Home நாடு “அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த விக்னேஸ்வரன்

“அன்று கிளைக்கு சேவகன்; இன்று கட்சியின் தேசியத் தலைவர்” – நெகிழ்ச்சியுடன் நினைவு கூர்ந்த விக்னேஸ்வரன்

784
0
SHARE
Ad

போர்ட் கிள்ளான் : கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே 2) போர்ட் கிள்ளான், திருவள்ளுவர் மண்டபத்தில் மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆண்டுக் கூட்டத்தில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ செல்லத்தேவனும் கலந்து சிறப்பித்தார். மஇகா தலைமையகத்தின் பிரதிநிதியாக தேசிய உதவித் தலைவர் டத்தோ டி.முருகையா கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் மஇகா சாமி ரோட் கிளையின் தலைவருமான டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு உரையாற்றியபோது சில நெகிழ்ச்சியானத் தருணங்களை நினைவு கூர்ந்தார்.

டி.முருகையாவுக்கு மஇகா கிள்ளான் தொகுதி தலைவர் தர்மலிங்கம் மாலை அணிவித்து சிறப்பு செய்கிறார்.
#TamilSchoolmychoice

தனது தந்தையார் சன்னாசி ஜேபி மஇகா சாமி ரோட் கிளையின் முன்னாள் தலைவராகப் பணியாற்றியபோது நூற்றுக்கணக்கான உறுப்பினர்களுடன் இந்தக் கிளையின் ஆண்டுக் கூட்டம் நடைபெறும் என்பதை விக்னேஸ்வரன் குறிப்பிட்டார்.

இந்த சாமிரோட் கிளையில் இருந்துதான் போர்ட் கிள்ளான் வட்டாரத்தில் இன்று இயங்கும் பல கிளைகள் பிரிந்து சென்றன என்பதையும் விக்னேஸ்வரன் ஆண்டுக் கூட்டத்தில் திரளாகக் கலந்து கொண்டிருந்த உறுப்பினர்களிடம் நினைவுபடுத்தினார்.

சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தில் நிறைய அளவில் இளைஞர்கள் கலந்து கொண்டிருப்பது தனக்கு மகிழ்ச்சி தருவதாகக் குறிப்பிட்ட விக்னேஸ்வரன் “அவர்களையெல்லாம் இந்த ஆண்டுக் கூட்டத்தில் பங்கு கொள்ளச் செய்ய வேண்டும். கட்சியிலும் கிளை அளவிலும் நாங்கள் செய்து கொண்டிருப்பது என்ன என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும். அவர்களையும் கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுத்த வேண்டும், என்ற நோக்கங்களோடுதான் நான் நிறைய இளைய தலைமுறை உறுப்பினர்களை இந்த முறை ஆண்டுக் கூட்டத்திற்கு வரவழையுங்கள் என செயற்குழு உறுப்பினர்களிடம் கோரிக்கையாக வைத்தேன். அதன்படி நிறைய இளைஞர்கள் இங்கு கலந்து கொண்டிருக்கிறீர்கள். இன்றைய ஆண்டுக் கூட்ட அறிக்கையைப் பார்க்கும்போது நாம் எவ்வளவு பெரிய கட்சி, எவ்வளவு சொத்துகளைக் கொண்டிருக்கிறோம், மக்களுக்காக எப்படியெல்லாம் பாடுபட்டு வருகிறோம் என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருக்க முடியும்” என்றார்.

தொடர்ந்து மஇகாவின் சொத்து விவரங்களைப் பட்டியலிட்ட விக்னேஸ்வரன், மஇகா தலைமையகத்திற்கு அடுத்து அமைந்திருக்கும்  நிலத்தில் பிரம்மாண்டமான அடுக்குமாடி கட்டடம் உருவாகவிருப்பதையும், அங்கு என்னென்ன வசதிகள் இந்திய சமூகத்திற்குக் கிடைக்கும் என்றும் விரிவாக எடுத்துரைத்தார்.

