அத்தகைய முயற்சிகளில் ஒன்று தமிழ் கல்வியாளர்களும் அறிஞர்களும் இணைந்து முன்னணி பல்கலைக் கழகங்களில் “தமிழ் இருக்கை” என்ற பிரிவைத் தோற்றுவிப்பது. இதன் மூலம் அந்தப் குறிப்பிட்ட பல்கலைக் கழகத்தில் தமிழ் மொழி குறித்த நிகழ்ச்சிகள், ஆய்வுகள், கலந்துரையாடல்கள் நடைபெறும் வாய்ப்புகள் உருவாக்கப்படும். தமிழ் படிக்க விரும்பும் மற்ற இனத்தவர்களுக்கும் தமிழ் மொழியைக் கற்றுத் தரும் சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படும்.
இந்த வரிசையில் கனடாவில் அதிக அளவில் குடியேறியிருக்கும் தமிழ் மக்களின் முயற்சியைத் தொடர்ந்து அந்நாட்டின் தலைநகரான தொரன்டோவில் அமைந்திருக்கும் தொரன்டோ பல்கலைக் கழகத்திலும் தமிழ் இருக்கை அமைக்கப்படுவது உறுதியாகியிருக்கிறது.
இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் கடந்த ஜூன் 12-ஆம் நாள் இணையம் வழியான சந்திப்பு ஒன்றை தமிழ் இருக்கைக்கான ஏற்பாட்டுக் குழுவினர் நடத்தினர்.
இதற்காக உலகம் முழுவதும் இருந்து நன்கொடை வழங்கியவர்களுக்கும் தமிழ் இருக்கைக் குழுவினர் நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொண்டனர்.
இணையம் வழியான சந்திப்பை கனடா- தொரன்டோ பல்கலைக் கழகத்தின் ஸ்காபுரோ வளாகத்தினர், தமிழ் இருக்கை குழுவினர் மற்றும் கனடிய தமிழர் பேரவையினர் ஆகியோர் இணைந்து நடத்தி கொண்டாடி மகிழ்ந்தனர்.