Home வணிகம்/தொழில் நுட்பம் பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு – முத்து நெடுமாறன் இரங்கல்

பேராசிரியர் ஆனந்த கிருஷ்ணன் மறைவு – முத்து நெடுமாறன் இரங்கல்

1093
0
SHARE
Ad

 

கோலாலம்பூர் : இன்று சனிக்கிழமை (மே 29) தனது 92-வது வயதில் சென்னையில் காலமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணனின் மறைவு தமிழ்க் கூறு நல்லுலகிற்கும், தமிழ்த் தகவல் தொழில்நுட்ப உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என முன்னணித் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப வல்லுநரான முத்து நெடுமாறன் தெரிவித்தார்.

“இருபத்து மூன்று ஆண்டுகளாக ஆனந்தகிருஷ்ணன் அவர்களோடு நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. பார்ப்பதற்கும் பழகுவதற்கும் மிக எளிமையான மனிதர். ஆனால் அவர் எளிய தோற்றத்திற்குப் பின்னால் இருந்த ஆளுமை நம்மை வியப்பில் ஆழ்த்தும்” என்று கூறிய முத்து நெடுமாறன்,  “எண்ணித்துணிக கருமம் …” என்று தொடங்கும் குறளுக்கும், “இதனை இதனால் இவன்முடிக்கும் …” என்று தொடங்கும் குறளுக்கும் தெளிவான எடுத்துக்காட்டு இவருடைய ஆளுமை என்றும் கூறினார்.

“தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, அடைய வேண்டிய இலக்கை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு அவருடன் பணியாற்றுவோரைச் செயலாற்ற வைப்பவர்” என்று அவரின் தலைமைத்துவ ஆற்றலை முத்து நெடுமாறன் வியந்து போற்றினார்.

“உத்தமம் எனப்படும் உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் நிறுவனத் தலைவராக இருந்த இவரோடு துணைத் தலைவராகப் பணியாற்றியது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு. உத்தமத்தின் ஏற்பாட்டில் நடந்த முதல் உலகத் தமிழ் இணைய மாநாடு 2001-ஆம் ஆண்டு கோலாலம்பூரில் நடைபெற்றது. மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவுக்கு நான் தலைமை ஏற்றிருந்தேன்.  முதன் முதலாக ஓர் அரசியல் அமைப்போடு சேர்ந்து நடத்தப்பட்ட மாநாடு என்பதாலும், மாநாட்டைத் திறந்து வைக்க அழைக்கப்பட்டவர் நாட்டின் பிரதமர் என்பதாலும், பலவாறான நெருக்கடிகளைச் சமாளிக்க வேண்டி இருந்தது. அவற்றை எல்லாம் பொருட்படுத்தாது, மாநாட்டின் வெற்றி ஒன்றையே மனத்தில் கொண்டு மிகத் தெளிவான முடிவுகளை எடுப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டினார் பேராசிரியர். அவரின் அனைத்துலக அனுபவமும் தெளிவாகச் சிந்திக்கும் ஆற்றலும் இந்த மாநாட்டின் வெற்றிக்கும், இதனைத் தொடர்ந்து வந்த பல மாநாடுகளின் வெற்றிக்கும் மிகப் பெரிய பங்கினை ஆற்றின” என்று முத்து நெடுமாறன் நினைவு கூர்ந்தார்.
2000-ஆம் ஆண்டில் சிங்கப்பூரில் உத்தமம் (INFITT) முதன் முதலாகத் தோற்றுவிக்கப்பட்டக் கூட்டத்தில் ஆனந்த கிருஷ்ணன், முத்து நெடுமாறன், எழுத்தாளர் சுஜாதா (இடது கோடியில்), சிங்கப்பூரின் அருண் மகிழ்நன் (வலதுகோடியில்) ஆகியோர்…
#TamilSchoolmychoice

