வாஷிங்டன்: கடந்த ஆண்டு மினியாபோலிஸில் ஆப்பிரிக்க- அமெரிக்கர் ஜார்ஜ் பிளாய்ட் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரியை அமெரிக்க நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது.
45 வயதான டெரெக் சௌவின் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது பிளாய்டின் கழுத்தில் ஒன்பது நிமிடங்களுக்கும் மேலாக மண்டியிட்டது படமாக்கப்பட்டது.
பரவலாகப் பார்க்கப்பட்ட அக்காணொலி இனவெறி மற்றும் காவல்துறையினரின் அதிகப்படியான அதிகாரத்தைப் பயன்படுத்தியதற்காக உலகளாவிய எதிர்ப்புக்களைத் தூண்டின.
சௌவின் மூன்று குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார். அவர் தண்டனை பெறும் வரை அவர் காவலில் இருப்பார்.
அதிபர் ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆகியோர் தீர்ப்புக்குப் பின்னர் பிளாய்ட் குடும்பத்தை அழைத்தனர்.
“குறைந்தபட்சம் இப்போது கொஞ்சம் நீதி கிடைத்துள்ளது. நாங்கள் இன்னும் நிறைய வேலைகளைச் செய்யப் போகிறோம். இது இனவெறியைக் கையாள்வதற்கான முதல் நடவடிக்கையாக இருக்கும்” என்று பைடன் கூறினார்.