Home கலை உலகம் ராகா அறிவிப்பாளர்களுடன் சிறப்பு நேர்காணல் : பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலை!

ராகா அறிவிப்பாளர்களுடன் சிறப்பு நேர்காணல் : பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலை!

412
0
SHARE
Ad
ராகா வானொலி அறிவிப்பாளர்கள் – கோகுலன் – ரேவதி

கோலாலம்பூர் : கொவிட் தொற்று பரவல், நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை என மக்களின் வாழ்க்கைச் சூழல் மாறியிருக்கும் நிலையில், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணிபுரியும் அறிவிப்பாளர்களின் வாழ்க்கைச் சூழலும் மாறியிருக்கிறது.

நாட்டின் முதன்மைத் தமிழ் வானொலியான ராகாவின் அறிவிப்பாளர்களுடன் நடத்தப்பட்ட சிறப்பு நேர்காணலில் அவர்களின் வாழ்க்கைச் சூழலும் –  பணிகளும் -அன்றாட வாழ்க்கைச் சமநிலையும் எப்படி மாறியிருக்கின்றன என்பது குறித்து தங்களின் எண்ணங்களையும், அனுபவங்களையும் பகிர்ந்து கொள்கின்றனர்.

கேள்வி: ராகாவில் உங்களின் தற்போதையப் பணியைப் பற்றிச் சுருக்கமானப் பின்னணியைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்:

ரேவதி: நான் சுமார் 19 ஆண்டுகளாக ராகா அறிவிப்பாளராகப் பணியாற்றி வருகிறேன்.  தற்பொழுது ‘வணக்கம் ராகா’ மற்றும் ‘இன்னிக்கி என்ன கதை’ உள்ளிட்ட இரண்டு அங்கங்களைத் தொகுத்து வழங்குகிறேன். இரசிகர்களுக்கு விருப்பமானப் பாடல்களை ஒலிப்பரப்புதல், அவர்களை ஊக்குவித்தல், புதிய தகவல்களைப் பகிர்ந்துக் கொள்ளுதல் ஆகியவற்றின் மூலம் நான் அவர்களை மகிழ்வித்து வருகின்றேன்.

ராகா வானொலி அறிவிப்பாளர் ரேவதி
#TamilSchoolmychoice

கோகுலன்: நான் சுமார் 3 ஆண்டுகளாக ராகா அறிவிப்பாளராகப் பணியாற்றி வருகிறேன். தற்பொழுது நான் ‘வாங்க பழகலாம்’ எனும் அங்கத்தை இரவு 7 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை தொகுத்து வழங்குகிறேன்.

கேள்வி : முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமுலாக்கத்தின்போது வீட்டிலிருந்துப் பணிபுரிந்த உங்களின் அனுபவத்தைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

ரேவதி: ஒரு புதிய அனுபவமாக இருந்ததால், கடந்த ஆண்டு அமல்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது வீட்டிலிருந்து வேலைச் செய்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. தொழில்நுட்பத்தின் பயன்பாடு உட்பட பல படிப்பினைகளை அந்த அனுபவம் வழங்கியது. இருப்பினும், எனது நேயர்களிடம் உரையாடுவதையும் ஸ்டுடியோவிலிருந்துப் பணியாற்றுவதையும் நினைத்து நான் ஏங்கினேன்.

எப்போதும் என்னுடன் இருக்க விரும்பும் என் குழந்தைகளை நிர்வகிக்க வேண்டியிருந்ததால் வீட்டிலிருந்து வேலைச் செய்வது எனக்குச் சற்றுச் சவாலாக இருந்தது. இருப்பினும், வீட்டிலிருந்துப் பணிப்புரியும் போது மிகவும் ஆக்கப்பூர்வமாகச் செயல்படச், சவால்களைத் திறம்பட நிர்வகிக்கக் கற்றுக்கொண்டேன்.

ராகா வானொலி அறிவிப்பாளர் கோகுலன்

கோகுலன்: முதல் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையின்போது வீட்டிலிருந்து வேலைச் செய்ததைவிடத் தற்போது சிறப்பாக வீட்டிலிருந்துப் பணிப்புரிய முடிகின்றது என்றுதான் கூறுவேன்.

எனது விவேகக் கைத்தொலைப்பேசியின் முழுமையானப் பயன்பாட்டினாலும், ​​வீட்டிலுள்ள ஒரு எளிய மைக்ரோஃபோன் அமைப்பைக் கொண்டும் எனது நேயர்களுடன் தொடர்பில் இணைய முடிந்தது. நமக்குத் தேவையானவை ஏற்கனவே இணையத்தில் கிடைக்கப் பெறுவதால் அது மிகவும் எளிதாக  இருந்தது.

