Home உலகம் கோகா கோலாவை ஒதுக்கி தண்ணீர் குடிக்கச் சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ

கோகா கோலாவை ஒதுக்கி தண்ணீர் குடிக்கச் சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ

546
0
SHARE
Ad

புடாபெஸ்ட் (ஹங்கேரி) : ஏற்கனவே புகழ்பெற்ற காற்பந்து விளையாட்டாளராக உலா வரும் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியின் மூலம் உலகம் முழுவதும் பின்தொடரப்படும் – உற்று நோக்கப்படும் நபராக மாறிவிட்டார்.

ஹங்கேரியுடன் விளையாடுவதற்கு முன்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கிறிஸ்டியானோ ரொனால்டோ அமர்ந்திருந்த மேசையில் இரண்டு கோகா கோலா பானங்கள் வைக்கப்பட்டிருந்தன.

ஈரோ 2020 காற்பந்து போட்டிகளின் அதிகாரபூர்வ விளம்பரதாரராக கோகா கோலா நிறுவனம் நியமிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக கோகா கோலா பானங்கள் அடங்கிய போத்தல்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் வைக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

தன்முன்னே இரண்டு கோகா கோலா போத்தல்கள் வைக்கப்பட்டிருப்பது கண்டு கடுப்பான ரொனால்டோ அந்த இரண்டு போத்தல்களையும அப்படியே ஒதுக்கி அப்புறப்படுத்தினார்.

மாறாக, தன் கையில் வைத்திருந்த தண்ணீர் போத்தலைக் காட்டி “அகுவா” Aqua என்றார் ரொனால்டோ. அகுவா என்றால் போர்ச்சுகீசிய மொழியில் தண்ணீர் என்ற அர்த்தமாகும்.

இதன் மூலம் கோகா கோலா போன்ற பானங்களை ஒதுக்கித் தள்ளுங்கள், ஆரோக்கியமாக இருக்க தண்ணீர் போன்ற பானங்களை அருந்துங்கள் என்ற செய்தியை நேரடியாகவே உலகம் எங்கும் உள்ள மக்களுக்கு தெரியப்படுத்தி விட்டார் ரொனால்டோ.

கோகா கோலா நிறுவனத்திற்கு இது ஒரு பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. ஈரோ 2020 காற்பந்து போட்டிகளுக்கு அதிகாரபூர்வ விளம்பர நிறுவனமாக இருந்தாலும், அந்தக் காற்பந்து போட்டிகளின் புகழ்பெற்ற விளையாட்டாளரான ரொனால்டோ, கோகா கோலாவை ஒதுக்கித் தள்ளியுள்ளது, நேற்று முதல் சமூக ஊடங்களில் மிக அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

அதே வேளையில், துணிச்சலாக தனது செய்கையின் மூலம் கோகா கோலாவைப் புறக்கணித்த நடவடிக்கை மூலம் அவரின் புகழ் உச்சிக்குச் சென்று விட்டது. ஆரோக்கியம் நாடும் அனைவரும் ரொனால்டோவின் செய்கையைப் பாராட்டி வருகிறார்கள்.