“இவையெல்லாம் நமக்குப் பின்னால் வரும் நமது சந்ததிகளுக்கு பயன்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

அன்று சேவகன், இன்று தேசியத் தலைவர்

“எங்களின் தந்தையார் சன்னாசி அவர்கள் கிளைத்தலைவராக இருந்து மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டத்தை இதே திருவள்ளுவர் மண்டபத்தில் நடத்துவார். அப்போது என்னைப் போன்ற இளைஞர்கள் அப்போது பின்னால் இருந்து உறுப்பினர்களுக்கு தேநீர், பலகாரங்களை வழங்கும் சேவைகளைச் செய்வோம். அந்த சம்பவங்களை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அதன் பின்னர் எனது அரசியல் பயணமும் இந்தக் கிளையில் இருந்துதான் தொடங்கியது. தொகுதித் தலைவர், இளைஞர் பகுதித் தலைவர், தேசிய உதவித் தலைவர் என படிப்படியாக வளர்ச்சி பெற்று இன்றைக்கு இந்தக் கட்சியின் தேசியத் தலைவராக உங்கள் முன் நிற்கிறேன். இதை எதற்கு உங்களிடம் கூறுகிறேன் என்றால், அடிமட்டத்திலிருந்து மக்களுக்கு சேவை செய்வதை நீங்கள் தொடர்ந்து கொண்டிருந்தால், கட்சியிலும், அரசியல் ரீதியாகவும் உங்களுக்கு வாய்ப்புகள் கண்டிப்பாகக் கிடைக்கும். அந்த வகையில் என்னை அரசியலில் இவ்வளவு உயரத்திற்கு உயர்த்திய மஇகா சாமி ரோட் கிளை உறுப்பினர்களுக்கு எனது நன்றியை இந்த வேளையில் கூறிக் கொள்கிறேன்” என்றும் விக்னேஸ்வரன் தனதுரையில் தெரிவித்தார்.

விக்னேஸ்வரனுக்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம்

சாமிரோட் கிளையின் கிளை ஆண்டுக் கூட்டத்தின் நிறைவின்போது, கீழ்க்காணும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது:-

மஇகா சாமி ரோட் கிளையின் தலைவரும், மஇகா தேசியத் தலைவருமான டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களின் தலைமைத்துவத்திற்கு தொடர்ந்து முழுமையான ஆதரவை வழங்குவதோடு;

மஇகா மத்திய செயலவையின் ஒப்புதலோடு, எதிர்வரும் 15-வது பொதுத் தேர்தல் தொடர்பில் மஇகா தேசியத் தலைவர் எடுக்கும் அரசியல் கூட்டணி தொடர்பான எல்லா முடிவுகளுக்கும் மஇகா சாமி ரோட் கிளை உறுப்பினர்கள் தங்களின் முழு ஆதரவைத் தெரிவித்துக் கொள்கின்றனர்.

இந்தத் தீர்மானம் குறித்து விளக்கிய விக்னேஸ்வரன், நடந்து முடிந்த தேசியப் பேராளர் மாநாட்டில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட முடிவுக்கு ஏற்ப மஇகா சாமிரோட் கிளையின் தீர்மானமும் அமைந்திருக்கிறது எனக் குறிப்பிட்டார்.

தற்போது நாட்டில் மாறிவரும் அரசியல் சூழ்நிலைகள், கூட்டணிகள் காரணமாக மஇகாவும் புதிய அரசியல் சிந்தனையுடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது என்றும் அதற்கேற்பவே இந்தத் தீர்மானமும் அமைந்திருப்பதாக விக்னேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

கொவிட்-19 கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் ஆண்டுக் கூட்டம்

மஇகா சாமிரோட் கிளையின் ஆண்டுக் கூட்டம் நடப்பிலிருக்கும் கட்டுப்பாட்டு நிபந்தனைகளுடன் நடைபெற்றதோடு, வருகை தந்த உறுப்பினர்களுக்கு இலவசமாக கொவிட்-19 பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. பரிசோதனைகளின் முடிவுகள் ஐந்து நிமிடங்களுக்குள் உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டன.