Home நாடு சா.ஆ.அன்பானந்தன் – சில நினைவுகள்

சா.ஆ.அன்பானந்தன் – சில நினைவுகள்

2271
0
SHARE
Ad

(தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் முதல் தேசியத் தலைவர்; நாடக, வானொலிக் கலைஞர்; சிறந்த கவிஞர், எழுத்தாளர்; நாடெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான அன்புத் தம்பிகள் “அண்ணன் அன்பு” என மரியாதையுடன் அழைத்து மகிழ்ந்த தலைவர்; சமூகப் போராளி; இப்படியாகப் பன்முகத் திறன்கள், ஆற்றல் கொண்ட சா.ஆ.அன்பானந்தன் அவர்களின் நினைவு நாள் இன்று. அவர் குறித்த சில நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

எனது பதின்ம வயதில் அண்ணன் சா.ஆ.அன்பானந்தன் பற்றி எனக்கு முதன் முதலில் எடுத்துக் கூறியவர் எனது மூத்த சகோதரர் இரா.அண்ணாமலை அவர்கள்.

நான் பிறந்து வளர்ந்த அதே செந்துல் பகுதியில் வசித்தவர் அன்பானந்தன். அவர் இளம் வயதில் வசித்த வீட்டைப் பலமுறை கடந்து சென்றிருக்கின்றேன்.

எனது சகோதரரும் அன்பானந்தனும் நெருங்கிய நண்பர்கள். செந்துல் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்பதால் இருவருக்கும் இடையில் அறிமுகம் இருந்தது. அம்பாங் பகுதியில் என் சகோதரர் ஹாரிசன் குரோஸ்பீல்ட் என்ற நிறுவனத்தில் வேலை செய்தார். அன்பானந்தனோ டெலிகோம் எனப்படும் தொலைபேசித் தொடர்புத் துறை இலாகாவில் பணிபுரிந்தார். இருவரும் அருகருகே வேலை செய்ததால் அங்கு அடிக்கடி சந்தித்துக் கொள்வார்களாம். ஒன்றாக மதிய உணவருந்துவார்களாம். அன்பானந்தனைப் பற்றியும், அவருடனான நட்பு பற்றியும் பலமுறை என் சகோதரர் பெருமையுடன் கூறிவந்த காரணத்தால் அன்பானந்தன் என்ற பெயரின் அறிமுகமும், அவரைப் பற்றியும் எனக்குப் பரிச்சயமானது.

#TamilSchoolmychoice

அப்போதெல்லாம் தமிழ் நாளிதழ்களில் அன்பானந்தனின் பெயர் அடிக்கடி இடம் பெறும். தமிழ் இளைஞர் மணிமன்றங்களின் தேசியத் தலைவராக, அவர் விடுக்கும் அறிக்கைகள், கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் என அவரின் செய்திகள் அடிக்கடி தமிழ் நாளிதழ்களில் இடம் பெறும்.

அவ்வப்போது அவரின் சிறுகதைகளும், கவிதைகளும் கூட வெளியாகும். அவரின் “ஓடும்பிள்ளை” என்ற சிறுகதையை அப்போது படித்தது இன்னும் நினைவில் பதிந்திருக்கின்றது. வித்தியாசமான தலைப்பு காரணமாக மனதில் பதிந்து போன சிறுகதை அது!

பின்னர் அடிக்கடி வானொலி நாடகங்கள், கலப்படம் போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். அவற்றையும் கேட்டு இரசித்திருக்கிறேன்.

சிறந்த மேடைப் பேச்சாளர்

அவர் சிறந்த மேடைப் பேச்சாளர் என்பதை நான் நேரடியாகக் கண்டு அசந்த சம்பவம் ஒன்றும் உண்டு.

ஒருமுறை நான் வசித்த செந்துல் பகுதியில் ஏதோ ஒரு மேடைக் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. இலவசமாக நடத்தப்பட்ட அந்த மேடை நிகழ்ச்சியைக் காண திரளான கூட்டம். அந்த நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார் அன்பானந்தன். முதலில் அவர் பேசத் தொடங்கியபோது யாரும் அவரின் பேச்சைக் காதுகொடுத்துக் கேட்கவில்லை. இரசிக்கவுமில்லை.

அவர் பேசத் தொடங்கியபோது கூட்டத்தினரிடையே ஒரே கசமுசா சத்தம்தான் கேட்டது. வேறொரு மேடைப் பேச்சாளராக இருந்திருந்தால் அங்கேயே “எல்லாரும் அமைதியாயிருங்கள்” எனப் பலமுறை சத்தம் போட்டு வேண்டுகோள் விடுத்திருப்பார்.

