கோலாலம்பூர்: நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்படும் சிலாங்கூரில் உள்ள பள்ளிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை உடனடியாக விவரிக்குமாறு நம்பிக்கை கூட்டணி தேசிய கூட்டணி அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது.
சிலாங்கூரில் ஆறு மாவட்டங்கள் நாளை முதல் மே 17 வரை நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் வைக்கப்படும் என்ற அரசாங்கத்தின் சமீபத்திய அறிவிப்பைத் தொடர்ந்து இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுவரையில், கல்வி அமைச்சகம் இப்பகுதியில் உள்ள பள்ளிகளுக்கான நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை இதுவரை அறிவிக்கவில்லை என்பதை நம்பிக்கை கூட்டணி கல்வி குழு கூறியுள்ளது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் கீழ் உள்ள பள்ளிகள் உடனடியாக மூடப்படுமா அல்லது நோன்பு பெருநாள் விடுமுறைகள் தொடங்கும் வரை தொடருமா? அரை ஆண்டு தேர்வை நடத்தும் பள்ளிகள் இருப்பதால் கல்வி அமைச்சு உடனடியாக இந்த அறிவிப்பை வெளியிட வேண்டும்,” என்று அது இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தது.
இந்த அறிக்கையை சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் மஸ்லீ மாலிக், பிகேஆரைச் சேர்ந்த நிக் நஸ்மி நிக் அகமட், ஜசெகவைச் சேர்ந்த தியோ நீ சிங் மற்றும் அமானாவைச் சேர்ந்த டாக்டர் ஹசான் பஹாரோம் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.