Home One Line P1 ‘தேசிய முன்னணிக்கு பிரதமர் யார்?’- விக்னேஸ்வரன்

‘தேசிய முன்னணிக்கு பிரதமர் யார்?’- விக்னேஸ்வரன்

546
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தனித்து நின்று போட்டியிடும் என்றால், அதன் பிரதமர் வேட்பாளராக யார் இருப்பது என்ற கேள்விகள் இருப்பதாக மஇகா தலைவர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

“நீங்கள் போருக்குப் போகிறீர்கள் என்றால், உங்களுக்கு ஒரு தலைவர் தேவை. தேசிய முன்னணி தலைவர் (பிரதமர்) யார்? இது தீர்க்கப்பட வேண்டும். தலைவர் இல்லாமல் ஒரு கொடியின் கீழ் நாம் தேர்தலை எதிர்கொள்ள முடியாது,” என்று அவர் நேற்று மாலை மலேசியாகினியிடம் கூறினார்.

ஏப்ரல் 3-ஆம் தேதி நடக்க இருக்கும் மஇகா பொதுப் பேரவையில் பேராளர்கள் எழுப்பும் கேள்விகளில் இதுவும் ஒன்று என்று விக்னேஸ்வரன் கூறினார்.

#TamilSchoolmychoice

“கட்சி பேராளர்கள் எங்கள் நிலைப்பாடு என்ன என்பதை அறிய விரும்புகிறார்கள். மேலும் தேசிய முன்னணி உடன் இருந்தால், அடுத்த பிரதமராக யார் இருப்பார்? இந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கப்பட வேண்டி உள்ளது,” என்று அவர் மேலும் கூறினார்.

தேசிய முன்னணியைப் பிரதிநிதித்து மஇகா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும், ஆனால் ஒரு தெளிவான திட்டம் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

“இப்போதைக்கு, நாங்கள் தேசிய முன்னணியின் கீழ் போட்டியிடுவோம். மஇகா தேசிய முன்னணியுடன் இருக்கிறது. ஆனால், தேசிய முன்னணியில், நாங்கள் எவ்வாறு தேர்தலுக்குப் போகிறோம் என்பது பற்றிய தெளிவான பாதை இருக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

அம்னோவுக்கு எது சிறந்தது என்று கருதுவதை அடிப்படையாகக் கொண்டு பெர்சாத்துவுடனான தனது உறவு குறித்து அம்னோ ஒரு முடிவை எடுத்துள்ளது என்று குறிப்பிட்ட விக்னேஸ்வரன், மற்ற தேசிய முன்னணி கட்சிகளும் அவ்வாறே செய்வார்கள் என்று கூறினார்.

“பெர்சாத்துவுடன் இணைந்து பணியாற்றலாமா வேண்டாமா என்பதை மஇகா முடிவு எடுக்கும், இது எங்கள் சொந்த முடிவு. எனவே எல்லோரும் இப்போது அந்தந்த கட்சிக்கு நல்லது என்று தங்கள் முடிவை எடுக்கப்பார்கள். மசீச அதன் சொந்த முடிவை எடுக்கும், மஇகா அதன் முடிவை எடுக்கும்,” என்று அவர் கூறினார்.

நம்பிக்கை கூட்டணியுடன் இணைந்து பணியாற்ற மஇகா தயாரா என்று கேட்டதற்கு, மஇகா தொடர்ந்து தனது சொந்தக் காலில் நின்று மலேசிய இந்திய சமூகத்திற்காகப் போராடும் என்று விக்னேஸ்வரன் வலியுறுத்தினார்.