கோலாலம்பூர் : நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலில் இருக்கும் காலகட்டத்தில் நாளை திங்கட்கிழமை ஜூன் 28 முதல் உணவகங்கள் காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணி வரை திறந்திருக்கலாம் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி இன்று அறிவித்தார்.
எனினும், மற்ற கட்டுப்பாடுகள் அப்படியே நீடித்திருக்கும் என்றும் அவர் கூறினார். தற்போது காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது.
எனினும் உணவகங்களில் அமர்ந்து உண்ண முடியாது. மாறாக பொட்டலங்கள் மூலமாகவே உணவுகளைப் பெற முடியும். இந்த நேரக் கட்டுப்பாட்டை காலை 6.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை நீட்டிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.
உணவக உரிமையாளர்களும், பொதுமக்களில் அதிகாலையில் பணிக்குச் செல்வோரும் ஒருசேர இந்த வேண்டுகோளை அரசாங்கத்திற்குத் தொடர்ந்து விடுத்து வந்தனர்.
அவர்களின் வேண்டுகோளுக்கேற்பவே இந்த நேர நீட்டிப்பு வழங்கப்படுவதாக இஸ்மாயில் சார்பி தெரிவித்திருக்கிறார்.
இதற்கிடையில், தற்போது அமுலில் இருக்கும் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை தொடர்ந்து நீடிக்கப்படும் என பிரதமர் மொகிதின் யாசின் அறிவித்தார். ஒருநாள் கொவிட் தொற்றுகள் 4,000-க்கும் குறைவாக பதிவானால் மட்டுமே முழுக்கட்டுப்பாட்டு ஆணை அகற்றப்படும் என மொகிதின் யாசின் தெரிவித்தார்.