கோலாலம்பூர் : கொவிட்-19 தொற்றுகளின் எண்ணிக்கை அளவுக்கு அதிகமாக பெருகி வருவதைத் தொடர்ந்து பிரதமர் மொகிதின் யாசின் பதவி விலக வேண்டுமென பக்காத்தான் ஹாரப்பான் எனப்படும் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் மீண்டும் வலியுறுத்தியது.
நேற்று வெள்ளிக்கிழமை ஒரு நாளில் மட்டும் நாட்டில் கொவிட் தொற்றுகளின் எண்ணிக்கை 9 ஆயிரத்தைக் கடந்து 9,180 எனப் பதிவாகியது.
தோல்வியடைந்த ஓர் அரசாங்கத்தையும், தோல்வியடைந்த ஒரு பிரதமரையும் ஏற்றுக் கொண்டு, மக்கள் தொடர்ந்து இதுபோன்ற துன்பங்களை அனுபவித்து வர அனுமதிக்கக் கூடாது என அந்தத் தலைவர்கள் மன்றம் நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தது.
இந்த அறிக்கையில் பிகேஆர் கட்சி தலைவர் அன்வார் இப்ராகிம், ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங், அமானா கட்சித் தலைவர் முகமட் சாபு ஆகிய மூவரும் கையெழுத்திட்டுள்ளனர்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம் பதவி விலகச் சொல்லி அறிக்கை விடுவது கடந்த இரண்டு நாட்களில் இது இரண்டாவது முறையாகும்.
கடந்த புதன்கிழமை (ஜூலை 7) தேசியக் கூட்டணிக்கான ஆதரவை அம்னோ உச்சமன்றம் மீட்டுக் கொண்டு, மொகிதின் யாசின் பதவி விலக வேண்டும் என அறைகூவல் விடுத்தது.
அதைத் தொடர்ந்து வியாழக்கிழமை (ஜூலை 8) வெளியிட்ட அறிக்கையில் நம்பிக்கைக் கூட்டணியின் தலைவர்கள் மன்றம், நாடாளுமன்றப் பெரும்பான்யையை இழந்து விட்டதால் பிரதமர் பதவி விலக வேண்டும் என அறைகூவல் விடுத்தது.
அதைத் தொடர்ந்து நேற்று நம்பிக்கைக் கூட்டணி தலைவர்கள் மன்றம் இரண்டாவது முறையாகப் பிரதமரை பதவி விலகச் சொல்லி அறிக்கை விடுத்திருக்கிறது.