கோலாலம்பூர் : மனிதவள அமைச்சின் பெர்கேசோ (சொக்சோ) வழி மற்றுமொரு இயங்கலை வழியிலான வேலை வாய்ப்புக் கண்காட்சி, நேர்முகத் தேர்வு பட்டதாரிகளின் பயனுக்காக நடத்தப்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகள் பல்வேறு துறைகளில் தங்களது பட்டப்படிப்பை முடித்து வேலைக்குத் தயாராகுகிறார்கள். ஆனால் எல்லா காலகட்டத்திலும் படித்த படிப்பிற்கான வேலை சுலபமாகக் கிடைப்பதில்லை. அதுவும் அதிகமாக நடமாட்டக் கட்டுப்பாட்டைச் சந்தித்த கடந்த ஒரு வருட காலத்தில் வேலை கிடைப்பது குதிரைக் கொம்பாக இருந்து வருகிறது.
இந்த பிரச்சனையை எதிர்கொள்ள. வேலையில்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க மனிதவள அமைச்சின் கீழ் பெர்கேசோ வழி கடந்த மார்ச் 2019 முதல் 280க்கும் மேற்பட்ட வேலைக்கான கண்காட்சி நேரடியாகவும், இயங்கலை வழியாகவும் நடத்தப்பட்டுள்ளது. இதன் வழி 160,000 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வெற்றிகரமாக வேலையைப் பெற்றுள்ளனர்.
ஆக அந்த வரிசையில் இன்று தொடங்கி 3 நாட்களுக்கு, மார்ச் 29 முதல் மார்ச் 31 வரை பட்டதாரிகளுக்கானப் பிரத்தியேக இயங்கலை வழி வேலைவாய்ப்புக்கான செயல்திட்டம் நடைபெறும்.
வேலை தேடி வரும் பட்டதாரிகள் உடனடியாக https://careerfair.perkeso.gov.my/ எனும் இணைத்தளத்தில் உங்களைப் பதிந்து கொள்ள வேண்டும்.
CISCO Webex வழி இந்த webinar மற்றும் நேர்முகக் கண்காட்சி இடம்பெறும். மார்ச் 29 நடைபெறும் webinar இல் பணியிடத்தின் நுணுக்கங்கள், ஆங்கிலப் புலமை போன்ற அடிப்படை விஷயங்களை அறியலாம். தொழில் அனுபவம் இல்லாத பட்டதாரிகள் இதுபோன்ற உரைகளைக் கேட்பதன் வழி மனதளவில் தங்களைத் தயார் படுத்திக் கொள்ள முடியும். அதற்கான பயிற்சியாகவும் இந்த பட்டதாரிகளுக்கான வேலை வாய்ப்புக் கண்காட்சி அமையும்.
அடுத்த இரண்டு நாட்களுக்கு நேர்முகத் தேர்வு இயங்கலை வழியாகவே நடைபெறும். தொடர்புத்துறை, அலுவலக பணியாளர்கள், விற்பனைத்துறை, கிராஹ்பிக் என்ற வரைகலை, டெலிமார்கெடிங் என்ற தொலைபேசி வழியாக சந்தைப்படுத்துதல் போன்ற துறைகளுக்கான பல்வேறு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன. இந்த வாய்ப்பைப் பட்டாதாரிகள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகளாவிய நிலையில் கொரோனாவின் பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலையும், வேலையில்லா நிலையையும் தவிர்க்க பட்டதாரிகள் இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது. கிடைக்கின்ற வாய்ப்பைப் புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.