Home நாடு பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்

பினாங்கு இந்து அறப்பணி வாரிய இயக்குநர் இராமச்சந்திரன் மீது ஆயுதத் தாக்குதல்

902
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன் : பினாங்கு இந்து அறப்பணிவாரிய  நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன்,   நேற்று வெள்ளிக்கிழமை ஜூலை 23-ஆம் தேதி மாலை 7 மணியளவில் அவரது வீட்டின்முன் மூன்று அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கப்பட்டுள்ளார்.

அவர் தனது காரில் இருந்து இறங்கியவுடன், அவரை அடையாளம் தெரியாத நபர்கள் தாக்கியுள்ளனர். 70 வயதான டத்தோ இராமாவின் உடலில்  ஆழமான வெட்டுக் காயங்கள் பதிந்துள்ளன. தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அவரின் உடல்நிலை மோசமாக இல்லை என்றும் உயிருக்கு ஆபத்தில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பினாங்கு துணை முதல்வரும் பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவருமான பேராசிரியர் டாக்டர் பி.இராமசாமி இந்த விவரங்களை தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டார்.

#TamilSchoolmychoice

நேற்று இரவு 10 மணியளவில் அவரைப் பார்க்கச் சென்றதாகவும் அவர் சுயநினைவுடன் இருந்ததாகவும் இராமசாமி மேலும் தெரிவித்தார்.

தற்போது இராமச்சந்திரன் செபராங் ஜெயா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல் துறையில் அவரின் குடும்பத்தினர் புகார் செய்திருக்கின்றனர்.

இந்தத் தாக்குதல் குறித்தக் கருத்துரைத்த இராமசாமி “பினாங்கு மாநிலத்தில் இந்தியர்களுக்கு சேவை செய்வதற்கான முன்னணி அமைப்பாக அறப்பணி வாரியத்தை வலுப்படுத்துவதில் இராமச்சந்திரன் தனது நிலைப்பாட்டில் சிறந்து விளங்கினார். டத்தோ இராமாவிற்கு எதிரான தாக்குதல் பினாங்கு அரசாங்கத்திற்கு எதிரான தாக்குதலாகும். பினாங்கு அரசாங்கத்தின் பிரதிநிதியாக நான் இந்த விஷயத்தில் தீவிரம் காட்டுவேன். தாக்குதலுக்குப் பின்னால் இருக்கும் கோழைகளுக்குப் பயப்படப்போவதில்லை என நான் பினாங்கு இந்தியர்களுக்கு உறுதியளிக்கிறேன்” என்று தெரிவித்தார்.