


அடுத்து :

மக்கள் தலைவரும், மக்கள் பத்திரிகையாளரும் கரங்கள் இணைந்த கதை” (பகுதி 3 – நிறைவு)

தொடர்புடைய கட்டுரை:

மேற்கண்ட கட்டுரையின் முதல் பகுதி

டான்ஸ்ரீ சுப்ராவும், ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 1)

டான்ஸ்ரீ சுப்ராவும் ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 2)

“தமிழ் ஓசை” நாளிதழ் தொடங்கப்பட்டது…