(மக்கள் தலைவர் எனப் போற்றப்பட்டவர் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம். மறைந்த பிரபல பத்திரிகையாளர் ஆதி.குமணன் அவர்களோ மக்கள் பத்திரிகையாளர் என்றும் இளைய தமிழவேள் என்றும் இன்றும் மலேசிய இந்தியர்களாலும், சக ஊடகவியலாளர்களாலும் நினைவு கூரப்படுபவர். சுப்ரா, ஆதி.குமணன் இருவரும் இணைந்து கரங்கோர்த்து மலேசிய தமிழ் நாளிதழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதும், சுப்ராவின் அரசியல் வளர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் ஆதி.குமணன் தனது வலிமை மிக்க எழுத்துகளால் ஆதரவுக் கோட்டை கட்டியதும் மலேசிய இந்தியர் வரலாற்றின் சில முக்கியப் பக்கங்கள். வெவ்வேறு தளங்களில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய இவர்கள் இருவரும் எந்தப் புள்ளியில் இணைந்தனர்? எவ்வாறு நெருங்கிய நட்பு கொண்டனர்? அந்த சம்பவங்களில் சிலவற்றின் நேரடி அனுபவங்களை ஆதி.குமணன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு (28 மார்ச்) விவரிக்கிறார் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன். மார்ச் 28-இல் இந்தக் கட்டுரையின் முதல் பகுதி இடம் பெற்றது. கட்டுரையின் இரண்டாவது பகுதி நேற்று (மார்ச் 29 இடம் பெற்றது. கட்டுரையின் 3-வது நிறைவுப் பகுதி தொடர்கிறது)
“தமிழ் ஓசை” நாளிதழ் தொடங்கப்பட்டது
தமிழ் மலருக்கு மாற்றாக “தினமணி”க்கு அரசாங்க அனுமதி கிடைப்பதற்கு முன்னரே யாரும் எதிர்பாராதவிதமாக “தமிழ் ஓசை” என்ற பெயரிலான புதிய பத்திரிக்கைக்கு அனுமதி கிடைத்து விட்டது.
இப்போது எழுந்த சிக்கல், புதிய பத்திரிக்கையை ஆரம்பிப்பதா அல்லது தமிழ் மலருக்கு மாற்றான தினமணி மீண்டும் வருவதற்கு காத்திருப்பதா என்பதுதான்!
1981-ஆம் ஆண்டு மஇகா கட்சித் தேர்தல்கள் தொடங்கியிருந்தன. மே மாதத்தில் நடைபெறவிருந்த சிலாங்கூர் மாநில மஇகா மாநாட்டுக்கு முன்பாக நமக்கென ஒரு பத்திரிகையைத் தொடங்கிவிட வேண்டும் என்ற ஆதரவாளர்களின் நெருக்குதல்கள் எழுந்தன.
எனவே, இனியும் காத்திருக்க முடியாது என முதலில் தமிழ் ஓசையைத் தொடங்கும் முடிவை எடுத்தார் சுப்ரா.
1981, மே 3-ஆம் தேதி மஇகா சிலாங்கூர் மாநிலத்திற்கான தேர்தல்கள் நிர்ணயிக்கப்பட்டிருந்தன. அதற்கான தீவிரப் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்தன.
சாமிவேலு இப்போது தேசியத் தலைவராகி விட்டதால் தனது சிலாங்கூர் மாநிலத் தலைமையிலிருந்து விலக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சிலாங்கூர் மஇகாவின் மாநிலத் தலைவராக போர்ட் கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினரும், (அப்போது அவர் நாடாளுமன்றச் செயலாளரும் கூட) மாநிலத்தின் நீண்டகாலச் செயலாளருமான வீ.கோவிந்தராஜ் போட்டியிட்டார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினராகவும் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த வி.எல்.காந்தன் முன்வந்தார். காந்தனின் அணியில் மற்றொரு சிலாங்கூர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வடிவேலு துணைத் தலைவராகப் போட்டியிட்டார்.
