கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை ஜூலை 20 வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மொத்தம் 12,366 புதிய தொற்றுகள் பதிவாகியிருக்கின்றன.
நாட்டில் தொடர்ந்து கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அளவில் தொற்றுகள் பதிவாகி வருகின்றன. நேற்றை விடக் கூடுதலாக 2 ஆயிரம் தொற்றுகள் இன்று அதிகரித்திருக்கின்றன.
இன்றைய எண்ணிக்கையோடு சேர்ந்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 939,899 ஆக உயர்ந்திருக்கிறது.
இன்று வரையிலான ஒரு நாளில் நாடு முழுமையிலும் கொவிட் தொற்று மரணங்கள் 93 ஆகப் பதிவாகியிருக்கின்றன. நேற்றைய எண்ணிக்கையான 129-ஐ விட இன்றைய எண்ணிக்கை குறைவாகும்.
தொற்று பீடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து இன்று 133,703 ஆக உயர்ந்தது.
மேலும் 924 பேர் நாடு முழுவதிலும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 424 பேர் சுவாசக் கருவிகளின் உதவியோடு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இன்றைய ஒருநாள் மரணங்களைத் தொடர்ந்து நாட்டில் பதிவாகியிருக்கும் மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 7,241 ஆக உயர்ந்தது.
இன்றைய ஒருநாள் தொற்றுகளின் எண்ணிக்கையான 12,358 -ஐ சேர்த்து நாட்டில் இதுவரை பதிவான மொத்த தொற்றுகளின் எண்ணிக்கை 939,899 ஆக உயர்ந்திருக்கிறது.
மொத்தம் பதிவான 12,366 தொற்று சம்பவங்களில் 12,358 தொற்றுகள் உள்நாட்டிலேயே பரவியதாகும். 8 தொற்றுகள் வெளிநாட்டிலிருந்து திரும்பியவர்களால் பரவியதாகும்.
கொவிட் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை ஒரு நாளில் 7,567- ஆக பதிவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து இதுவரையில் தொற்றிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 798,955 -ஆக உயர்ந்திருக்கிறது.
மாநிலங்களைப் பொறுத்தவரையில் முதல் இடத்தில் வழக்கம்போல் சிலாங்கூர் இருக்கிறது. 5,524 தொற்றுகளை சிலாங்கூர் பதிவு செய்திருக்கிறது.
சிலாங்கூருக்கு அடுத்த நிலையில் 1,580 தொற்றுகளோடு கோலாலம்பூர் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.