Home நாடு மொகிதின் யாசின் நம்பிக்கை : “2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு விரைவில் திரும்புவோம்”

மொகிதின் யாசின் நம்பிக்கை : “2-ஆம் கட்ட மீட்சி நிலைக்கு விரைவில் திரும்புவோம்”

661
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அறிவிக்கப்பட்ட ஐந்து மாநிலங்களை தவிர மேலும் சில மாநிலங்கள் குறிப்பிடத்தக்க விதத்தில் கொவிட்-19 நோய் தொற்றிலிருந்து மீட்சி  கண்டு வருவதால் விரைவில் நாடு முழுமையும் விரைவில் இரண்டாம் கட்ட மீட்சிப் பாதைக்குள் நுழையலாம் என பிரதமர் மொகிதின் யாசின் கூறி இருக்கிறார்.

இன்னும் மருத்துவமனையில் இருந்து வரும் பிரதமர் தனக்கு ஏற்பட்ட வயிற்று உபாதைக்காக சிகிச்சை பெற்றும் வருகிறார்.

இன்று பிரதமர் மருத்துவமனையிலிருந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டார். கடந்த ஜூன் 30 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து இன்றுதான் முதன் முதலில் சமூக ஊடகங்கள் மூலம் பிரதமர் பொதுவெளியில் தொடர்பு கொண்டிருக்கிறார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனையில் இருந்து கொண்டே தனது அமைச்சர்களுடன் பிரதமர் தொடர்பில் இருக்கிறார் என்றும் இன்று திங்கட்கிழமை (5 ஜூலை) நடைபெற்ற தேசியப் பாதுகாப்பு மன்றக் கூட்டத்திற்கு அவர் தலைமை தாங்கினார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 குறியீடுகள் இருந்தால் ஒரு மாநிலம் மீட்சித்திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்கு நகரும் என பிரதமர் கூறியிருக்கிறார்.

பிரதமர் கூறும் 3 குறியீடுகள், மொத்த கொவிட் தொற்றுக்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்திற்கும் குறைவாகப் பதிவாவது; தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளின் எண்ணிக்கை முறையாக நிர்வகிக்கப்படுவது; மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 10 விழுக்காட்டினர் 2 அளவைகள் கொண்ட முழு தடுப்பூசிகளையும் முழுமையாகப் பெற்று இருப்பது; ஆகிய குறியீடுகள் இருப்பின் அந்த மாநிலம் இரண்டாம் கட்ட நிலைக்கு திரும்பும் என பிரதமர் அறிவித்திருக்கிறார்.

5 மாநிலங்கள் 2-ஆம் கட்ட மீட்சிப் பாதைக்குத் திரும்பியிருப்பதாக நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 4) தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.

மொத்த கொவிட் தொற்று எண்ணிக்கைகள் குறைந்தது, தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கைகளை முறையாக நிருவகிப்பது, அதிகமான மக்களுக்கு தடுப்பூசிகள் போட்டது ஆகியவை காரணமாக 5 மாநிலங்கள் மீட்சி நிலைத் திட்டத்தின் கீழ் இரண்டாவது கட்டத்திற்கு முன்னேறுகின்றன என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி அறிவித்திருக்கிறார்.

கிளந்தான், பகாங், பேராக், திரெங்கானு, பெர்லிஸ் ஆகியவையை இன்று திங்கட்கிழமை முதல் இரண்டாம் கட்ட மீட்சி நிலைக்குத் திரும்பும் 5 மாநிலங்களாகும்.