இந்த காலகட்டத்தில் சாமிவேலுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அவரின் அணியில் இருந்து விலகி சுப்ராவுக்குத் தனது ஆதரவை வழங்கி வந்தார் எம்.ஜி.பண்டிதன். அவரும் அவரின் அணியினரும் சிலாங்கூர் முழுக்க பம்பரமாகச் சுற்றி வந்து காந்தனுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
காந்தன் அணியினருக்கு இருந்த ஒரே பிரச்சனை அவர்கள் தரப்பு செய்திகளை வெளியிட தமிழ் நேசன் தவிர வேறு எந்த நாளிதழ்களும் இல்லையே என்பதுதான்.
எனவே, இனியும் காத்திருக்க முடியாது, தனது அரசியல் எதிர்காலத்தையும் தனக்கென ஆதரவுப் பத்திரிகை இல்லாத சூழல் பாதித்து விடும் என முடிவெடுத்தார் சுப்ரா. அவரது சொந்தப் பணத்தோடும், நண்பர்கள் சிலரின் உதவியோடும் தமிழ் ஓசை தொடங்கப்பட்டது.
ஜாலான் ஈப்போ பத்து கொம்பளக்ஸ் வளாகத்தில் அப்போது தமிழ் மலர் அமைந்திருந்த கட்டடத்திற்கு சில கட்டடங்கள் தள்ளி, தமிழ் ஓசையை அச்சடிப்பதற்கென அங்கேயே ஓர் அச்சு இயந்திரமும் ஏற்பாடு செய்யப்பட்டது.
எனவே, எப்போது தமிழ் மலருக்கு பதிலாக தினமணி வெளிவரும் என்ற நிச்சயமற்ற சூழலில் தனது அரசியல் போராட்டத்தில் பின்னடைவு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற ஒரே காரணத்துக்காக – ஆதரவாளர்களின் நெருக்குதல்களினால் – தமிழ் ஓசை நாளிதழை வெளிக்கொணர முடிவு செய்தார் சுப்ரா.
1 மே 1981-ஆம் ஆண்டு முதன் முதலாக தமிழ் ஓசை “டேப்லோய்ட்” வடிவில் வெளிவந்தது.
அன்றைக்கு முதல் நாள் இரவு. நாங்கள் எல்லாம் ஆர்வத்துடன் அந்த அச்சு இயந்திரத்தின் அருகில் நின்று கொண்டு கறுப்பும் வெள்ளையுமாக, அச்சுத் தரம் குறைந்தே வெளிவந்தாலும், அந்த டேப்லோய்ட் வடிவிலான (வழக்கமான தமிழ் நாளிதழின் சரி பாதி அளவு) முதல் தமிழ் ஓசை நாளிதழின் அச்சுப் பிரதியைப் பார்த்து, கையிலெடுத்து, மகிழ்ச்சிக் குரலோடு கைதட்டி ஆர்ப்பரித்த காட்சிகள் இன்னும் அழியாத சித்திரங்களாக கண்ணுக்குள் நிற்கின்றன.
இந்த நெருக்கடியான காலகட்டத்தில் சுப்ரா ஒரு விஷயத்தில் எப்போதுமே தெளிவாக இருந்தார். முதலில் “தினமணி” பத்திரிகை வெளிவர வேண்டும், அதன் பின்னரே தேவையிருந்தால் மட்டும் மூன்றாவது பத்திரிகையாக தமிழ் ஓசை வெளிவர வேண்டும் என்பதுதான் அது.
ஒருவேளை மே 1ஆம் தேதிக்கு முன்னரே தினமணி அனுமதி கிடைத்து வெளிவந்திருந்தால் தமிழ் ஓசை பிறந்திருக்குமா என்பது சந்தேகமே! பத்திரிகை உலகில் நுழைய வேண்டும் என்ற எண்ணமே சுப்ராவுக்கு எப்போதும் இருந்ததில்லை.
