Home One Line P1 டான்ஸ்ரீ சுப்ராவும், ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 1)

டான்ஸ்ரீ சுப்ராவும், ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 1)

1437
0
SHARE
Ad

(மக்கள் தலைவர் எனப் போற்றப்பட்டவர் மஇகாவின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ சி.சுப்பிரமணியம். மறைந்த பிரபல பத்திரிகையாளர் ஆதி.குமணன் அவர்களோ மக்கள் பத்திரிகையாளர் என்றும் இளைய தமிழவேள் என்றும் இன்றும் மலேசிய இந்தியர்களாலும், சக ஊடகவியலாளர்களாலும் நினைவு கூரப்படுபவர். சுப்ரா, ஆதி.குமணன் இருவரும் இணைந்து கரங்கோர்த்து மலேசிய தமிழ் நாளிதழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதும், சுப்ராவின் அரசியல் வளர்ச்சிக்கும் போராட்டத்திற்கும் ஆதி.குமணன் தனது வலிமை மிக்க எழுத்துகளால் ஆதரவுக் கோட்டை கட்டியதும் மலேசிய இந்தியர் வரலாற்றின் சில முக்கியப் பக்கங்கள். வெவ்வேறு தளங்களில் தங்களின் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கிய இவர்கள் இருவரும் எந்தப் புள்ளியில் இணைந்தனர்? எவ்வாறு நெருங்கிய நட்பு கொண்டனர்? அந்த சம்பவங்களில் சிலவற்றின் நேரடி அனுபவங்களை ஆதி.குமணன் அவர்களின் நினைவு நாளான இன்று (28 மார்ச்) விவரிக்கிறார் செல்லியல் இணைய ஊடகத்தின் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

1978-ஆம் ஆண்டில் அப்போது வெளிவந்து கொண்டிருந்த தமிழ் மலர் என்ற நாளிதழில் சில பத்திரிகையாளர்கள் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்ற செய்திகள் வெளிவரத் தொடங்கின.

அதைத் தொடர்ந்து, நீதிமன்ற வழக்குகளும் தொடுக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

தமிழ்மலரில் இருந்து வெளியேறிய பத்திரிகையாளர்களில் பிரபலமாக அடிபட்ட பெயர் ஆதி.குமணன். அவர்தான் தமிழ் மலர் நிருவாகத்துடனான போராட்டத்தை தலைமேயேற்று முன்னெடுத்தவர்.

அவருடன் அவரின் மூத்த சகோதரர் (அமரர்) இராஜகுமாரன், (அமரர்) அக்கினி சுகுமார், பெ.இராஜேந்திரன் (மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர்) உள்ளிட்ட சிலர் தமிழ் மலரிலிருந்து வெளியேறினர்.

அமரர் ஆதி.குமணன்

தமிழ் மலரில் துணை ஆசிரியர்களாகப் பணியாற்றியவர்கள் – பத்திரிகையாளர்கள் என்ற முறையில் தமிழ் மலரில் தங்களின் கட்டுரைகளையும் எழுத்தோவியங்களையும் படைத்தவர்கள் – என்பது தவிர அவர்களைப் பற்றி வெளியுலகத்தில் யாருக்கும் விரிவான தகவல்கள் தெரிந்திருக்கவில்லை.

ஆனால், அன்றைக்கு தமிழ் மலரில் இருந்து வெளியேறிய குழுவினர்தான் பிற்காலத்தில் மலேசியத் தமிழ் நாளிதழ், வார இதழ் என பத்திரிகை உலகின் வளர்ச்சிக்கும் விரிவாக்கத்திற்கும் பல முனைகளிலும் முன்னோடிகளாகத் திகழ்ந்தனர் என்பதை வரலாறு நிரூபித்தது.

தமிழ்மலரில் இருந்து வெளியேறிய பத்திரிக்கை குழுவினரில் இயல்பாகவே ஆதி.குமணனுக்கு மட்டுமே இலக்கியப் படைப்பாற்றலோடு, தலைமைத்துவப் பண்புகளும் அபாரமான துணிச்சலும், தன்னம்பிக்கையும் இருந்தது.

