Home நாடு ஐபிஎப் கட்சி தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

ஐபிஎப் கட்சி தலைவர்களுடன் விக்னேஸ்வரன் சந்திப்பு

1278
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நேற்று ஐபிஎப் கட்சிகளின் தலைவர்கள் சிலருடன் சந்திப்புக் கூட்டம் ஒன்றை நடத்தினார். மலேசிய இந்திய சமூகத்தினரின் ஒற்றுமை, சிறுசிறு கட்சிகளாக இந்தியர்களின் அரசியல் பலம் பிரிந்து கிடப்பதால் எதிர்நோக்கப்படும் பிரச்சனைகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சந்திப்பை உறுதிப்படுத்திய ஐபிஎப் தலைவர்களில் ஒருவரான டத்தோ பஞ்சமூர்த்தி விக்னேஸ்வரனுடனான சந்திப்பு குறித்து விளக்கமளித்தார்.

“டான்ஸ்ரீ விக்னேஸ்வரனின் அழைப்பின் அடிப்படையில் மரியாதை நிமித்தம் அவரைச் சந்தித்தோம். இந்திய சமுதாயம் பிளவுபட்டுக் கிடக்கிறது. நமது சமுதாயத்தில் ஒற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தை விக்னேஸ்வரன் எங்கள் முன்வைத்திருந்தார். அந்தக் கோரிக்கை நியாயமான ஒன்றாக இருந்ததால் நாங்களும் அவரைச் சந்திக்க முடிவு செய்தோம்” என பஞ்சமூர்த்தி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“மலேசிய இந்திய சமுதாய ஒற்றுமைக்காக எங்களால் முடிந்த அனைத்தையும் நாங்கள் செய்வோம். எங்களால் இயன்ற ஒத்துழைப்பையும் தருவோம் என நாங்கள் டான்ஸ்ரீயிடம் வாக்குறுதி அளித்திருக்கிறோம். நாங்கள் வழங்கியிருக்கும் வாக்குறுதியின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை விக்னேஸ்வரன் முன்னெடுக்கவிருக்கிறார். தனது நடவடிக்கைகள் குறித்து தெரிவிப்பதாகவும் கூறியிருக்கிறார். எங்களின் நோக்கமெல்லாம் நாமெல்லாம் ஒன்றுபட வேண்டும். அதன் மூலம் பலமான சமுதாயமாகத் திகழ வேண்டும் என்பதுதான். இதையேதான் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனும் விரும்புகிறார். எங்களின் விருப்பமும் அதுதான். அதனால்தான் விக்னேஸ்வரன் அழைத்தவுடன் நாங்கள் அவரைச் சந்தித்தோம். இதுதான் எங்களின் இருதரப்புக்கும் இடையிலான சந்திப்புக்கான காரணம். மற்றபடி இந்த சந்திப்பில் வேறு எந்த உள்நோக்கமும் கிடையாது” என்றும் பஞ்சமூர்த்தி மேலும் தெரிவித்தார்.

சிறிய அரசியல் கட்சிகள் மஇகாவுடன் இணைய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வரும் விக்னேஸ்வரன் அண்மையில் நடைபெற்ற மஇகா தேசியப் பேராளர் மாநாட்டிலும் இதே கருத்தை தனது தலைமையுரையில் வலியுறுத்தியிருந்தார்.

அந்த அடிப்படையில் ஐபிஎப் கட்சி பிரதிநிதிகளுடனான இந்த சந்திப்பை விக்னேஸ்வரன் நடத்தியிருக்கிறார்.