Home உலகம் ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – ஜெர்மனி 0 ; பழைய பகைமையைப் பழி...

ஈரோ 2020 : இங்கிலாந்து 2 – ஜெர்மனி 0 ; பழைய பகைமையைப் பழி தீர்த்துக் கொண்ட இங்கிலாந்து

1004
0
SHARE
Ad
பிரிட்டனின் இளவரசர் வில்லியம் துணைவியார் – மகனுடன் – படம்: நன்றி பிரிட்டன் அரச குடும்பத்தின் டுவிட்டர் தளம்

இலண்டன் : காற்பந்து விளையாட்டுலகில் பழைய பகைமைகளைத் தீர்த்துக் கொள்ள சில குழுக்களுக்கு அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும். அவ்வாறு நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 29) ஈரோ 2020 ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இங்கிலாந்து, ஜெர்மனியை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் தோற்கடித்து தனது பழைய பகைமையைப் பழிதீர்த்துக் கொண்டது.

சில முக்கியமான உலகக் கிண்ண ஆட்டங்களில் கடந்த காலங்களில் இங்கிலாந்தை தோற்கடித்திருக்கிறது ஜெர்மனி.

நேற்று மலேசிய நேரப்படி நள்ளிரவுக்கு தொடங்கிய இந்த ஆட்டம் இலண்டனின் வெம்ப்ளி அரங்கில் நடைபெற்றது. பிரிட்டனின் அரச குடும்பத்து இளவரசர் வில்லியம் தனது துணைவியாருடனுடம் மகனுடனும் இந்த ஆட்டத்தைக் கண்டு களித்தார்.

இங்கிலாந்தின் முதல் கோலை அடித்த ஸ்டெர்லிங்
#TamilSchoolmychoice

இங்கிலாந்தின் வெற்றி அதன் சொந்த மண்ணிலேயே நிகழ்ந்ததால் இங்கிலாந்து காற்பந்து இரசிகர்கள் உற்சாகத்தால் அரங்கையே அதிரச் செய்தனர்.

முதல் பாதி ஆட்டத்தில் இரண்டு குழுக்களுமே கோல் அடிக்க முடியாமல் திணறின. ஆட்டம் முடிய 15 நிமிடங்கள் இருக்கும் நிலையில் ஸ்டெர்லிங் ஒரு கோல் போட்டு இங்கிலாந்தை முன்னணிக்குக் கொண்டு வந்தார்.

இங்கிலாந்தின் இரண்டாவது கோலை அடித்த இங்கிலாந்து குழுவின் தலைவர் கேன்

ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் இருக்கும் நிலையில் 86-வது நிமிடத்தில் இங்கிலாந்து குழுவின் தலைவர் (கேப்டன்) கேன் மற்றொரு கோலைப் போட்டு 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் இங்கிலாந்தின் வெற்றியை உறுதி செய்தார்.

இங்கிலாந்தின் முன்னாள் குழுத் தலைவரும் (கேப்டன்) புகழ் பெற்ற விளையாட்டாளருமான டேவிட் பெக்காம் அரங்கில் நேரடியாக இந்த ஆட்டத்தைக் கண்டு களித்தார்.

வலுவான குழுவாகத் திகழ்ந்தாலும் இந்த முறை ஜெர்மனி ஐரோப்பியக் கிண்ணப் போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது.

அடுத்த சுற்றுக்குத் தேர்வான 16 குழுக்கள்

மொத்தம் 24 நாடுகள் கலந்து கொண்ட ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் அந்த நாடுகள் ஒரு பிரிவுக்கு 4 நாடு என்ற கணக்கில் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டன.

இதில் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த 2 குழுக்கள் என்ற அளவில் 12 நாடுகள் 6 பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டன.

மேலும் சிறந்த 3 இடத்தைப் பெற்ற 4 குழுக்களும் கூடுதலாகத் தேர்வு செய்யப்பட்டன.

தேர்வு செய்யப்பட்ட இந்த 16 குழுக்களுக்கு இடையிலான போட்டிகள் சனிக்கிழமை ஜூன் 26 முதல் தொடங்கின.

6 பிரிவுகளில் சிறந்த குழுக்களாகத் தேர்வு பெற்ற 6 நாடுகள் பின்வருமாறு:

  1. இத்தாலி
  2. பெல்ஜியம்
  3. நெதர்லாந்து
  4. இங்கிலாந்து
  5. சுவீடன்
  6. பிரான்ஸ்

6 பிரிவுகளில் சிறந்த 2-வது குழுவாகத் தேர்வான 6 நாடுகள் பின்வருமாறு:-

  1. வேல்ஸ்
  2. டென்மார்க்
  3. ஆஸ்திரியா
  4. குரோஷியா
  5. ஸ்பெயின்
  6. ஜெர்மனி

பிரிவுகளில் சிறந்த 3-வது குழுவாகத் தேர்வாகும் நாடுகள் :-

  1. சுவிட்சர்லாந்து
  2. செக் குடியரசு
  3. உக்ரேன்
  4. போர்ச்சுகல்

அடுத்து 16 குழுக்களுக்குள் இடையிலான போட்டிகள் பின்வருமாறு நடைபெறும்:

26/06: வேல்ஸ் – டென்மார்க் (நடைபெறும் இடம் ஆம்ஸ்டர்டாம்)

26/06: இத்தாலி – ஆஸ்திரியா (நடைபெறும் இடம் இலண்டன்)

27/06: நெதர்லாந்து – செக் குடியரசு (நடைபெறும் இடம் புடாபெஸ்ட்)

27/06: பெல்ஜியம் – போர்ச்சுகல் (நடைபெறும் இடம் செவில்)

28/06: குரோஷியா – ஸ்பெயின் (நடைபெறும் இடம் கோப்பன்ஹேகன்)

28/06: பிரான்ஸ் – சுவிட்சர்லாந்து (நடைபெறும் இடம் புச்சாரெஸ்ட்)

29/06: இங்கிலாந்து – ஜெர்மனி (நடைபெறும் இடம் இலண்டன்)

29/06: சுவீடன் – உக்ரேன் (நடைபெறும் இடம் கிளாஸ்கோ)