Home நாடு கொவிட்-19: ஒருநாளில் 60-ஆக மரணங்கள் குறைந்தன

கொவிட்-19: ஒருநாளில் 60-ஆக மரணங்கள் குறைந்தன

1400
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் 27 வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் 60 மரணங்கள் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையான 81-உடன் ஒப்பிடும்போது இது குறைவுதான் என்றாலும் மரண எண்ணிக்கை இன்னும் கணிசமான அளவில் இருந்து வருவதையே இது காட்டுகிறது.

கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலத்திலும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கையும், மரண எண்ணிகையும் தொடர்ந்து கணிசமான அளவில் நீடித்துக் கொண்டிருக்கின்றன.

இன்றைய மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 4,944 ஆக உயர்ந்தது.

#TamilSchoolmychoice

நாளை திங்கட்கிழமையுடன் (ஜூன் 28) அமுலில் இருக்கும் முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை முடிவுக்கு வருமா அல்லது தொடரப்படுமா என்ற நிலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 27) வரையிலான மொத்த ஒருநாள் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 5,586 என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இதனைத் தொடர்ந்து முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை மேலும் நீட்டிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதையே பிரதமரும் கோடி காட்டியிருக்கிறார்.

நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்து வந்தாலும், கடுமையான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின் காரணமாகவே இதைவிட மோசமான ஒரு சூழலை நம்மால் தவிர்த்திருக்க முடிகிறது என சுகாதார இயக்குநர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்திருக்கிறார்.

இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 734,048 ஆக உயர்ந்திருக்கிறது.

சிலாங்கூர் 2,212 தொற்றுகளோடு மிக அதிகமான தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

அதற்கு அடுத்த நிலையில் 628 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. மூன்றாவது இடத்தை 513 தொற்றுகளோடு சரவாக் பிடித்திருக்கிறது.

சிறிய மாநிலமான மலாக்காவும் 380 தொற்றுகளைப் பதிவு செய்திருக்கிறது.

மருத்துவமனையில் 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை

மொத்தம் பதிவான 5,586 தொற்று சம்பவங்களில் 5,583 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 3 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.

கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 4,777 -ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 667,709 -ஆக உயர்ந்திருக்கிறது.

கடந்த ஒரு நாளில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 61,395 எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் 886 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் 446 பேருக்கு சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை வழங்கப்படுகிறது.