கூச்சிங் : கொவிட்-19 தடுப்பூசி செலுத்திக் கொண்ட மலேசியர்கள் தடையின்றி மாநிலங்களுக்கிடையில் பயணம் செய்ய முடியும் என்ற பரிந்துரை ஆலோசிக்கப்படுகிறது.
பிரதமர் மொகிதின் யாசின் இந்தத் தகவலை வெளியிட்டார். நேற்று (ஏப்ரல் 1) சரவாக் மாநிலத்திற்கான தனது வருகையின் ஒரு பகுதியாக கூச்சிங்கில் நடைபெற்ற மக்களுடனான கலந்துரையாடலின்போது மொகிதின் இந்தத் தகவலை வெளியிட்டார்.
தேசியப் பாதுகாப்பு மன்றத்தோடு இதுகுறித்து விவாதித்திருப்பதாகவும் குறிப்பிட்ட பிரதமர், இரண்டு அளவை (டோஸ்) தடுப்பூசி போட்டுக் கொண்டு அதற்குரிய சான்றிதழையும் கொண்டிருந்தால் ஒருவர் எங்கு வேண்டுமானாலும் பயணம் செய்யலாம் என அனைத்துலக ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.
அரசாங்கம் 33.7 மில்லியன் கொண்ட மலேசிய மக்கள் தொகையில் 24.2 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் இலக்கை அரசாங்கம் கொண்டிருக்கிறது.
இதுவரையில் 30 விழுக்காட்டினர் அதாவது 7.5 மில்லியன் மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளத் தங்களைப் பதிந்து கொண்டுள்ளனர்.