சென்னை : உலக அளவில் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தவரும், அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தருமான பேராசிரியர் டாக்டர் முனிரத்தினம் ஆனந்தகிருஷ்ணன் (படம்) இன்று சனிக்கிழமை மே 29-ஆம் தேதி அதிகாலை 5.15 மணியளவில் காலமானார்.
அவர் கான்பூர் ஐ.ஐ.டி.யின் (Indian Institute of Technology-IIT) முன்னாள் இயக்குனர் மற்றும் தலைவர் பதவிகளையும் வகித்தவராவார்.
தனது 92 வயதில் காலமான ஆனந்தகிருஷ்ணன் தமிழ் மொழி கணினித் துறை இன்று இத்தகைய விரிவான வளர்ச்சி அடைய 30 ஆண்டுகளுக்கும் மேலாக உலக அளவில் அயராது பாடுபட்டவராவார்.
கணித்தமிழ்ச் சங்கம், உத்தமம் போன்ற அமைப்புக்களை உருவாக்கி தமிழர்கள் பரவியிருக்கும் நாடுகளில் எல்லாம் இணையம், கணினி மூலம் தமிழ் மொழி வளர்ச்சியடைவதற்கும் பரவுவதற்கும் அரும்பாடு பட்டிருக்கிறார்.
மேலும் பல தமிழ் மொழி, கணினித்துறை ஆர்வலர்களை உலகம் எங்கிலும் அடையாளங் கண்டு, அவர்கள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு உழைக்கவும் கவனம் செலுத்தவும் வழிகாட்டியாகத் திகழ்ந்தார்.
பொறியியல் துறை பட்டதாரியாக இருந்தாலும் அவர் தமிழ் மொழியின் மீதும், கணினித் துறை போன்ற நவீனத்தொழில் நுட்பங்களிலும் அவர் பெரும் ஈடுபாடு கொண்டிருந்தார்.
ஐக்கிய நாட்டு மன்றத்திலும் அவர் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறார்.
அமரர் மு.ஆனந்தகிருஷ்ணனின் 90 வயது நிறைவை ஒட்டி கடந்த 2018 ஜூன் மாதம் சென்னையில் ஒரு சிறப்பான பிறந்தாள் விழா கணித்தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டடிருந்தது.
அந்த விழாவில் நன்றி உரையாற்றிய ஆனந்தகிருஷ்ணனின் உரையைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: