Home நாடு தாஜூடின் அப்துல் ரஹ்மான் இந்தோனிசியாவுக்கான தூதராக நியமனமா?

தாஜூடின் அப்துல் ரஹ்மான் இந்தோனிசியாவுக்கான தூதராக நியமனமா?

519
0
SHARE
Ad

புத்ரா ஜெயா : நாடாளுமன்ற உறுப்பினராகவும், அரசாங்கத்தில் எந்தப் பதவி வகித்தாலும் அதில் சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவிப்பவர் பாசிர் சாலாக் நாடாளுமன்ற உறுப்பினர் தாஜூடின் அப்துல் ரஹ்மான். அவரின் நடவடிக்கைகளும் அவ்வாறே சர்ச்சைக்குரியதாக இருக்கும்.

தாஜூடின் விரைவில் இந்தோனிசியாவுக்கான மலேசியத் தூதராக நியமிக்கப்படவிருக்கிறார் என ஊடகச் செய்திகள் உறுதிப்படுத்துகின்றன.

இந்தோனிசியாவுக்கு வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரியின் குழுவில் தாஜூடினும் இடம் பெற்றுள்ளார். பிரதமரான பின்னர் இஸ்மாயில் சாப்ரி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு வருகை இதுவாகும்.

#TamilSchoolmychoice

பிரதமர் தாஜூடினின் தூதர் நியமனம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமரே, தாஜூடினின் பெயரை சமர்ப்பித்து விட்டார் என்பதால் அந்த நியமனம் ஏறத்தாழ உறுதியான ஒன்று என அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. மாமன்னரோ, அல்லது இந்தோனிசிய அதிபர் ஜோகோவியோ நிராகரித்தால் மட்டுமே தாஜூடினின் நியமனம் இரத்து செய்யப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் கோடி காட்டின.

நாடாளுமன்ற உறுப்பினராக பல்வேறு சர்ச்சைக் கருத்துகளை உதிர்த்துப் பிரச்சனைகளைக் கிளப்புவதில் தாஜூடின் எப்போதுமே முன்னணி வகிப்பவர்.

மொஹிதின் யாசின் அரசாங்கத்தில் தாஜூடின் பிரசரன்னா எனப்படும் இலகு இரயில் சேவைக்கான அரசாங்க நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டர். சில மாதங்களுக்கு முன்னர் இரண்டு இலகு ரயில்கள் மோதிக்கொண்டதை அடுத்து அவர் வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துகளால் அவர் அந்தப் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

அதன்பின்னர் டான்ஸ்ரீ மொஹிதின் யாசின் பிரதமராக பதவி விலகிய நேரத்தில் நடப்பு பிரதமர் இஸ்மாயில் சாப்ரியைப் பகிரங்கமாக ஆதரித்தவர் தாஜூடின். அந்த ஆதரவுக்குப் பரிசாகத் தற்போது இந்தோனிசியாவுக்கான மலேசியத் தூதர் பதவியையும் பெறவிருக்கிறார் தாஜூடின்.