திருச்சி, ஜனவரி 27 – அடுத்தாண்டு நடைபெறவிருக்கும் இந்திய நாடாளுமன்றத்திற்கான பொதுத் தேர்தலில் தி.மு.க வும், விஜய்காந்த்தின் தேமுதிக கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்ற ஆரூடங்கள் பெருகி வருகின்றது.
இந்த வேளையில், திமுக ராஜ்யசபா எம்.பி. திருச்சி சிவா மகள் திருமணத்தின்போது திமுக தலைவர் கருணாநிதியும், தேமுதிக தலைவர் விஜயகாந்த்தும் சந்திக்கப் போவதாக அரசியல் களத்தில் புதிய சலசலப்பு கிளம்பியுள்ளது.
அதிமுக கூட்டணியை விட்டு தேமுதிக துரத்தப்பட்டு விட்டது. தனித்துப் போட்டியிடுவோம் என்று அந்த கட்சி கூறி வந்தாலும், தமிழகத்தின் கூட்டணி அரசியல் இலக்கணப்படி அவர்கள் திமுகவுடன் அரசியல் கூட்டணி அமைத்தால்தான் ஏதாவது ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற முடியும்.
தனியாக போட்டியிடுவது என்பது தற்கொலைக்குச் சமமானது என்பதால் தேமுதிகவினர் அதை விரும்பவில்லை. மாறாக திமுகவுடன் போய்ச் சேர்ந்து விட வேண்டியதுதான் என்ற எண்ணத்தில் அவர்கள் உள்ளனர். இருந்தாலும் திமுகவுடன்தான் அடுத்த கூட்டணி என்று பச்சையாக சொல்ல விஜயகாந்த்துக்கு மனம்இல்லை என்றுதெரிகிறது.
இதனால் மெல்ல மெல்ல திமுகவுடன் கூட்டணி என்பதை வெளிப்படுத்த தேமுதிக தலைமை விரும்புகிறது. அதற்கேற்ப திமுக தலைமையும் மெதுவாக காய் நகர்த்தி வருகிறது.
திருச்சி சிவா திருமணத்தின்போது கருணாநிதியும், விஜய்காந்தும் சந்திப்பது அவர்களுக்கு இடையில் அரசியல் கூட்டணி ஏற்படுவதற்கு அச்சாரம் போடுவதுபோல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.