அரசியல் நெருக்கடிகள்தான் நாளிதழ் ஒன்றை நடத்தும் முடிவுக்கு அவரை உந்தித் தள்ளின.
குமணனும் சிறப்பான விற்பனையைக் கொண்டிருந்த வானம்பாடியில் ஐக்கியமாகியிருந்தார். அவரும் புதிய நாளிதழ் என்ற விவகாரத்தில் சுப்ராவுக்காக உதவி செய்யவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் ஈடுபட்டார்.
தினமணியும் தொடங்கப்பட்டது
தமிழ் ஓசை வெளிவந்த சில நாட்களிலேயே தினமணி நாளிதழுக்கான அனுமதியும் வழங்கப்பட்டதுதான் சிக்கலாகிவிட்டது.
ஏற்கனவே, ஓர் நாளிதழுக்குரிய கட்டமைப்பையும், ஆசிரியர் குழுவினரையும், சொந்த அச்சு இயந்திரத்தையும் தமிழ் மலர் நிர்வாகம் தயார் நிலையில் வைத்திருந்தது. அதனால் தினமணியும் தமிழ் ஓசை வெளிவந்த அடுத்த சில நாட்களிலேயே வெளியீடு கண்டது.
தமிழ் நேசன் மட்டும் ஒரே நாளிதழாக வெளிவந்து கொண்டிருந்த சூழலில், அப்போதிருந்த அரசியல் நெருக்கடிகள், போராட்டங்களினால், 3 தமிழ் நாளிதழ்கள் நாட்டில் உருவெடுத்தன.
இரண்டாவது நாளிதழாக தமிழ் ஓசை வெளியானதால், சுப்ரா ஆதரவாளர்கள், குமணன் வாசகர்கள் என அனைவரும் ஓசையை வாங்கத் தொடங்கி விட்டனர்.
வானம்பாடியிலிருந்து விலகிய குமணன்
தமிழ் ஓசையைத் தொடங்க சுப்ராவுக்கும், குமணனுக்கும் இடையில் பேச்சு வார்த்தை நடந்தபோது, “வானம்பாடி ஆசிரியராக இருந்து கொண்டே தமிழ் ஓசை ஆசிரியராகவும் பொறுப்பு ஏற்று நடத்துகிறேன். பிரச்சனையில்லை” என குமணன் கூறியிருந்தார்.
ஆனால், தமிழ் ஓசை ஏற்படுத்திய பரபரப்பும், தாக்கமும், குமணனுக்கும் வானம்பாடி உரிமையாளர் அப்துல் காதருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளைத் தோற்றுவித்தது.
“ஒன்று வானம்பாடியில் ஆசிரியராக இருங்கள். இல்லாவிட்டால் ஓசைக்கு ஆசிரியராகப் போய்விடுங்கள்” என்று அப்துல் காதர் உறுதியாகக் கூறிவிட்டார்.
வானம்பாடி நிறுவனத்திலும் குமணன் எந்த பங்குடமையையும் கொண்டிருக்கவில்லை.
இந்தக் கட்டத்திலும் குமணன் அப்துல் காதருடன் சமரசம் எதனையும் செய்து கொள்ளவில்லை.
தனது நெருங்கிய நண்பர்- தனது அரசியல் தலைவர் – நடத்தும் போராட்டக் களத்தில் – அவருக்குத் தோள்கொடுக்க – பத்திரிகை உலகத் தளபதியாக போரில் தானும் குதிக்க வேண்டும் – என்ற ஒரே நோக்கத்திற்காக வானம்பாடியை விட்டு விலகினார் குமணன்.
சுமார் மூன்று ஆண்டுகளாகக் கடுமையாகப் பாடுபட்டு, வானம்பாடியின் விற்பனை வளர்ச்சிக்காகத் தெருத் தெருவாக அலைந்து, வாரம் ஒன்றுக்கு 50 ஆயிரம் பிரதிகள் விற்பனை என்ற அளவுக்கு வானம்பாடியை உயர்த்திய குமணன் அதை அப்படியே விட்டு விட்டு வெளியேறும் அவல நிலைமை ஏற்பட்டது.
