Home நாடு சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து

சட்டத்துறை தலைவரை நீக்க வேண்டும் – பக்காத்தான் தலைவர்கள் மன்றம் வலியுறுத்து

617
0
SHARE
Ad

கோலாலம்பூர் : மாமன்னரின் வேண்டுகோளுக்கு எதிராக அறிக்கை விடுத்திருக்கும் சட்டத்துறைத் தலைவர் இட்ருஸ் ஹாருண் அவரின் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும் என பக்காத்தான் ஹாரப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் இன்று விடுத்த அறிக்கையொன்றில் வலியுறுத்தியது.

மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருந்தார்.

வெள்ளிக்கிழமை (ஜூன் 25) அறிக்கை ஒன்றை வெளியிட்ட இட்ருஸ் ஹாருண் அமைச்சரவை மட்டுமே மாமன்னருக்கு எப்போது நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்ற ஆலோசனையை வழங்க முடியும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

இதன் தொடர்பில் இட்ருஸ் ஹாருணைக் கண்டித்த நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் சட்டம் தொடர்பான அம்சங்களில் மாமன்னருக்கும், அமைச்சரவைக்கும் ஆலோசனை வழங்க வேண்டிய கடமை சட்டத் துறைத் தலைவருக்கு மலேசிய அரசியல் அமைப்பு சட்டத்தின் விதி 145 (2) இன்படி இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டினர்.

“இத்தகைய ஆலோசனை மாமன்னருக்கு நேரடியாக வழங்கப்பட வேண்டும். சட்டத் துறை தலைவர் தனது கருத்துகளை பொது அரங்கில் வெளியிடக் கூடாது. அவ்வாறு அவர் செய்திருப்பதால் அவர் தனது கடமையிலிருந்து மீறியிருக்கிறார். ஒரு வழக்கறிஞருக்கும் கட்சிக்காரருக்கும் இடையிலான இரகசிய உடன்பாடு போன்ற கட்டுப்பாட்டை சட்டத்துறைத் தலைவர் மீறியிருக்கிறார். இந்த கட்டுப்பாட்டு மீறலால் அவர் ஒரு வழக்கறிஞராகவோ சட்டத் துறைத் தலைவராகவோ தொடரும் தகுதி அவருக்கு இனியும் இல்லை. மாமன்னருக்கு எதிராக அவர் தேசத் துரோகம் புரிந்திருக்கிறார். எனவே அவர் உடனடியாக சட்டத் துறைத் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும்” என நம்பிக்கைக் கூட்டணியின் அறிக்கை மேலும் தெரிவித்தது.

அந்த அறிக்கையில் பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம், அமானா தலைவர் முகமட் சாபு, ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

சட்டத்துறைத் தலைவர் கூறியது என்ன?

மலேசிய நாட்டு சட்டப்படி நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்கான அதிகாரத்தை அமைச்சரவை மட்டுமே கொண்டிருக்கிறது என சட்டத் துறைத் தலைவர் (அட்டர்னி ஜெனரல்) இட்ருஸ் ஹாருண் விளக்கம் தந்திருந்தார்.

கடந்த சில நாட்களாக நாடாளுமன்றத்தைக் கூட்டும் அதிகாரம் அரசாங்கம் அல்லது அமைச்சரவைக்கு உரியதா அல்லது மாமன்னருக்கு உரியதா என்ற விவாதங்கள் தலைவர்களாலும், ஊடகங்களாலும் விவாதிக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 25) அறிக்கை ஒன்றை வெளியிட்ட இட்ருஸ் ஹாருண் அமைச்சரவை மட்டுமே மாமன்னருக்கு எப்போது நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்ற ஆலோசனையை வழங்க முடியும் என்றார்.

மலேசிய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகள் 40 (1) மற்றும் (1A) படி மாமன்னருக்கான அதிகாரங்கள் மிகவும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

அவற்றில் நாடாளுமன்றத்தைக் கூட்டுவது என்பது ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பான பிரிவி கவுன்சில் வழக்குகளும் இதையே ஏற்கனவே சுட்டிக்காட்டியிருக்கின்றன என்றும் இட்ருஸ் ஹாருண் தனது அறிக்கையில் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 16-ஆம் தேதி நடந்த மலாய் ஆட்சியாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிட்ட அறிக்கையில் மாமன்னர் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.