கோலாலம்பூர்: அரசாங்கத்தின் தரைப்போக்குவரத்து அமைப்பான பிரசரனா மலேசியா பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து தாஜுடின் அப்துல் ரஹ்மான் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
நிதியமைச்சு அவரின் பதவி நீக்கத்தை அறிக்கை ஒன்றின் வழி அறிவித்தது. நிதியமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ சாப்ருல் அப்துல் அசிஸ் இன்றைய தேதியிட்ட (மே 26) கடிதம் ஒன்றின் வழி தாஜூடின் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். அவரின் சேவைகளுக்காக நன்றியையும் சாப்ருல் தெரிவித்துக் கொண்டார்.
எல்ஆர்டி இரயில் விபத்தைத் தொடர்ந்து தாஜூடின் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின்போது அவர் பேசிய பேச்சுகள், நடந்து கொண்ட விதம், முகக் கவசம் அணியாதது போன்ற காரணங்களுக்காக சமூக ஊடகங்களில் அவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.
எல்ஆர்டி விபத்துக்குப் பிறகு பிரசரனா தலைவர் பதவியிலிருந்து தாஜுடின் அப்துல் ரஹ்மான் பதவி விலக வேண்டும் என கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. அந்தக் கோரிக்கைகளை அவர் இதுவரை நிராகரித்து வந்தார்.