கேள்வி : நீங்கள் தற்பொழுது வீட்டிலிருந்துப் பணிபுரியும் தருணத்தில் உங்களுக்கு பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலை எவ்வகையில் அர்த்தமானது என்று கூறுங்கள்?

ரேவதி: ‘மனம் உண்டானால் மார்க்கம் உண்டு’ என்பதற்கு ஒப்ப அனைத்தும் சாத்தியம் என்றுதான் நான் கூறுவேன்.

கோகுலன்: எனது வீட்டுப் பால்கனியில் இருந்து அழகான இயற்கையை நான் இரசிக்க முடிந்ததால் புத்துணர்ச்சியூடன் பணிபுரிய முடிந்தது. புதிய சிந்தனைகளுடன் வீட்டிலிருந்து நிகழ்ச்சியை வழிநடத்தவும் முடிந்தது.

கேள்வி : வீட்டிலிருந்து வேலை செய்யும் போது பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலையைப் பராமரிக்க முயற்சிப்பதில் நீங்கள் சந்தித்த சில சவால்கள் யாவை? அச்சவால்களை நீங்கள் எவ்வாறு கையாண்டீர்கள் ?

ரேவதி: கனமழை, இடி, மின்னல் உள்ளிட்ட மோசமான வானிலை போன்ற இயற்கையைச் சார்ந்த நிகழ்வுகள் ஏற்படும்போது மிகவும் சவாலாக இருந்தது. சத்தம் காரணமாக நான் பதிவை இடைநிறுத்தம் செய்துவிட்டு மீண்டும் தொடர வேண்டியிருந்தது.

நான் அவர்களுக்கு உணவளிப்பது, அவர்களுடன் விளையாடுவது ஆகியவற்றை என் குழந்தைகள் விரும்பியதால் வீட்டிலிருந்துப் பணிப்புரிதல் எனக்குச் சவாலாக இருந்தது. நான் வீட்டிலிருந்து வேலைச் செய்கிறேன் என்பதை அவர்களால் புரிந்துக் கொள்ள முடியவில்லை.

எனவே, இடையூறுகள் ஏற்படும்போதெல்லாம் நான் பல முறைப் பதிவுச் செய்ய வேண்டியிருந்தது. அது மிகவும் சுமையாக இருந்தது. இருப்பினும், நான் மிகவும் பொறுமையாக இருக்கக் கற்றுக்கொண்டேன். கோவிட்-19 எனக்கு பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தது.

கோகுலன்: தொழில்நுட்பத்தின் உதவியுடன் சிறந்த ஒலித் தரத்துடன் காணொளியைத் தயாரிப்பதே நான் சந்தித்த முக்கியச் சவாலாகும்.

கேள்வி : வீட்டிலிருந்துப் பணிபுரியும் போது ஆரோக்கியமானப் பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலையை நிர்வகிக்க இரசிகர்கள் / ராகா கேட்பவர்களுக்குச் சில உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்துக் கொள்ள முடியுமா?

ரேவதி: வீட்டிலிருந்து வேலைச் செய்யும் போது ஆரோக்கியமானப் பணி-அன்றாட வாழ்க்கைச் சமநிலையை செயல்படுத்தச் சரியான நேரத்தில் வேலை செய்வதை உள்ளடக்கிய நேரம் நிர்வகிப்பு மிகவும் முக்கியமானக் கூறாகும்.

அதுமட்டுமின்றி, ஒரு நாளைக்கு முன்பு வேலையைத் திட்டமிடுதலின் வழி நேர விரயத்தைத் தவிர்க்க முடியும். மிச்சப்படுத்திய அந்த நேரத்தை நம் குடும்பத்தினருக்கும் நமக்கும் பயனுள்ள வழியில் செலவிடலாம். சில விஷயங்களை எளிதாகவும் விரைவாகவும் செய்வதற்கானப் புதிய முறைகளையும் நாம் கற்றுக்கொள்ளலாம்.

கோகுலன்: வீட்டிலிருந்து வேலைச் செய்வதை அனுபவித்து மகிழுங்கள். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைச் செயல்படுத்த நாம் சரியான நேரத்திற்கு உறங்குவதையும், ஓய்வெடுப்பதையும்  நன்கு உடற்பயிற்சி செய்வதையும் உறுதிப்படுத்த வேண்டும்.