வானம்பாடியில் தொடங்கிய நட்பு

தமிழ் மலரிலிருந்து வெளிவந்த ஆதி.குமணன் குழுவினர், அப்துல் காதர் என்ற தமிழ் ஆர்வலரின் நிதி உதவியோடு, “வானம்பாடி” என்ற வாரப் பத்திரிகையைத் தொடங்கினர்.

அன்றைய நாளில் அது ஒரு துணிச்சலான முடிவுதான். காரணம், அப்போது ஓரிரு தமிழ் மாத இதழ்கள்தான் வெளிவந்து கொண்டிருந்தன. அவையும் திருப்திகரமான விற்பனையைக் கொண்டிருக்கவில்லை.

வாரப் பத்திரிகை என்பது தமிழ் நாட்டில் பிரபலமான அம்சம். மலேசியாவில் யாருமே அந்த முயற்சியை முறையாக அப்போது வரை மேற்கொள்ளவில்லை.

எனவே, அந்த முயற்சி வெற்றியடையுமா என்பற்கான உத்தரவாதமும் கிடையாது.

வானம்பாடியைத் தொடங்கி வைக்க சுப்ரா அழைக்கப்பட்டார்.

“வானம்பாடி” என்ற வார இதழைத் தொடங்க முடிவானதும், அதற்கான அரசாங்கப் பதிவு கிடைத்ததும் அந்தப் பத்திரிகையைத் தொடங்கி வைக்க ஆதி.குமணன் நாடிச் சென்ற அரசியல் தலைவர் சுப்ரா.

அப்போது சுப்ரா, அரசியலில் மிகவும் இறங்குமுகமான சூழலில் இருந்தார். 1977-ஆம் ஆண்டு நடைபெற்ற மஇகா தேசியத் துணைத் தலைவருக்கான தேர்தலில் (துன்) சாமிவேலுவிடம் தோல்வியைத் தழுவியிருந்தார்.

தொடர்ந்து 1978-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் டாமன்சாரா தொகுதியில் வி.டேவிட்டிடம் தோல்வியடைந்திருந்தார். சுப்ராவுக்கு இருந்த ஒரே பதவி மஇகா தலைமைச் செயலாளர் பதவிதான். அப்போது டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தேசியத் தலைவராகவும், சாமிவேலுவும் பத்மநாபனும் துணையமைச்சர்களாக இருந்தனர்.

எனவே, அவர்களையெல்லாம் நாடிப் போகாமல், அரசியல் போராட்டக் களத்தில் இரண்டு தொடர் தோல்விகளைச் சந்தித்திருந்த ஒருவரை, இனி இவருக்கு அரசியல் எதிர்காலம் இல்லை என சிலரால் பிரச்சாரம் செய்யப்பட்ட ஒருவரை, ஏதோ ஓர் ஈர்ப்பினால் ஆதி.குமணன் தேடிச் சென்றது விதியின் விளையாட்டுதான்.

கு.பத்மநாபனுடன் ஆதி.குமணன்

அந்த வரலாற்றுத் திருப்பம்தான் இருவரையும் ஒரு புள்ளிக்குள் கொண்டு வந்தது. இத்தனைக்கும் அவர்கள் இருவருக்கும் இடையில் அதற்கு முன்னர் நேரடிப் பழக்கமோ, நட்போ இருக்கவில்லை. பொது நிகழ்ச்சிகளின் போது சந்தித்திருக்கலாம். அவ்வளவுதான்.

அந்த காலகட்டத்தில் சுப்ராவுக்கு இருந்த சூழ்நிலையில் வானம்பாடி பத்திரிகையைத் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியையும் அவர் தனது சுயலாப அரசியல் காரணங்களுக்காகத் தவிர்த்திருக்கலாம்.


அடுத்து : (தொடர்புடைய கட்டுரைகள்)

டான்ஸ்ரீ சுப்ராவும் ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 2)

டான்ஸ்ரீ சுப்ராவும் ஆதி.குமணனும் கரங்கள் இணைந்த கதை (பகுதி 3)

வானம்பாடியிலிருந்து தமிழ் ஓசையிலும் தொடர்ந்து நட்பு…

(குறிப்பு : 28 மார்ச் 2021 தேதியிட்ட மக்கள் ஓசை நாளிதழிலும் மேற்கண்ட கட்டுரை பிரசுரமானது)