கிள்ளான் : “கொவிட்-19 பரவலால் மக்கள் முடங்கி இருப்பது ஒருபுறம் என்றால் வருமான பாதிப்பினாலும் வேலை இழப்பாலும் பொருளாதார பின்னடைவை எதிர்கொண்டு அல்லல்படுவது இன்னொரு புறமாக இருக்கிறது. இந்த இக்கட்டான நிலையில், கொரோனாவினால் இறப்பு நிகழும் குழும்பங்கள் சந்திக்கும் அவல நிலையால் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் நிலைகுத்தி நிற்கின்றன. எனவே, மத்திய-மாநில அரசுகள் முழு பொறுப்பேற்று இத்தகைய குடும்பங்களை அரவணைக்க வேண்டும்” என்று சிலாங்கூர் மாநிலத்தின் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் ஜி.குணராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
“கொரோனாவினால் இறந்தவர்களுக்கான இறுதி மரியாதை முதல் உடலை நல்லடக்கம் செய்வது அல்லது எரிப்பது வரை தேவையான அனைத்து ஏற்பாடுகளுக்கும் மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து சமூக நலத் திட்டத்தை மேற்கொள்ள வேண்டும். சிலாங்கூர் மாநிலத்தைப் பொறுத்தவரை மந்திரி பெசார் அமிருடின் ஷாரி அவர்கள், இதன் தொடர்பில் ஆக்கப்பூர்வமான முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளார். செலாயாங் மருத்துவமனை, சுங்கை பூலோ மருத்துவமனை, செர்டாங் மருத்துவமனைகளையும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றங்களையும் இணைத்து கொரோனா மரணம் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகிறார். இதன் தொடர்பில் அவர் ஓர் அறிக்கையையும் வெளியிட்டிருந்தார்” எனவும் குணராஜ் தெரிவித்தார்.
இது குறித்து அரசுகளின் சார்பில் ‘பேனல்’ (Panel) போன்ற அமைப்பு உருவாக்கப்பட்டால் அதில், சவப்பெட்டிகளைத் தயாரிக்கும் நிறுவனங்களைச் சேர்ந்தவர்களையும் இணைத்துக் கொண்டால், இந்த நடவடிக்கை இன்னும் சுலமாக நடந்தேறும் என்று குணராஜ் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
“மலாய் சமூகத்தில் கொரோனா மரணங்களை எதிர்கொள்ளும் குடும்ப உறுப்பினர்களுக்கு இஸ்லாமிய நல வாரியத்தின் சார்பில் அமரர் ஊர்தி வசதி உட்பட அனைத்து அனுகூலங்களும் அளிக்கப்பட்டு நல்லடக்க நிகழ்வுகள் சீராக நடைபெறுகின்றன. அதைப் போல சீன, இந்திய குடும்பங்களுக்கும் மத்திய, மாநில அரசுகள் உதவிக்கரம் நீட்ட வேண்டும். கொரோனா கால நெருக்கடி தீரும்வரை இதை நடைமுறைப்படுத்த வேண்டும்” என்றும் குணராஜ் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.