Home நாடு சிலாங்கூர் இந்தியர் ஆட்சிக் குழு : பிகேஆர் கட்சிக்கா? மீண்டும் ஜசெகவுக்கா?

சிலாங்கூர் இந்தியர் ஆட்சிக் குழு : பிகேஆர் கட்சிக்கா? மீண்டும் ஜசெகவுக்கா?

787
0
SHARE
Ad
செந்தோசா தொகுதியில் வெற்றி பெற்ற குணராஜ்

ஷா ஆலாம் : 6 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் முடிவடைந்து அடுத்த கட்டமாக மந்திரி பெசார்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படும் படலங்கள் தொடங்கியுள்ளன.

சிலாங்கூர் மாநிலத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற ஒற்றுமை அரசாங்கம் தவறிவிட்டது. மொத்தமுள்ள 56 தொகுதிகளில் 34 தொகுதிகளில் ஒற்றுமை அரசாங்கம் வெற்றி பெற்றுள்ளது. 12 தொகுதிகளில் போட்டியிட்ட அம்னோ 2 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கப் போகும் கட்சி எது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2008 பொதுத் தேர்தலில் முதன் முதலில் சிலாங்கூர் மாநிலத்தைக் கைப்பற்றியபோது பிகேஆர் கட்சி சார்பில் டாக்டர் சேவியர் ஜெயகுமார் இந்தியர் பிரதிநிதியாக ஆட்சிக் குழுவில் இடம் பெற்றார்.

#TamilSchoolmychoice

பின்னர் 2013 பொதுத் தேர்தலில் இந்தியர்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி ஜசெகவுக்கு கைமாறியது. கணபதி ராவ் நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2018 பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பிகேஆர் கட்சிக்கு இந்தியர்களுக்கான ஆட்சிக் குழு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மீண்டும் ஜசெகவுக்கே அந்தப் பதவி வழங்கப்பட்டு கணபதி ராவ் தொடர்ந்து ஆட்சிக் குழு உறுப்பினராகச் செயல்பட்டார்.

இந்த முறை பிகேஆர் கட்சிக்கு இந்தியர் சார்பு ஆட்சிக் குழு உறுப்பினர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. செந்தோசா தொகுதியில் அபார வெற்றி பெற்ற டாக்டர் குணராஜ் ஆட்சிக் குழு உறுப்பினராவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிகேஆர் சார்பில் போட்டியிட்ட மற்றொரு இந்திய வேட்பாளரான தீபன் புக்கிட் மெலாவாத்தி தொகுதியில் தோல்வியடைந்தார்.

ஜசெக சார்பில் 3 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றி பெற்றுள்ளனர். புக்கிட் காசிங் தொகுதியில் ரிஷ்யாகரன், பந்திங் தொகுதியில் பாப்பாராய்டு, கோத்தா கெமுனிங் தொகுதியில் பிரகாஷ் சம்புநாதன் ஆகியோரே அந்த மூவர். இவர்களில் ரிஷ்யாகரன் கடந்த இரண்டு தவணைகளாக சட்டமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்பதால் ஜசெக சார்பில் இந்திய ஆட்சிக் குழு உறுப்பினர் என்பது முடிவானால், அவருக்கே முதல் வாய்ப்பு கிட்டலாம் என்றும் கூறப்படுகிறது.