குமணனோடு, அவரின் நெருங்கிய பத்திரிகைத் தோழர்களும், பணியாளர்களும் அவருடன் இணைந்து வானம்பாடியில் இருந்து வெளியேறினர். அவர்கள் அனைவரின் புதிய தளமாக தமிழ் ஓசை அமைந்தது.
மூன்றாண்டுகள் பாடுபட்டு ஒரு தமிழ் வாரப் பத்திரிகையை வாரத்துக்கு 50 ஆயிரம் பிரதிகள் விற்பனை என்ற சாதனையை நிகழ்த்திய பின்னர், தனது அடுத்த களமாக ஒரு நாளிதழ் இருக்கட்டுமே என்ற உத்வேகம்கூட குமணனை தமிழ் ஓசை நோக்கி நகர்த்தியதற்கான காரணமாக இருந்திருக்கலாம்.
குமணன் குழுவினர் விலகிய பின்னர், அடுத்து வந்த ஆண்டுகளில் வானம்பாடியின் விற்பனை கடகடவென சரிந்து அதலப் பாதாளத்திற்கு சென்றது.
குமணனின் தலைமைத்துவ ஆற்றல் – ஊடக வியூகங்கள் – எழுத்துத் திறன் – சக பத்திரிகைத் தோழர்களையும் பணியாளர்களையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு – நீண்ட கால பத்திரிகை அனுபவங்கள் – வானம்பாடி மூலம் அவருக்கென விரிவடைந்திருந்த வாசகர் கூட்டம் – இப்படியாக எல்லாம் சேர்ந்து தமிழ் ஓசையின் விற்பனை கிடுகிடுவென அதிகரித்தது.
பொதுமக்கள், வாசகர்கள் என்ற இன்னொரு களத்திலோ – ஒரே அரசியல் தரப்பு செய்திகளை மட்டுமே படித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில் – பலதரப்பட்ட செய்திகளை நடுநிலையோடு தாங்கி வந்த தமிழ் ஓசையின் வரவுக்கு மாபெரும் வரவேற்பு கிடைத்தது.
நாடு முழுமையிலும் சுப்ரா தரப்பு ஆதரவாளர்கள் தமிழ் ஓசையை வாங்கத் தொடங்கினர். அவரின் அரசியல் ஆதரவாளர்கள் தமிழ் ஓசைக்கு ஆதரவான பிரச்சார பீரங்கிகளாகவே திகழ்ந்தனர்.
குமணனுக்கு அறிமுகமான பல பத்திரிகை விநியோகஸ்தர்கள் – சுப்ராவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு தந்து வந்த பத்திரிகை விற்பனையாளர்கள் – என தமிழ் ஓசையை மக்களிடத்தில் கொண்டு செல்வதில் பல தரப்பினர் முக்கியப் பணியாற்றினர்.
சொற்ப காலகட்டத்திலேயே 3 தமிழ் நாளிதழ்களில் அதிகமான எண்ணிக்கையிலான விற்பனையோடு முதலிடத்தைப் பிடித்தது தமிழ் ஓசை.
பின்னர் அந்தப் பத்திரிக்கை ஏன் சில ஆண்டுகளில் மூடப்பட்டது, அதற்கானப் பின்னணி காரணங்கள் என்பதெல்லாம் இன்னொரு 10 பக்கக் கட்டுரைக்கான உள்ளடக்கங்கள்! வாய்ப்பிருந்தால் பிறிதொரு நாளில் விவரிப்போம்.
-இரா.முத்தரசன்
மேற்கண்ட கட்டுரையின் முதல் பகுதி:
மக்கள் தலைவரும், மக்கள் பத்திரிகையாளரும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 1)
மேற்கண்ட கட்டுரையின் இரண்டாவது பகுதி :
மக்கள் தலைவரும், மக்கள் பத்திரிகையாளரும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 2)