ஆனால், அன்பானந்தன் அப்படி எதுவும் செய்யவில்லை. மாறாக, தனது உரையிலேயே கவனம் செலுத்தி பேசிக் கொண்டே இருந்தார். நிமிடங்கள் கடக்க, கடக்க, கூட்டத்தினரும் அவரின் பேச்சில் ஈடுபாடும், ஈர்ப்பும் கொண்டு ஆர்வத்துடன் கேட்க ஆரம்பித்தனர். கொஞ்ச நேரத்தில் மொத்த கூட்டமும் அமைதியாகி அவரின் உரை மட்டும் உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த அதிசயத்தை நான் நேரடியாகக் கண்டு வியந்திருக்கிறேன்.

நேரில் சந்தித்த போது…

தலைநகர் செந்துல் முத்தமிழ்ப் படிப்பகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ள வந்திருந்த அன்பானந்தனை நேரில் சந்தித்துப் பேசும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.

எனது மூத்த சகோதரர் அண்ணாமலையின் பெயரைச் சொல்லி அவரின் தம்பி நான் என்று கூறியபோது அவர் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். நலம் விசாரித்தார். அளவளாவினார். அந்தக் காட்சிகள் இன்னும் என் நினைவில் நிற்கின்றன.

பின்னர் நான் மஇகா தலைமையகத்தில் பணியாற்றியபோது அங்கு, தலைமைச் செயலாளராக இருந்த (டான்ஸ்ரீ) சி.சுப்பிரமணியத்தைச் சந்திக்க அடிக்கடி அங்கு வருவார். அப்போதும் என்னைப் பார்க்கும்போது நலம் விசாரிப்பார். தொலைபேசியிலும் அழைத்து உரையாடுவார்.

தனது இறுதி மூச்சு வரை டான்ஸ்ரீ சுப்ரா மீது அன்பானந்தனர் பெரும் மரியாதை கொண்டிருந்தார். அவரையே தனது அரசியல் தலைவராக வரித்துக் கொண்டு இறுதிவரை செயல்பட்டார்.

கோலாலம்பூர் மணிமன்ற இயக்கத்தில்…

அப்போது கோலாலம்பூர் மணிமன்றம் செந்துல் பகுதியில் இயங்கி வந்தது. இப்போது செந்துல் அஞ்சல் அலுவலகம் இருக்கும் அதே கட்டடத் தொகுதியில்தான் கோலாலம்பூர் மணிமன்றத்தின் அலுவலகமும் முதல் மாடியில் இயங்கி வந்தது.

நானும் அப்போது செந்துல் பகுதியில் வசித்ததால் கோலாலம்பூர் மணிமன்றத்தில் உறுப்பினராகச் சேர்ந்தேன். பின்னர் செயற்குழு உறுப்பினராகவும், மணிமன்றத்தின் செயலாளராகவும் பணியாற்றியிருக்கின்றேன்.

கோலாலம்பூர் மணிமன்றத்தில் சேர்ந்த பின்னர்தான் அதே மணிமன்றக் கிளையில்தான் அன்பானந்தன், மணிமன்றங்களின் தேசியத் தலைவராக இருந்த க.கிருஷ்ணசாமி ஆகியோரும் உறுப்பினர்களாகவும், செயலவையினராகவும் செயல்பட்டுக் கொண்டிருந்தனர் என்பதை அறிந்து கொண்டேன்.

பின்னர் க.கிருஷ்ணசாமி தனியாகப் பிரிந்து வேறொரு மணிமன்றக் கிளைக்குத் தலைவரானார்.

அப்போதையை கோலாலம்பூர் மணிமன்றத்தின் செயலவைக் கூட்டங்களில் அன்பானந்தன், கிருஷ்ணசாமி ஆகியோர் அழகான தமிழில் நடத்திய காரசார விவாதங்களை அருகிலிருந்து கேட்கும் வாய்ப்பைப் பெற்றேன்.

அன்பானந்தனை நான் நேரடியாகச் சந்தித்துப் பழகிய சில ஆண்டுகளிலேயே அவர் அகால மரணமடைந்தது உண்மையிலேயே ஒரு பேரிழப்பாகும்.

26 மே 1980-ஆம் நாளில் அவர் காலமானபோது அவருக்கு வயது 39-தான்!

அன்பானந்தன் அடிக்கடி உதிர்த்த – எழுதிய – தாரக மந்திர வாசகம் ஒன்று உண்டு! “நாம் பொய் நம் சேவையே மெய்!” என்ற வாசகம்தான் அது!

அவரின் அந்த வாசகத்திற்கேற்ப, சுமார் 40 ஆண்டுகள் கடந்தும் இன்றும் அவர் அவரின் சேவைகளுக்காகவும், எழுத்துப் படைப்புகளுக்காகவும், நட்புக்காகவும், பாராட்டிய அன்புக்காகவும் நினைவு கூரப்படுகிறார்.

-இரா.முத்தரசன்