Home நாடு அமைச்சரவைதான் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் – சட்டத் துறைத் தலைவர் விளக்கம்

அமைச்சரவைதான் நாடாளுமன்றத்தைக் கூட்ட முடியும் – சட்டத் துறைத் தலைவர் விளக்கம்

546
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருக்கிறார்.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் அரசாங்கம் அல்லது அமைச்சரவைக்கு உரியதா அல்லது மாமன்னருக்கு உரியதா என்ற விவாதங்கள் தலைவர்களாலும், ஊடகங்களாலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்பில் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்ட இட்ருஸ் ஹாருண் அமைச்சரவை மட்டுமே மாமன்னருக்கு எப்போது நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்ற ஆலோசனையை வழங்க முடியும் என்றார்.

#TamilSchoolmychoice

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகள் 40 (1) மற்றும் (1A) படி மாமன்னருக்கான அதிகாரங்கள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்பது ஒன்றல்ல எனக் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பான பிரிவி கவுன்சில் வழக்குகளும் இதையே ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றன என்றும் இட்ருஸ் ஹாருண் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடந்த மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் மாமன்னர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.