கோலாலம்பூர் : தற்போது நாட்டில் நிகழ்ந்து வரும் அரசியல் சர்ச்சைகளில் நடுநாயகமாகத் திகழ்ந்து வருபவர் பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம்.
இன்னொரு காரணத்திற்காகவும் அவர், செய்திகளில், அதுவும் “வீடுகள் விற்பனை” தொடர்பான செய்திகளில் இடம் பெறத் தொடங்கியிருக்கிறார்.
புக்கிட் சிகாம்புட்டிலுள்ள தனது வீட்டை 12 மில்லியன் ரிங்கிட்டுக்கு விற்பனை செய்வதற்கு பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் விளம்பரப்படுத்தியுள்ளதுதான் ஊடகங்களில் அவரைப் பற்றிய இன்னொரு செய்தியாகியுள்ளது.
முதலில் 15 மில்லியன் ரிங்கிட் என விலை நிர்ணயம் செய்யப்பட்ட இந்த இல்லம் தற்போது 12 மில்லியனாகக் குறைக்கப்பட்டிருக்கிறது.
தற்போது அன்வார், காஜாங் சுங்கை லோங் வீடமைப்பில் உள்ள வீட்டில் தங்கியிருக்கிறார் என்பதால் இந்த சிகாம்புட் இல்லம் விற்கப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அன்வார் இந்த இல்லத்தை 2005-ஆம் ஆண்டு வாக்கில் 4.5 மில்லியன் ரிங்கிட் விலையில் வாங்கினார். இப்போதைக்கு 12 மில்லியன் ரிங்கிட் விலைக்கு விற்பதாக விளம்பரப்படுத்தியுள்ளார்.
துணைப் பிரதமராக இருந்த காலத்தில் புக்கிட் டாமன்சாராவில் வசித்து வந்த அவர் தனது புக்கிட் டாமன்சாரா வீட்டை விற்று விட்டு அதிலிருந்து கிடைத்த தொகையில் இந்த சிகாம்புட் வீட்டை வாங்கினார்.
2005 முதல் இந்த சிகாம்புட் இல்லத்தில் அவரின் குடும்பத்தோடு வசித்து வந்தார். 2006-ஆம் ஆண்டில் அவர் சிறையிலிருந்து வெளியேறியது முதல் பல அரசியல் சம்பவங்கள் நிகழ்ந்த இடமாகவும், பல அரசியல் கூட்டங்கள் நடைபெற்ற மையமாகவும் அவரின் சிகாம்புட் இல்லம் திகழ்ந்தது.