Home நாடு லெம்பா பந்தாய் : பாஹ்மி பாட்சிலை எதிர்த்து களமிறங்குவாரா தெங்கு சாப்ருல்?

லெம்பா பந்தாய் : பாஹ்மி பாட்சிலை எதிர்த்து களமிறங்குவாரா தெங்கு சாப்ருல்?

649
0
SHARE
Ad
பாஹ்மி பாட்சில் – தெங்கு சாப்ருல்

கோலாலம்பூர் : 15-வது பொதுத் தேர்தல் எப்போது நடைபெறலாம் என்பது இன்னும் தெரியவில்லை. இருப்பினும் ஒருசில நாடாளுமன்றத் தொகுதிகளில் இப்போதே அரசியல் பரபரப்புத் தீ பற்றிக் கொண்டு பரவி வருகின்றது.

அத்தகைய தொகுதிகளில் ஒன்று லெம்பா பந்தாய். கடந்த சில தவணைகளாக பிகேஆர் கட்சி வசம் இருக்கும் தொகுதி. பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவு இயக்குநர் பாஹ்மி பாட்சில் 2018 பொதுத் தேர்தலில் இந்தத் தொகுதியைக் கைப்பற்றினார்.

மீண்டும் பாஹ்மி பாட்சிலே லெம்பா பந்தாய் தொகுதியைத் தற்காப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை எதிர்த்து, நிதியமைச்சர் தெங்கு சாப்ருல் அப்துல் அசிஸ் பெர்சாத்து கட்சியின் சார்பாக இந்தத் தொகுதியில் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் எழுந்திருக்கின்றன.

அம்னோ தலைவரின் கருத்து

#TamilSchoolmychoice

லெம்பா பந்தாய் அம்னோ தொகுதி தலைவரும் முன்னாள் கூட்டரசுப் பிரதேச அமைச்சருமான தலைவர் ராஜா நோங் சிக் லெம்பா பந்தாய் தொகுதியில் தனக்கு வாய்ப்பு வழங்கப்படாவிட்டால் பரவாயில்லை, ஆனால் இளைஞர்களான வேட்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டால் தான் ஒதுங்கிக் கொண்டு ஆதரவு தரத் தயாராக இருப்பதாக அண்மையில் அறிவித்திருக்கிறார்.

ராஜா நோங் சிக் – லெம்பா பந்தாய் அம்னோ தலைவர்

எனினும் அந்த வேட்பாளர் அம்னோ லெம்பா பந்தாய் தொகுதியைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் இல்லாவிட்டால் சுயேச்சை வேட்பாளராக நானே போட்டியிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார் ராஜா நோங் சிக்.

தெங்கு சாப்ருல் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிடலாம் என்ற ஆரூடங்கள் குறித்தும் ராஜா நோங் சிங் கருத்துரைத்தார். லெம்பா பந்தாய் தொகுதியிலுள்ள பங்சார் பகுதியில் பிறந்து வளர்ந்தவரான தெங்கு சாப்ருல் பொருத்தமான வேட்பாளர்தான் என்றாலும்,அவர் தேசிய முன்னணி வேட்பாளராகப் போட்டியிட்டால் மட்டுமே ஆதரவு தருவோம் என ராஜா நோங் சிக் கூறினார்.
2013, 2018 இரண்டு பொதுத் தேர்தல்களில் லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்ட ராஜா நோங் சிக் இருமுறையும் தோல்வி கண்டார்.

2013-இல் அன்வார் இப்ராகிமின் மகள் நூருல் இசாவிடமும் 2018-இல் பிகேஆர் வேட்பாளர் பாஹ்மி பாட்சிலிடமும் ராஜா நோங் சிக் தோல்வி கண்டார்.

“அம்னோ, லெம்பா பந்தாய் தொகுதியில் வெற்றி பெற வேண்டுமானால், பாஸ் கட்சியுடன் ஒத்துழைப்பை நாட வேண்டும். இல்லாவிட்டால் தொகுதியைக் கைப்பற்றுவது கடினம். முவாபாக்காட் அடிப்படையில் இரு கட்சிகளும் ஒத்துழைத்தால்தான் வெற்றி பெற முடியும். பாஸ் கட்சிக்கு இங்கே வலுவான ஆதரவுத் தளம் இருக்கிறது” என்ற இன்னொரு முக்கியக் கருத்தையும் கூறியிருக்கிறார் ராஜா நோங் சிக்.

தெங்கு சாப்ருல் என்ன முடிவெடுப்பார்?

தற்போது எந்தக் கட்சியிலும் சேராமல் செனட்டராக இயங்குகிறார் தெங்கு சாப்ருல். மொகிதின் யாசின் தலைமைத்துவத்திற்கும், பெர்சாத்து கட்சிக்கும் இணக்கமாக செயல்படுகிறார் தெங்கு சாப்ருல்.

மொகிதினின் அமைச்சரவையில் அடாம் பாபா (சுகாதார அமைச்சர்) போன்ற அமைச்சர்கள் கடும் கண்டனங்களை எதிர்நோக்கிய வேளையில், எந்தவித அரசியல் பின்னணியும் இல்லாமல் அரசாங்க – அரசியல் களத்திற்குள் வந்து கலக்கிக் கொண்டிருக்கிறார் தெங்கு சாப்ருல்.

நாடாளுமன்ற விவாதங்களில் திறமையாக செயல்படுகிறார். எதிர்க்கட்சி தலைவர்களையும் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் பெற்றுக் கொள்கிறார். சிக்கலான, இக்கட்டான சூழலில் நிதியமைச்சைக் கையாண்டு வரும் அவர்மீது இதுவரையில் அவர்மீது பெரிய அளவில் குறைகூறல்கள் எழவில்லை.

செனட்டராக இருந்து கொண்டே அவர் தனது பணிகளைத் தொடர்வாரா?

அல்லது தன்னை நிதியமைச்சராக நியமித்த மொகிதின் யாசினுக்கு ஆதரவு தர, பெர்சாத்து கட்சியில் இணைந்து, லெம்பா பந்தாய் தொகுதியில் போட்டியிட்டு தேர்தல் அரசியல் களத்திற்குள் காலடி வைப்பாரா?

-இரா.முத்தரசன்