அவருக்கான தடுப்புக் காவல் எதிர்வரும் ஜூலை 27-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. 45 வயதான அவர் இணையம்வழி ஆபாசப் படங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டார், அந்த வணிகத்தில் ஒரு முக்கிய நபராக செயல்பட்டார் என்ற காரணங்களுக்காக அவரை கைது செய்திருப்பது இந்திப் படவுலகில் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியிருக்கிறது.
காரணம் இதுநாள் வரையில் திரையுலக வட்டாரங்களில் பெரிய தொழிலதிபராக அறியப்பட்டவர் ராஜ் குந்த்ரா.
ஜாமீனில் வெளிவருவதற்காக ராஜ் குந்த்ரா செய்திருந்த விண்ணப்பத்தை நீதிமன்றம் நிராகரித்திருக்கிறது.
ஆபாசப் படங்களைத் தயாரிப்பதன் மூலம் ஈட்டிய வருமானத்தைக் கொண்டு அவர் அந்தப் பணத்தை சூதாட்டங்களுக்குப் பயன்படுத்தினார் எனவும் காவல் துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இதற்கிடையில் ஷில்பா ஷெட்டியையும் காவல் துறையினர் விசாரித்து அவரிடம் இருந்து வாக்கு மூலம் பெற்றுள்ளனர்.
ஷில்பா ஷெட்டி இந்திய அளவில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர். யோகா பயிற்சிகள் மூலம் உடலைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்கும் இவருக்கும் ராஜ் குந்த்ராவுக்கும் இரண்டு பிள்ளைகள் உண்டு.
அவரது கணவரான ராஜ் குந்த்ரா சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பாக கிரிக்கெட் போட்டிகளில், கிரிக்கெட் போட்டிகளை முன்கூட்டியே நிர்ணயிக்கும் சூதாட்ட விவகாரங்களில் ஈடுபட்டார் என குற்றம் சாட்டப்பட்டார்.
அதைத் தொடர்ந்து அவர் கிரிக்கெட் தொடர்பான எல்லாவிதமான நடவடிக்கைகளிலும் ஈடுபடுவதில் இருந்து தடை விதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து ஆபாச படங்கள் தயாரிக்கும் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.
போதிய ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அதன் தொடர்பிலேயே அவரைக் கைது செய்திருப்பதாகவும் மும்பை காவல் துறையினர் தெரிவித்திருக்கின்றார்.