Home One Line P2 தமிழ்நாடு நட்சத்திரத் தொகுதிகள் : டிடிவி தினகரன் – கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி

தமிழ்நாடு நட்சத்திரத் தொகுதிகள் : டிடிவி தினகரன் – கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி

1022
0
SHARE
Ad

Selliyal Video | Tamil Nadu Star constituencies (2) | TTV Dhinakaran challenges Kadambur Raju in Kovil Patti | 26 March 2021 | செல்லியல் காணொலி | தமிழ் நாடு நட்சத்திரத் தொகுதிகள் (2) – டிடிவி தினகரன் –  கடம்பூர் ராஜூ மோதும் கோவில்பட்டி | 26 மார்ச் 2021

மேற்கண்ட செல்லியல் காணொலியின் கட்டுரை வடிவம் :

ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவிருக்கும் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் கோவில்பட்டி தொகுதியைப் பார்ப்போம்.

#TamilSchoolmychoice

ஆளும் அதிமுக அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவர் கடம்பூர் ராஜூ. அவர் மீண்டும் இந்த முறை இந்தக் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

அவரை எதிர்த்துக் களம் காணவிருப்பது அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்.

இதன் காரணமாகத்தான் கோவில்பட்டி தொகுதியும் நட்சத்திரத் தொகுதிகளில் ஒன்றாக அனைவராலும் உன்னிப்பாகப் பார்க்கப்படுகிறது.

திடீரென யாரும் எதிர்பாராதவிதமாக தினகரன் இந்தத் தொகுதியை ஏன் தேர்ந்தெடுத்தார் என்பது இன்னும் பலருக்குப் புரியாத புதிராக இருக்கிறது.

2011-ஆம் சட்டமன்றத் தேர்தலில் சுமார் 26,480 வாக்குகள் பெரும்பான்மையில் இந்தத் தொகுதியைக் கைப்பற்றினார் கடம்பூர் ராஜூ. ஆனால் 2016 சட்டமன்றத் தொகுதியில் வெறும் 428 வாக்குகள் பெரும்பான்மையிலேயே கடம்பூர் ராஜூ கோவில்பட்டியில் வெற்றி பெற முடிந்தது.

அதிமுக அமைச்சர் ஒருவர் மிகக் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தொகுதி கோவில்பட்டி என்பதால், சுலபமாக வென்று விடலாம் என்ற எண்ணத்தில் தினகரன் இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்.

அவர் சார்ந்திருக்கும் சமூகத்தின் வாக்குகளும் கணிசமாக இருக்கின்ற காரணத்தால் இந்தத் தென்மாவட்டத் தொகுதியைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் தினகரன் என்ற கருத்தும் நிலவுகிறது.

அப்படியே தினகரன் கடம்பூர் ராஜூவைத் தோற்கடிக்க முடிந்தால், அதிமுக ஒரு தொகுதியில் தோல்வியடைந்ததற்கு தான் காரணமாக இருந்ததற்கு தினகரன் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

அதிமுக அமைச்சர் ஒருவரைத் தோற்கடித்தேன் என மார்தட்டிக் கொள்ளலாம்.

ஆனால், கள நிலவரம் அவருக்கு சாதகமாக இல்லை என்றுதான் ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல் காரணம், சசிகலா அரசியலில் இருந்து ஒதுங்குகிறேன் என விடுத்திருக்கும் அறிவிப்பு. டிடிவி தினகரனுக்கென தனி ஆதரவுக் களமோ, மக்கள் பலமோ எதுவும் இல்லை. சசிகலா மீது இருக்கும் அனுதாப அலையும், ஜெயலலிதா விசுவாசிகள் சசிகலா மீது வைத்திருக்கும் மரியாதையையும்தான் தினகரன் முதலீட்டாகக் கொண்டு செயல்பட்டு வந்தார்.

ஆனால், சசிகலா அரசியலைவிட்டே ஒதுங்கியிருப்பதால் காற்றிழந்த பலூனாகிவிட்டார் தினகரன். இந்நிலையில் அவருக்கென மக்கள் ஆதரவு திரளுமா என்பது சந்தேகம்தான்.

இப்போது அவருக்கிருக்கும் ஒரே சாதகமான பிம்பம், எந்தப் பிரச்சனையானாலும் துணிச்சலுடன் பத்திரிகையாளர்களையும், பொதுமக்களையும் சந்திக்கிறார். முகம் சுளிக்காமல், ஆத்திரப்படாமல், சிரித்த முகத்துடன் எல்லாக் கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் சொல்கிறார் என்பதுதான்.

ஆனால், அமைச்சர் ஒருவருடன் மோதும்போது இந்த ஒரே ஒரு சாதக அம்சம் மட்டும் போதுமா என்பது கேள்விக் குறிதான்.

கடம்பூர் ராஜூவுக்கு சில கூடுதலான சாதக அம்சங்கள் இருக்கின்றன. மூன்றாவது முறையாக இதே தொகுதியில் களம் காண்பது அனுபவரீதியாக அவருக்கு சாதகம்.

அதிமுக கட்சிக் கட்டமைப்பின் பலமும், அமைச்சர் என்ற அதிகார பலமும், தாராளமாக செலவு செய்யக் கூடிய வசதியும் அவருக்கு இருக்கும் மற்ற சில சாதகங்கள்.

எல்லாவற்றையும் விட முக்கியமான சாதக அம்சம் இந்த முறை திமுக நேரடியாக இங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை. கோவில்பட்டி தொகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்க்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. கம்யூனிஸ்ட்ஸ் கட்சி சார்பாக போட்டியிடுவது கே.சீனிவாசன் என்ற அவ்வளவாக அறிமுகமில்லாத வேட்பாளர்.

பொதுவாக கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்கள் தேர்தலில் தாராளமாக செலவு செய்ய மாட்டார்கள்.

எனவே, திமுக கூட்டணி வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவார் என்றாலும் கடம்பூர் ராஜூவைத் தோற்கடிக்கும் அளவுக்குப் பெறுவாரா என்பது சந்தேகம்தான்.

கோவில்பட்டித் தொகுதியில் சீமானின் நாம் தமிழர் கட்சியும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யமும் கூட போட்டியிடுகின்றன. எனினும் பிரபலமில்லாத வேட்பாளர்கள் என்பதால் அவர்கள் சொற்ப வாக்குகளையே பெறுவர் எனக் கணிக்கப்படுகிறது.

கோவில்பட்டித் தேர்தலில் டிடிவி தினகரன் எத்தனை வாக்குகளைப் பெறுவார் – அதிலும் அதிமுக வாக்கு வங்கியை உடைத்து கடம்பூர் ராஜூவுக்கு எதிராக அதனைத் திசை திருப்புவாரா – என்பதுதான் அனைவராலும் இந்த நட்சத்திரத் தொகுதியில் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறது.

அந்த ஓர் அம்சம்தான் கடம்பூர் ராஜூவின் வெற்றியையும் கோவில் பட்டித் தொகுதியில் நிர்ணயிக்கப் போகிறது.

-இரா.முத்தரசன்