Home நாடு நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு

நாடாளுமன்றத்தை உடனடியாகக் கூட்டுங்கள் – மாமன்னர் உத்தரவு

1105
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மாமன்னருக்கும் மலாய் ஆட்சியாளர்களுக்கும் இடையிலான சிறப்பு சந்திப்புக் கூட்டம் இன்று முடிவுற்ற பின்னர் மாமன்னர் சார்பில் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென அறிக்கை ஒன்றின் வழி மாமன்னர் கேட்டுக் கொண்டார்.

இதன் மூலம் நாட்டில் அமுலில் இருக்கும் அவசர கால சட்டம் மற்றும் அறிவிக்கப்பட்டிருக்கும் தேசிய மீட்சித்திட்டங்கள் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்க முடியும் எனவும் மாமன்னரின் அறிக்கை தெரிவித்தது.

பிரதமர் மொகிதின் யாசின் நேற்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நாடாளுமன்றத்தைக் கூட்ட அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்று தெரிவித்தார். கொவிட்-19 தொடர்பான 4 அம்ச மீட்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பை மொகிதின் வெளியிட்டார்.

#TamilSchoolmychoice

ஆனால், மாமன்னரின் உத்தரவோ பிரதமரின் உத்தரவுக்கு நேர் எதிர்மாறாக இருக்கிறது.

காலப்போக்கில் கொவிட் தொற்றுகள் நாட்டில் குறையும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்த மாமன்னர், தேசிய அளவிலான தடுப்பூசித் திட்டத்தின் மூலமே கொவிட் தொற்றை எதிர்கொண்டு அதிலிருந்து மீட்சி பெற முடியும் என்றும் தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை (ஜூன் 16) மதிய விருந்துபசரிப்புக்குப் பின்னர் மலாய் ஆட்சியாளர்களின் சந்திப்புக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டம் முடிந்த பின்னர் ஜோகூர் சுல்தான், மாலை 5.15 மணியளவில் இஸ்தானா நெகாராவிலிருந்து முதல் ஆட்சியாளராக வெளியேறினார்.

இராணுவத் தளபதி டான்ஸ்ரீ அபெண்டி புவாங், காவல்துறை தலைவர் அக்ரில் சானி அப்துல்லா சானி, சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா மற்றும் சட்டத்துறைத் தலைவர் வழக்கறிஞர் இத்ருஸ் ஹருண் ஆகியோரும் ஆட்சியாளர்களுக்கான சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இந்த சந்திப்பைத் தொடர்ந்து மாமன்னரின் அறிக்கையை இஸ்தானா நெகாரா வெளியிட்டிருக்கிறது.