“அன்னாரின் 90-வது பிறந்த நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபெற்றபோது, மலேசியாவின் சார்பில் நானும், உத்தமம் அமைப்பின் நடப்பு மலேசியக் கிளைத் தலைவருமான சி. ம. இளந்தமிழும் கலந்து கொண்டோம். சிங்கப்பூரில் இருந்து உத்தமம் அமைப்பின் முதல் நிருவாக இயக்குநர் அருண் மகிழ்நனும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் பலர் பேசினர். நாங்கள் அறிந்ததைவிட இன்னும் மிகப் பெரிய மனிதர் இவர் என்பதை பலரின் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டோம்”  என்று கூறியதோடு, “என்னைப் பார்க்கும் போதெல்லாம் கட்டி அணைத்து அன்பு காட்டும் ஒரு தந்தையாக விளங்கிய பேராசிரியரின் இழப்பு,  தனிப்பட்ட முறையில் என்னைப் பெரிதும் வாட்டுகிறது.” என்றும் முத்து நெடுமாறன் வருந்தினார்.

“தமிழ்த் தொழில்நுட்ப வளர்ச்சியில் பல்வேறு மாறுபட்ட முயற்சிகளையும் அணுகுமுறைகளையும் நெறிப்படுத்தி ஒன்றிணைப்பதில் மிகப் பெரிய பங்கினை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆற்றிவந்தவர் பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன். வெவ்வேறு கருத்துக்களைக் கொண்ட தொழிநுட்பர்களையும் ஆர்வலர்களையும் அவர் ஒரு குடையின்கீழ்க் கொண்டு வந்தார்” என்றும் முத்து நெடுமாறன் தனது இரங்கல் செய்தியில் ஆனந்த கிருஷ்ணனுக்குப் புகழாரம் சூட்டினார்.

2001 கோலாலம்பூரில் நடைபெற்ற உலகத் தமிழ் இணைய மாநாட்டில் ஆனந்த கிருஷ்ணன் (இடதுகோடியில்), முத்து நெடுமாறன்…

“இவரது தலைமையின் கீழ் தான் தமிழ்99 விசைமுக அமைப்புமுறையின் தரநிலை வரையறுக்கப்பட்டது. தமிழை முதல் மொழியாகப் பயன்படுத்தும் பயனர்கள், தமிழ் எழுத்துகளைத் தட்டெழுதுவதற்கான நிலையான விசைப்பலகையாகத் தமிழ்99 இன்று மாறியுள்ளது. இதேபோல், தமிழ்க் குறியீட்டுத் தரங்களின் எதிர்காலம் குறித்த பல்வேறு கருத்துகளைக் கொண்டிருந்தவர்களை ஒன்று கூட்டி, ஒருமைப்படுத்தப்பட்ட குறியீட்டு வடிவத்தை ஏற்கச் செய்ததும் பேராசிரியர் அவர்களே!” எனவும் முத்து நெடுமாறன் ஆனந்த கிருஷ்ணனின் பங்களிப்பு குறித்து புகழ்ந்துரைத்தார்.

உத்தமம் அமைப்பின் முதல் நிருவாகக் குழுக் கூட்டத்தின்போது…(இடது புறமிருந்து அருண் மகிழ்நன், ஆனந்த கிருஷ்ணன், முத்து நெடுமாறன்)

“பேராசிரியர் ஆனந்தகிருஷ்ணன், உலகெங்கிலும் உள்ள பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் எவ்வாறு ஒன்றிணைந்து செயலாற்றலாம் என்பதற்கான முன்மாதிரியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். அவர் தமது தனிப்பட்ட விருப்பங்களை ஒதுக்கி வைத்து, வெவ்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக அமர்ந்து, சிக்கல்களுக்குத் தீர்வுகளைக் காண வழிவகுத்தார். அவரிடம் இருந்து நாங்கள் கற்றுக்கொண்டவை கணக்கில. அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!”என்று செல்லினத்தின் நிறுவனரும் பேராசிரியரோடு உத்தமம் அமைப்பைத் தோற்றுவித்தவர்களில் ஒருவருமான முத்து நெடுமாறன் தெரிவித்தார்.

பேராசிரியரின் குடும்பத்தாருக்கும் அவர் மறைவால் வாடும் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் நண்பர்களுக்கும் தமது ஆழ்ந்த இரங்கலையும் முத்து நெடுமாறன் தெரிவித்துக்கொண்டார்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றத்தின் (உத்தமம்) நிறுவனத் தலைவருமான பேராசிரியர் மு.ஆனந்தகிருஷ்ணன் இன்று காலை தமிழ்நாட்டின் சென்னையில் காலமானார்.