கோலாலம்பூர், ஏப்ரல் 22- ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன எல்லாம் ஒன்றுதான் என்ற வேதமூர்த்தியின் அறிவிப்பு மற்றும் அவரது நடவடிக்கை தனக்கும் அதிர்ச்சியைத் தருவதாக ஹிண்ட்ராஃபின் ஆலோசகராக தன்னைக் கூறிக்கொள்ளும் அவரது அண்ணன் பி.உதயகுமார் பிரி மலேசியா டுடே இணையதளப் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் ஹிண்ட்ராப் வேதமூர்த்தி குழுவினருக்கும் நஜிப்புக்கும் இடையில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில் உதயகுமார் “நாங்கள் ஐவரும் ஐஎஸ்ஏ சட்டத்தில் கைது செய்யப்பட்டப் பின்னரே வேதமூர்த்தி ஹிண்ட்ராஃபில் தலையெடுக்க ஆரம்பித்தார். அது மட்டும் அல்லாமல் அவர் வெளிநாட்டிலிருந்து வந்து சேர்வதற்கு சிறிது காலத்துக்கு முன்பாகவே அவருக்கென குழுக்கள் தனித்து ரகசியமாக இயங்குவதற்கு தயாராயின. வேதமூர்த்தி மலேசியா வந்தபின் அவரும் ரகசியமாக இயங்கி தனக்கென ஒரு குழுவை ஏற்படுத்திக்கொண்டார்” என்று தெரிவித்தார்.
தன் தம்பி வந்தபின் அவருடன் போட்டிப்போடத் தான் விரும்பவில்லை என்றும் அதற்கான காரணம் பதவிக்காக சகோதரர்கள் சண்டையிடுவதாக மக்கள் நினைத்து விடக்கூடாது என்பதே என்றும் உதயமூர்த்தி தெரிவித்தார்.
மேலும் தான் பயந்துகொண்டு ஊரைவிட்டு ஓடவில்லை என்றும் மாறாக போராடி சிறைச்சாலை சென்றதை, நினைவுபடுத்திய உதயமூர்த்தி தேசியமுன்னணியுடனான பிரச்சினையைத் தான் நேருக்குநேர் எதிர்கொள்வதாகவும் ஹிண்ட்ராஃபின் முதல் எதிரியே தேசியமுன்னணிதான் என்றும் வலியுறுத்தினார்.
ஆட்சி மாற்றம் நாட்டுக்குத் தேவை
வேதமூர்த்தியின் தேசிய முன்னணியுடனான உடன்பாடு மற்றும் அதற்கு இராமாயணத்தை அவர் உதாரணமாக கூறியிருப்பது பற்றி ஆத்திரமடைந்த மக்கள் தன்னிடம் கேள்விகள் கேட்டு தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் உள்ளதாக அவர் கூறினார்.
ராமன் மற்றும் ராவணன் பற்றிய வேதமூர்த்தியின் விளக்கம் பற்றி அவரிடம் வினவப்பட்டபோது இந்தியர்கள் பாவப்பட்டவர்கள். அவர்களை யார் ஆண்டாலும் ஒன்றுதான் என்று கூறினார்.
தங்களைப் பொறுத்தவரை தேசிய முன்னணிக்கோ அல்லது மக்கள்கூட்டணிக்கோ தாங்கள் இந்தியர்கள் யாரையும் வாக்களிக்கச் சொல்லப் போவதில்லை என்றும் மாறாக அது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட விருப்பமாகும் என்றும் தாங்கள் அதற்கு பொறுப்பேற்க விரும்பவில்லை என்றும் உதயமூர்த்தி தெரிவித்தார்.
முடிவாக ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் ஏழை இந்தியர்களுக்கு வித்தியாசம் ஏதுமில்லை என்று கூறிய உதயகுமார், ஆனால் ஆட்சி மாற்றம் மொத்தத்தில் நாட்டுக்கு நல்ல மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கூறினார்.
உதாரணத்திற்கு சற்று நல்ல ஆட்சிமுறை,வெளிப்படையான , ஊழல் குறைந்த மற்றும் தன்னிச்சையான நீதித்துறை முதலியவை இதில் அடங்கும் என்றார் அவர்.